கோவிட் 19 : இன்று 1,109 புதியத் தொற்றுகள், 2 இறப்புகள்

நாட்டில், இன்று நண்பகல் வரையில், 1,109 கோவிட் -19 புதியத் தொற்றுகள் பதிவான நிலையில், 1,148 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சபாவில் அதிக எண்ணிக்கையிலான (39.8 %) புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, அதற்கடுத்த நிலையில் கிள்ளான் பள்ளத்தாக்கு (30.7 %) மற்றும் நெகிரி செம்பிலானில் (3.7%) எனப் புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

இன்று, 2 மரணங்கள் பதிவாகியுள்ளன, சபா மற்றும் லாபுவானில் தலா 1.

புத்ராஜெயா, மலாக்கா, திரெங்கானு, லாபுவான், சரவாக் மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவசரப் பிரிவில் 113 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 41 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

441 புதிய சம்பவங்களுடன், சபா அத்தொற்றுக்கு அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலமாகத் திகழ்கிறது.

சபாவை அடுத்து சிலாங்கூரில் 175 புதியத் தொற்றுகள் பதிவாகியுள்ளன.

சபா மற்றும் சிலாங்கூரை அடுத்து, மாநிலம் வாரியாகப் புதியத் தொற்றுகளின் எண்ணிக்கை :-

நெகிரி செம்பிலானில் 167, கோலாலம்பூரில் 154, பினாங்கில் 64, பேராக்கில் 48, ஜொகூரில் 33, கெடாவில் 25, கிளந்தானில் 5 மற்றும் பஹாங்கில் 3.

மேலும் இன்று, 4 புதியத் திரளைகள் கண்டறியப்பட்டுள்ளது. அவை :-

ஜாலான் ஹருண் திரளை – நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டம்; பூத்தே லாமா கட்டுமானத் தளத் திரளை – கோலாலம்பூர், லெம்பா பந்தாய் மாவட்டம்; பெரிங்கின் திரளை – பினாங்கு, நோர்த் ஈஸ்ட், தென் செப்ராங் பிரை, மத்திய செப்ராங் பிரை மாவட்டங்கள்; ஜாலான் துவாரான் திரளை – சபா, கோத்த கினபாலு, பெனம்பாங், துவாரான் மாவட்டங்கள்.