வேளாண் சட்டங்களுக்கு பெருகும் ஆதரவு

புதுடில்லி : விவசாயிகள் வருவாயை இரு மடங்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, மூன்று வேளாண் சட்டங்களுக்கு, பெரும்பாலான மக்கள் ஆதரவு தெரிவித்திருப்பது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள், டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அறிக்கை

இந்த போராட்டம் குறித்து, தனியார் செய்தி சேனல் நிறுவனம், 22 மாநிலங்களைச் சேர்ந்த, 2,400 பேரிடம் ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களால், விவசாயிகள் பயன் பெறுவர் என, 53.6 சதவீதம் பேரும்; போராட்டம் கைவிடப்பட வேண்டும் என, 56.59 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர்.பஞ்சாப் தவிர்த்து, இதர மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலானோர், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துஉள்ளனர். ஆந்திரா, தெலுங்கானா, உ.பி., – ம.பி., ஆகிய மாநிலங்களில், இந்த ஆதரவு மிக அதிகமாக உள்ளது. அதிக விலைவிவசாயிகள், தங்கள் விளைபொருட்களை, மண்டிக்கு வெளியில் அதிக விலை கிடைத்தால் விற்கலாம் என்ற சட்டம், சரியானது என, 73 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தில், அரசியல் நோக்கம் உள்ளதாக, 48.7 சதவீதத்தினரும், சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தக் கூடாது என, 52.69 சதவீதம் பேரும் தெரிவித்துஉள்ளனர். ‘குறைந்தபட்ச ஆதார விலை நீடிக்கும்’ என, மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்க முன்வந்ததை, 53.94 சதவீதம் பேர் பாராட்டி உள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு, அனைத்து பிராந்தியங்களிலும், 70 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தென் மாநிலங்கள், 74 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

dinamalar