பெரும்பான்மை இல்லை என்று நிரூபிக்கப்பட்டால், அன்வார் இராஜினாமா செய்வார் – எம்.பி.க்கள் உறுதிப்படுத்தினர்

மக்களவையில் பெரும்பான்மையினரின் ஆதரவு இருப்பதை நிரூபிக்கத் தவறினால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார் என்று நான்கு எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

மலேசியாகினியிடம் பேசுகையில், தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த மறுத்த அவர்கள், பி.கே.ஆர் மற்றும் டிஏபி பிரதிநிதிகளாவர்.

“உண்மைதான், உண்மைதான். (அன்வர்) வியாழக்கிழமை எங்களிடம் தெரிவித்தார்,” என்று பி.கே.ஆர். எம்.பி. ஒருவர் கூறினார்.

மக்களவையில், கொள்கை அளவில் 2021 வரவுசெலவுத் திட்டம் இரண்டாவது வாசிப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர், எதிர்க்கட்சி எம்.பி.க்களைச் சந்தித்தபோது அன்வர் அவ்வாறு உறுதியளித்தார் என அவர் சொன்னார்.

2021 வரவுசெலவுத் திட்டத்திற்கு, எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பிரிதிசை வாக்களிக்க வேன்டாம் என அன்வர் அறிவுறுத்தியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

குரல் வாக்கெடுப்புக்கு மாறாக – எந்தக் குழு அதிகக் குரல் கொடுக்கிறது என்பது சபாநாயகரால் தீர்மானிக்கப்படுகிறது – தற்போதுள்ள ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அளிக்கும் ஆதரவின் மூலம் தொகுதி வாக்கு அல்லது பிரிதிசை வாக்கு கணக்கிடப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் ஆதரவு பிரதமர் முஹைதீன் யாசினுக்கு இருக்கிறதா, இல்லையா எனும் நிலைப்பாட்டையும் இது வெளிப்படுத்தும்.

பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அன்வரின் அறிவுறுத்தலுக்குக் கீழ்ப்படிந்தனர், ஆனால் பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், அவரது நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

நேற்று, அன்வரின் அலுவலகம் வெளியிட்டதாகக் கூறப்படும் கடிதம் ஒன்று பரவலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. தனக்கான ஆதரவை நிரூபிக்கத் தவறினால், தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் உறுதியளித்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தக் கடிதம் பொய்யானது, அன்வரின் அலுவலகம் அதனை வெளியிடவில்லை என்று பின்னர் உறுதி செய்யப்பட்டது.

அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், சில எம்.பி.க்கள் அன்வர் அவ்வாறு கூறியது உண்மைதான் என்று தெரிவித்தனர்.

தனக்கான ஆதரவை நிரூபிக்கவும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தை தூக்கியெறியவும் அன்வர் ஒரு வாரம் அவகாசம் கேட்டார் என அவர்கள் கூறினர்.

அதில் தோல்வி கண்டால், பி.எச். தலைவர் பதவியை இராஜினாமா செய்வதாக அன்வர் உறுதியளித்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.