‘பிரதமர் ஜி.இ.க்காக காத்திருக்கத் தேவையில்லை, நம்பிக்கை வாக்கெடுப்பின் வழி  மக்கள் ஆணையைத் திருப்பி கொடுங்கள்’

பிரதமர் முஹைதீன் யாசின், கோவிட் -19 தொற்றுநோய் முடிவடையும் வரை காத்திருந்து, பொதுத் தேர்தலை (ஜிஇ) நடத்தி, மக்களின் ஆணையைத் திருப்பித் தர வேண்டிய அவசியமில்லை, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் அதனைச் செய்யலாம் என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரீம் கூறினார்.

நம்பிக்கையுள்ள அல்லது நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, நாளைய மக்களவை கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் ஏற்கனவே உள்ளது என்று ஹசான் கூறினார்.

“ஆனால், வரிசையில் அது மிகவும் கீழே உள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

காமன்வெல்த் நாடாளுமன்ற ஜனநாயக மாநாட்டின் அடிப்படையில், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு, எதிர்க்கட்சி அல்லது அரசாங்க எம்.பி. என யார் கொண்டு வந்தாலும் அதற்கு செவிசாய்க்க வேண்டும் என்றார் அவர்.

“(இதுவும் இருக்க வேண்டும்) அமர்வின் முதல் நிகழ்ச்சி நிரலாக முன்னுரிமை அளிக்கப்பட்ட வேண்டும், ஏனெனில் இதுபோன்ற பிரேரணை பிரதமர் மற்றும் ஆளும் அரசாங்கத்தின் நிலை மற்றும் நியாயத்தன்மையுடன் தொடர்புடையது,” என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று, பெர்சத்து கட்சி மாநாட்டில் பேசிய முஹைதீன், ஜி இ15 நடத்த, மக்களவையில் 2021 வரவுசெலவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

முஹைதீன் பொதுத் தேர்தலை நடத்த விரும்புவதாகவும், ஆனால் கோவிட் -19 தொற்றுநோய் அதற்கு தடையாக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதனைச் சுட்டிகாட்டிய ஹசான், “முஹைதீன் முக்கியப் பிரச்சினையைத் தவிர்க்க முயற்சிக்கிறார், அதாவது அவரது நிர்வாகத்தின் நியாயத்தன்மை,” என்றார்.

மில்லியன் கணக்கான மக்களை உள்ளடக்கிய ஜிஇ-உடன் ஒப்பிடும்போது, ​​நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் மட்டுமே ஈடுபடுவர் என்று அவர் கூறினார்.

“தற்போதைய சூழ்நிலையில் ஜிஇ பொருத்தமானது அல்ல, கோவிட் எப்போது குணமடையும் என்று தெரியவில்லை. ஜிஇயை அவசரப்பட்டு வைக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய பிரச்சினை பிஎச் மற்றும் பெஜுவாங் எம்.பி.க்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு கோரிக்கையாகும்,” என்று அவர் கூறினார்.

2021 வரவுசெலவுத் திட்டத்தை வைத்து, முஹைதீனுக்கான ஆதரவை அளவிட எதிர்க்கட்சி விரும்பவில்லை, ஆனால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் “அவமதிக்கப்பட்டால்” வேறு வழியில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“ஆனால் முஹைதீன் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை விரும்பவில்லை என்றால், நம்பிக்கை வாக்கெடுப்பைத் தேர்வு செய்ய வேண்டும். அவருக்குப் போதுமான எண்ணிக்கை உள்ளது என்றால், அவரது அரசாங்கம் முறையானது, அவரை வீழ்த்துவதற்கு இனி பட்ஜெட் பிரச்சினை இல்லை,” என்று அவர் தெரிவித்தார்.