கெர்லிங் பள்ளியின் ‘குருகுலம்’ ஒரு விடிவெள்ளி

இராகவன் கருப்பையா – கல்வி என்பது ஒவ்வொரு தனிமனிதனின் அடிப்படை உரிமையாகும்.

ஆனால் பல்வேறு காரணங்களினால் இந்நாட்டில் நமது சமூகத்தைச் சேர்ந்த பலருக்கு அது ஒரு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது இன்று வரையில்.

குறிப்பாக சில தோட்டப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் ஒரு சில பெற்றோரின் அலட்சியப் போக்கு மட்டுமின்றி பெரும்பாலோரின் வறுமையின் காரணமாக நிறைய பிள்ளைகளின் கல்விக் கண்கள் இன்னமும் திறக்கப்படாமலேயே இருக்கின்றன என்பது மிகவும் வருத்தமான ஒரு விசயமாகும்.

கல்வி ஒன்றே நம் சமுதாயத்தை உயர்த்தும் என்பதால் இப்பிரச்னையைக் கலைவதற்கு பல அரசு சாரா இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் காலங்காலமாக முயற்சி மேற்கொண்டு வந்துள்ள போதிலும் அதற்கான நிரந்தரத் தீர்வைக் காண முடியவில்லை என்பதுதான் உண்மை.

இதனைக் கருத்தில் கொண்டு தலைநகரில் இருந்து வடக்கே சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெர்லிங் தோட்டத் தேசிய வகை தமிழ்ப்பள்ளி, ‘குருகுலம்’ எனும் மிகப் பெரியத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளது.

பள்ளியின் தலைமையாசிரியர் குமார், அதன் வாரியத் தலைவர் டத்தோ ஆனந்தன் மற்றும் வாரிய உறுப்பினரும் கவுன்சிலருமான கனகராஜா ஆகிய மூவரின் சிந்தனையில் உதித்த இத்திட்டம் கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உதயம் கண்டது.

இத்திட்டத்தின் வழி நாடு தழுவிய நிலையில் உள்ள வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் முழு நேரமும் தங்கி கல்விப் பயில இவர்கள் வகை செய்கின்றனர்.

தொடக்கத்தில் பள்ளிக்கு அருகில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இத்திட்டத்தை அமலாக்கம் செய்த அவர்கள் இப்போது பள்ளி வளாகத்திற்குள்ளேயே ஒரு விடுதியை வெற்றிகரமாக நிர்மாணித்துள்ளனர்.

கெடா, போட்டிக்சன், பூச்சோங், ஷா அலாம் முதலிய பகுதிகளைச் சேர்ந்த மொத்தம் 20 மாணவர்கள் தற்போது இந்த விடுதியில் தங்கி கல்வி பயில்கின்றனர்.

கெர்லிங் அருகில் உள்ள களும்ப்பாங் எனும் இடத்தில் அமைந்துள்ள இடைநிலைப் பள்ளியில் பயிலும் சில மாணவர்களும் இவர்களில் அடங்குவர்.

இவர்களுக்கு பகுதி நேரமாக விவசாயம் தொடர்பான பயிற்சிகளும் கூட வழங்கப்படுகிறது.

மேலும் 30 மாணவர்கள் வரையில் தங்குவதற்கான  வசதிகள் அங்கு உள்ளதாகக் குறிப்பிட்ட தலைமையாசிரியர் குமார், கணினி மற்றும் யோகா மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகளும் வழங்கப்படுவதாகக் கூறினார்.

நம் நாட்டில் பல இடங்களில்  தமிழ்ப்பள்ளிகள் சற்று தொலைவான இடங்களில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லாத பெற்றோர் அருகில் உள்ள தேசியப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தமிழ் பள்ளிகளில் புதிய மாணவர் பதிவில் சரிவு ஏற்பட்டுள்ளதற்கு இதுவும் ஒரு பிரதானக் காரணமாகும்.

எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் சிக்கித் தவிப்போர் மட்டுமின்றி வறுமையில் வாடும் இதர பெற்றோர்களுக்கும தனித்து வாழும் தாய்மார்களுக்கும் கெர்லிங் பள்ளியின் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

முற்றிலும் பொது மக்களின் நிதி உதவியைக்கொண்டு செயல்படும் இந்த விடுதியில் தங்கியிருக்கும் எல்லா மாணவர்களுக்கும் பள்ளி சீருடைகள் உள்பட எல்லா உபகரணங்களுமே இலவசமாக வழங்கப்படுகிறது.

தகுதியுடைய பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளை இங்கு அனுப்பினால் மட்டுமே போதும் என்கிற நிலைதான்.

ஒரு முழு நேர வார்டன் மற்றும் ஒரு சமையல்காரர் ஆகியோரின் ஊதியம் உள்பட பகுதி நேர வகுப்புகளோடு மாணவர்களுக்குத் தேவைப்படும் இதர எல்லா செலவுகளையும் உள்ளடக்கி அந்த விடுதியை பராமரிப்பதற்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 96 ஆயிரம் ரிங்கிட் செலவிடப்படுகிறது.

நாட்டில் மேலும் ஒரு சில இடங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இந்த கெர்லிங் பள்ளியைப் போல விரிவானத் திட்டங்களுடனும் ஏற்பாடுகளுடனும் இப்படிப்பட்ட ஒரு விடுதி செயல்படுவதாகத் தெரியவில்லை.

இந்த விடுதியின் திட்டங்கள் தொடர்பாகவும் புதிய மாணவர் சேர்க்கை குறித்தும் மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ள வேண்டிய எண்: 012-4416712.