மதுபானத்திற்கு மட்டுமே ஆட்சேபனை, மற்ற ஹலால் அல்லாதப் பொருட்களுக்கு அல்ல

ஜெராம் சட்டமன்ற உறுப்பினர், மொஹமட் ஷைட் ரோஸ்லி, சமீபத்தில் ஜெயா பல்பொருள் மளிகை அங்காடி கடைக்கு எதிராக, புஞ்சாக் ஆலாம் குடியிருப்பாளர்கள் சார்பில் தான் முன்வைத்த எதிர்ப்பு, மதுபானங்களுக்கு மட்டுமே, மற்ற ஹலால் அல்லாதப் பொருட்களுக்கு அல்ல என்று கூறியுள்ளார்.

‘புஞ்சாக் ஆலாமில் வசிக்கும் 90 விழுக்காடு, முஸ்லிம் சமூகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு, அவர் மனு சமர்ப்பித்த பின்னர், ஹலால் அல்லாத உணவுப் பிரிவை அந்த அங்காடிக்கடை மூடியுள்ளது.

“செந்தர இயங்குதல் நடைகுறைக்குட்பட்டு, தனி கவுண்டர்களைப் பயன்படுத்தி, ‘ஹலால் அல்லாத’ உணவை விற்பனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை.

“அவர்கள் அவற்றை ஒரே இடத்தில் வைத்திருப்பதால், அப்பிரிவின் நுழைவாயிலை மூடியுள்ளனர்.

“மதுபாங்கள் அகற்றப்பட்ட பின்னர், அப்பிரிவு மீண்டும் திறக்கப்படுமென நான் நம்புகிறேன்,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

புஞ்சாக் ஆலாம் மக்கள் முஸ்லீம் அல்லாத சமூகத்தைப் புரிந்துகொண்டு மதிக்கிறார்கள், தங்கள் பகுதி மதுபானத்திலிருந்து விடுபடுவதை உறுதி செய்வதற்காக மட்டுமே அவர்கள் இக்கோரிக்கையை முன்வைத்ததாக அவர் மேலும் சொன்னார்.

“முன்னதாக, தெஸ்கோ, ஏகோன்சேவ், செவன் இலெவன், கே.கே.மார்ட் போன்ற பல்பொருள் அங்காடி கடைகளுக்கும், மதுபானங்களை விற்கும் கடைகளுக்கும் இதேக் குறிப்பை அவர்கள் அனுப்பியுள்ளனர்.

“பெரும்பான்மையான மலாய் முஸ்லிம் குடியிருப்பாளர்களின் விருப்பத்தை அந்த உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர்,” என்று அவர் கூறினார்.

ஷைட் ஒரு சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர், பதிவு செய்யப்படாத பெஜுவாங் கட்சிக்கு அவர் ஆதரவாக இருக்கிறார்.