`வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கம் தாமதம்’

கடிதம் | இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையில் உள்ள சிக்கல்களை ஆராய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது.

ஆனால், சமீபத்தில்தான் ஒரு பெரிய உற்பத்தியாளர், தங்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் திருப்திகரமான வாழ்க்கை வசதிகளை வழங்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அந்நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்தது.

மலேசிய மருத்துவச் சங்கம் (எம்.எம்.ஏ.) வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை ஆராய்வதற்கான அவசியத்தையும் அவசரத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், இப்போதுதான் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் மில்லியன் கணக்கான ஆவணப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணமற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர், மேலும் கோவிட் -19 பரவுவதைத் தடுப்பதில் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், அதிகாரிகள் அதில் தீவிரம் காட்டவில்லை.

கோவிட் -19 தொற்றுக்காக, வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் திரையிடுவது ஒரு முக்கியமான செயலாகும், ஆனால் அவர்கள் மீண்டும் நெருக்கடியான ஒரு வாழ்க்கைச் சூழலில்தான் வாழ வேண்டுமானால் அவர்களைச் சோதிப்பதில் சிறிதும் அர்த்தமில்லை.

இப்போது சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில், கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளதால், இங்கு வெளிநாட்டு தொழிலாளர்களைத் திரையிட முன்னுரிமை அளிப்பது ஒரு நல்ல நடவடிக்கையாக இருந்தாலும், அதேசமயம் அரசாங்கம் அவர்கள் வாழ்க்கை நிலைமைகளைச் சரிபார்க்க, ஒரு முறையான அணுகுமுறையை எடுக்க வேண்டும், நாடு முழுவதும் அவர்கள் தங்குமிடங்கள், கடை வீடுகள், குடியிருப்புகள் மற்றும் மொட்டை மாடி வீடுகள் என அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

சிறிய வீடுகளில் 10-ல் இருந்து 30 பேர் வரையில் பகிர்ந்து தங்குவதால், இங்குச் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க இயலாது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாதவரை, கோவிட் -19 தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எம்.எம்.ஏ. எச்சரிக்கிறது. சிங்கப்பூரில் கோவிட் -19 பாதிப்புகளில் 90 சதவீதம் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மலேசியாவில், நாடு முழுவதும் பல துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் நாங்கள் இது குறித்து கவலைப்படுகிறோம்.

தொழிலாளர் தங்குமிடத்தில் புதிய விதிமுறைகளை உறுதி செய்வதற்கான செலவு, பல முதலாளிகளுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பதால், அரசாங்கம் அதில் நெருக்கமாக ஈடுபட்டு தீர்வு காண வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

கடும் அபராதம் விதிக்கப்பட்டால் (ஒரு தொழிலாளிக்கு RM50,000), பல முதலாளிகளால் தேவையான மேம்பாடுகளைச் செய்ய முடியாமல் போகலாம், அல்லது தொடர்ந்து தங்கள் தொழிலாளர்களை வேலையில் வைத்துக் கொள்ள முடியாமல் போகலாம். பிறகு என்ன நடக்கும்?

பல வணிகங்கள் மூடப்பட்டுவிடும், தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். இந்நிலையில் தொழிலாளர்களைக் கவனித்துக்கொள்வது யார் பொறுப்பு?

ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்களின் பிரச்சினையும் நேர்த்தியாக கையாளப்பட வேண்டும்.

இதற்கு, அந்தக் குழுவினர் ஒத்துழைக்க அரசாங்கம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், இல்லையேல் சிலர் அதிகாரிகளுக்குப் பயந்து ஓடிவிடுவர், பிறகு கோவிட் -19 தொற்றுக்காக அவர்களைத் திரையிடுவது ஒரு சவாலாக மாறிவிடும்.


டாக்டர் சுப்ரமணியம் முனியாண்டி , எம்.எம்.ஏ. தலைவர்