‘பட்ஜெட்டை நிராகரிக்கத் தவறினால், அன்வர் பிரதமர் வேட்பாளர் ஆதரவை இழப்பார்’

2021 வரவுசெலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி நிராகரிக்கத் தவறினால் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிமின் நம்பகத்தன்மை போய்விடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் விவரித்தனர்.

உண்மையில், தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தின் 2021 பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) கூட்டணிக்குள்ளேயே  பிரதமர் வேட்பாளர் ஆதரவை அன்வர் இழக்க நேரிடும் என்று டாக்டர் நூரியந்தி ஜல்லி கூறுகிறார்.

“இப்போது, ​​நிலைமை பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவாக உள்ளது, மேலும், 2021 பட்ஜெட் கொள்கையும் கோவிட் -19 மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்து நிறைய கவனம் செலுத்தியுள்ளது.

“இது தற்போதுள்ள அரசாங்க ஆதரவாளர்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதோடு, புதிய ஆதரவாளர்களையும் ஈர்க்கக்கூடும்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

இந்த நேரத்தில், பட்ஜெட்டை எதிர்க்க, அன்வருக்குத் தெளிவான அல்லது அடிப்படை காரணம் இல்லை என்பதும் நூரியந்தியின் கருத்து.

“இப்போது, என் கருத்துப்படி, 2021 வரவுசெலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு, அன்வருக்குத் தெளிவான, சிறந்த முன்மொழிவு ஏதுமில்லை. சில பார்வையாளர்கள் அன்வரால் நாடாளுமன்றத்தில் கொள்கை மாற்றங்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று கருதுகின்றனர், எடுத்துக்காட்டாக பட்ஜெட் மாற்றங்கள்.

“இருப்பினும், 2021 வரவுசெலவு திட்டத்தைச் சமன் செய்ய, எதிர்க்கட்சியின் (அன்வர்) விமர்சனம் அவசியம்,” என்று அவர் விளக்கினார்.

நம்பகத்தன்மை கேள்விக்குறியானது

நூரியந்தியைப் போலவே, அரசியல் ஆய்வாளர் ஆரிஃப் அன்வர் லோக்மனோல் ஹக்கீமும், அன்வர் பட்ஜெட்டை நிராகரிக்கத் தவறினால், அவர் மீதான பி.எச். உறுப்பினர்களின் நம்பிக்கை குறையும் என்று கூறியுள்ளார்..

தற்போது, பட்ஜெட் 2021 இரண்டாம் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இது குழு மட்டத்திலான வாக்களிப்பு.

அமைச்சின் சில ஒதுக்கீடுகளுக்கு, ஏழு சுற்று வாக்களிப்பு வரை பிரிந்திசை வாக்களிக்க எதிர்க்கட்சியின் முன்மொழிவு இருந்தபோதிலும், எந்தவொருப் பிரிந்திசை வாக்குகளையும் எதிர்க்கட்சி இன்னும் வென்றெடுக்கவில்லை.

கொள்கை மட்டத்தில், எதிர்க்கட்சிகள் பிரிந்திசை வாக்களிக்க முயற்சிகள் செய்தபோதிலும், இந்தச் செயல்முறைக்குத் தேவையான 15 எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காததால் அது வெற்றிபெறவில்லை.

முன்னதாக, பிரிந்திசை வக்களிப்பைக் கொள்கை மட்டத்தில் ஆதரிக்காத அன்வர், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோரைப் பிரிந்திசை வாக்களிப்பை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை ஒப்புக்கொண்டார்.

ஏனென்றால், நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் அறிவித்த புதியச் சலுகைகளை நிராகரிக்க விரும்பவில்லை என்று அன்வர் கூறியிருந்தார்.