அஸ்ராஃப் : பெர்சத்துவும் முஹிதீனும் ‘அம்னோவுக்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது’

பிரதமர் முஹைதீன் யாசினும் அவரது தலைமையிலான பெர்சத்து கட்சியும் ‘அம்னோவுக்குத் திரும்ப வேண்டிய நேரம் இது’, என்று அம்னோ இளைஞர் தலைவர் அஸ்ராஃப் வாஜ்டி டுசுகி கூறினார்.

“முஹைதீன் பரிந்துரைத்தபடி, ‘உம்மா’க்களின் ஒன்றிணைப்பு வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய, பிரதமர், பெர்சத்து உறுப்பினர்களுடன் அம்னோவிற்குத் திரும்ப வேண்டிய நேரம் இது என்று நான் கருதுகிறேன்,” என்று இன்று அவர் ‘சீனார் ஹரியான்’ பத்திரிக்கையில் எழுதியுள்ளார்.

“பெர்சத்து தலைமையின் பெரும்பகுதி அம்னோவிலிருந்து வந்தது. உண்மை என்னவென்றால், பெர்சத்துவின் கொள்கை, நோக்குநிலை மற்றும் சித்தாந்தம் எல்லாம் ஒன்றுதான், அம்னோவிலிருந்து வேறுபட்டவை அல்ல.

“அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற சில கட்சிகள், மலாய்க்காரர்களின் மிகப்பெரிய கட்சியான அம்னோவுக்குத் திரும்பியது என்பதை வரலாறு நிரூபிக்கிறது. உதாரணத்திற்கு, செமாங்காட் 46, பார்ட்டி கெமெர்டேக்காஆன் மலாயா (ஐ.எம்.பி.) போன்றவை,” என்றார் அவர்.

அஸ்ராஃப் பெர்சத்து தலைவர்களை அம்னோவுக்குத் திரும்ப அழைப்பது இது முதல் தடவையல்ல. இதற்கு முன்பு, இதேபோன்று பல முறை அழைத்திருக்கிறார்.

நஜிப் தலைமையிலான அம்னோவை, 14-வது பொதுத் தேர்தலில் வீழ்த்துவதே பெர்சத்துவின் தலையாய இலக்காக இருந்தது.

“நஜிப் இப்போது அம்னோ தலைமையில் இல்லை, எனவே பெர்சத்துவின் போராட்டம் இப்போது பொருத்தமாக இருக்காது.

“எனவே, அவர்கள் (பெர்சத்து) கட்சியைக் கலைத்துவிட்டு, அம்னோவுக்குத் திரும்பலாம்,” என்று அவர் கூறினார்.