பிராணவாயு இல்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது

(பெர்னாமா) — நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கடுமையான நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் முதுமையைக் குறைப்பது போன்றவற்றிற்கு உதவும் அல்கா எனப்படும் நுண்ணுயிரிலிருந்து தயாரிக்கப்படும் பிராணவாயுவில்லாத பொருட்களை உற்பத்தி செய்வதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் மலேசியப் புத்ரா பல்கலைக்கழகமும் பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனமும் புதன்கிழமை கையெழுத்திட்டிருக்கின்றன.

இரு தரப்பினர்களின் ஒத்துழைப்பில் உற்பத்தி செய்யப்படவிருக்கும் அல்கா நுண்ணுயிர் சார்ந்த தயாரிப்புகள் அடுத்த ஆண்டு முதல் காலாண்டிற்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவர் லீ பின் ஹௌவ் தெரிவித்தார்.

”இது போன்ற தயாரிப்புகள் மலேசிய சந்தைக்கு மட்டுமல்ல. இந்தத் தயாரிப்புகள் உலகளாவிய சந்தைகளுக்கும் விநியோகிக்கப்படும். அல்கா நுண்ணுயிரிலிருந்து வாயில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் துணைப் பொருள் அடிப்படையில் முதலில் தயாரிக்கப்படும். அதோடு தயாரிப்பின் இறுதி கட்டத்தில் ஒப்பனைக்குரியப் பொருட்கள் தயாரிக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

புதன்கிழமை, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் மற்றும் பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இடையிலான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்குப் பின்னர் லீ இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முதுகலை மாணவர்களோடு இதர பல்கலைக்கழக மாணவர்களும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அல்கா நுண்ணுயிர் சார்ந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருவதாக மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் உயிரியல் செயலாக்கம் மற்றும் தயாரிப்பு துறையின் தலைவர் பேராசிரியர் முனைவர் அர்பாகாரியா அரிவ் விளக்கினார்.

“ஹலால் சான்றிதழ் பெற்ற ஸ்பெய்ன் நாட்டின் அல்கா நுண்ணுயிரானது இதர நோய்களுக்கான சிகிச்சைக்குப் பயனளிக்குமா என்பதைத் தொடர்புபடுத்திய மேற்குறித்த ஆய்வுகளை மலேசியப் புத்ரா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி குழு செய்யும்,” என்றும் அவர் கூறினார்.

பி.என்.டி. ஆராய்ச்சி நிறுவனம் மாட்ரிட், ஸ்பெய்ன் பகுதியிலுள்ள கூட்டு நிறுவனமான வீ  பைய்யொஹெல்த் சைன்ஸ்சின் துணை நிறுவனமாகும்.

அந்தக் கூட்டு நிறுவனத்திற்கு ஸ்பெய்ன் நகரத்திலுள்ள கடல் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான  ஃபித்தொபளானஸ்டோன் மரினொ, ஜெர்மன், கெலிட்டா ஆராய்ச்சி நிறுவனம், ஆசிய சந்தை விரிவாக்க சேவை தயாரிப்பாளரான, டி.கே.எஸ்.எச்-சிடம் வியூக ஒப்பந்தம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

— பெர்னாமா