‘பி.எல்.கே.என்.னுக்குச் செலவாகும் RM700 மில்லியனை, ஓராண்டு பட்டப்படிப்புக்குச் செலவளிக்கலாம்’ , சதிக்

2018-ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) நிர்வாகத்தால் இரத்து செய்யப்பட்டப் பின்னர், தேசியச் சேவை பயிற்சி திட்டத்தை (பி.எல்.கே.என்) மீண்டும் நிறுவுவதற்கான தற்போதைய அரசாங்கத்தின் முன்மொழிவை மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையத் சதிக் சையத் அப்துல் ரஹ்மான் நிராகரித்தார்.

சையத் சதிக்கின் கூற்றுப்படி, ஆண்டுக்குச் சுமார் RM 700 மில்லியன் செலவாகும் என்பதால், பி.எச். பி.எல்.கே.என். திட்டத்தை நிறுத்துயது.

“அதிகமான செலவு. அதுமட்டுமின்றி, நேரடி பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தங்கள் அவரவர் கூட்டாளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன! நேரடியாக அம்னோ தலைவர்கள்தான் இலாபமடைகின்றனர்,” என்று அவர் தனது கீச்சகம் மூலம் கூறினார்.

பி.எல்.கே.என்.-ஐ புதுப்பிக்கும் திட்டத்திற்குப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பிற்கு நன்றி தெரிவித்த, அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லானின் கூற்றுக்கு, முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான சதிக் இவ்வாறு சொன்னார்.

முன்னதாக, அரசாங்கத்தின் பிரச்சாரப் பிரிவாகக் கருதப்படும் சிறப்பு விவகாரத் திணைக்களத்தைப் (ஜாசா) புதுப்பிக்க RM85 மில்லியனை ஒதுக்கியதற்காக அரசாங்கம் விமர்சிக்கப்பட்டது.

“பி.எல்.கே.என். பயிற்சியாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கானச் செலவு, பொது பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்பிற்கான செலவாகும்.

“ஜாசா-வுக்கு RM85 மில்லியனைக் கொடுத்ததே போதுமானது, இப்போது பி.எல்.கே.என்.னுக்கு மற்றொரு RM700 மில்லியனா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.