எல்லாரும் இன்புற வேண்டும் – கி.சீலதாஸ்

மகிழ்ச்சி ஓர் இன்ப நிலையைக் குறிக்கிறது. ஒரு நிகழ்வு எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றால் அந்த மகிழ்வை எனக்கு மட்டும் உரியதானதாகக் கருதுகிறேன். நான் மட்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது மனித இயல்பு எனலாம். அப்படியே என் மகிழ்ச்சியில் எவராவது பங்குபெற வேண்டுமானால், யார் யார் பங்கு பெறலாம் என்பதையும் நான் தான் முடிவு செய்வேன். எனக்கு கிடைத்திருக்கும் மகிழ்வை யாருடன் பகிர்ந்து கொள்வது என்பதையும் நான் தான் முடிவு செய்வேன். மகிழ்வை அனுபவிப்பதில் அளவேதும் இருக்காது. ஆனால் யாரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதில் கவனம் மிகவாக இருக்கும்.

நமக்கு வருகின்ற மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள தயங்குவோம்; ஏனெனில் அந்தப் பிறர் என்ற வகையினில் நம் உறவினர் அல்ல, நம் நண்பர் அல்ல, நம் இனத்தைச் சேர்ந்தவர் அல்ல, நம் ஜாதியைச் சேர்ந்தவர் அல்ல, நம் மதத்தைச் சேர்ந்தவர் அல்ல, நம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, நம் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் கட்சி பிளவுபட்டிருக்கிற நிலையில் நம் பக்கம் அல்ல என்பன போன்ற காரணங்களின் அடிப்படையில் மகிழ்ச்சி, இன்பம் தரும் மகிழ்வைப் பகிர்ந்துகொள்ள தயங்குகிறோம். இது ஒன்றும் புதினமல்ல.

நாம் அனுபவிக்கும் இன்ப நிலையைப் பகிர்ந்துகொள்ளும்போது, நாம் அனுபவித்த திருப்திகரமான தருணங்களைப் பகிர்ந்து கொள்வதில், நமது வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது அல்லது நமது அறிவை, விவேகத்தன்மையைப் பகிர்ந்துகொள்ளும்போது, இந்த வையகத்தையே பகிர்ந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்ச்சி அளப்பரியது. உலகத்தையே பகிர்ந்துகொள்ளும்போது நாம் பூரண மனிதர்களாகி விடுகிறோம். பகிர்ந்து கொள்ளும் தரம் மனத்தில் வேரூன்றிவிட்டால் அப்படிப்பட்டவர் முதிர்ச்சியான சிந்தனை கொண்டவர் என்றும் எதிலும் நிதானமாக நடந்து கொள்வார் என்று கூட சொல்லலாம். பகிர்ந்து கொள்ளும் எண்ணம், விவேகம், தராதரம் பலம் பெறும்போது சண்டை சச்சரவுக்கு இடம் இல்லை. சமுதாயத்தில், நாம் வாழும் சுற்றுப்புறத்தில், நமது நாட்டில், நமது அண்டை நாடுகளோடு, ஏன்? உலகிலேயே அமைதி நிலவ வழி உண்டு.

என்றைக்கு மக்கள் எதையும் பகிர்ந்து கொள்ள முடியும் என்ற பக்குவ உணர்வை வளர்க்கத் துணிகிறார்களோ அந்தச் சமுதாயம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இந்த நாட்டில் சுதந்திரப் பேச்சு வார்த்தை நடந்தபோது ஒவ்வொரு இனமும் தனது பாதுகாப்பை நினைத்தது உண்மை. மலாய் தேசியம், சீன தேசியம், இந்திய தேசியம் என்பன போன்ற வேறுபட்ட தேசிய உணர்வுகள் இருந்தபோதிலும் இவையாவும் மலாயன் என்ற ஒற்றுமை உணர்வுக்குத் துணை நிற்கவில்லை. அதோடு நாட்டின் பொருளாதாரப் பங்கீட்டிலும் சமநிலை இல்லாதபோது பொருள்வளம் மிக்கோர் தங்களின் செல்வத்தைப் பெருக்குவதில் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர். செல்வ நிலையில் இல்லாத சிறுபான்மை சமுதாயமும் கூட தமது பொருளாதார பங்கில் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டது. அதுமட்டுமல்ல அதிகாரம் எங்கெல்லாம் பரவி இருந்ததோ அதில் சிறுபான்மையினர் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டனர் எனலாம். இதன்வழி மலாயா சமுதாயம் பொருளாதார சங்கடத்தில் இருந்து விடுபட்டு சமதர்ம நிலையை அடைந்து அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்க முடியும் என்ற நம்பிக்கையே என்றால் அது மிகையாகாது. அந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை காலப்போக்கில் பொருளாதார நீதிக்கு வழிகாட்டியதா என்ற கேள்வி இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.

நூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் மிகுந்த திறமையுடையவர் திறமை குறைந்தவர்க்கு முப்பது மீட்டர் சலுகை தருவார். அப்படியாவது திறமை குறைந்தவர் வேகமாக ஓடுவார் என்ற நம்பிக்கையில். திறமை குறைந்தவர் ஓட்டத்தில் கவனமாக இருக்க வேண்டுமே அன்றி நிரந்தரமாக முப்பது மீட்டர் சலுகையைக் கோருவது நியாயம் இல்லை அல்லவா? இப்படிப்பட்ட சூழ்நிலையில் தூரத்தை விட்டுக்கொடுப்பவர் மகிழ்ச்சியுடன் நடந்து கொண்டபோதிலும் அந்தச் சலுகையைப் பெற்றுக்கொண்டவர் தமது திறமையை நேர்மையான முறையில் வளர்த்துக் கொள்ளவில்லை என்ற அவமதிப்புக்கும் ஆளாகலாம் அல்லவா? அதைத் தவிர்க்க வேண்டியது முப்பது மீட்டர் சலுகையைத் தந்தவர்கள் அல்ல, அந்த முப்பது மீட்டர் தூரத்தைப் பெற்றவர்கள்தான் இதனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அப்படிப்பட்ட தரம் இருந்தால் சமூக நீதி பாதிப்புறும்.

பகிர்ந்து கொள்ளும் எண்ணத்துக்கு இன, மத, சொந்தம், உறவினர், நண்பர் என்பன போன்றவற்றிற்கு இடம் தரக்கூடாது. பாகுபாடு கொண்ட பகிர்வு கொடுமையான அநீதியைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட மனப்பாங்கு இறைவனின் படைப்புகளைப் புறக்கணிப்பதாகவும் வெறுப்பதாகவும் உதாசீனம் செய்வதாகவே கருதப்படும்.

ஒரு கதையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு பெண் விவேகி மலைகளில் நடந்து செல்லும்போது, நீரோடையில் அழகான ஒரு கல்லைப் பார்த்ததும் அதை எடுத்துக் கொண்டார். மறுநாள் மற்றொரு ஆண் விவேகி அந்தப் பெண் விவேகியிடம், “தமக்குப் பசிக்கிறது; உணவு இருந்தால் தாருங்கள்” என்றார். அந்தப் பெண்மணி தன் பையைத் திறந்தபோது அந்த ஆண் விவேகி பையில் இருந்த விலைமதிப்பற்ற கல்லைப் பார்த்து, “அந்தக் கல்லை எனக்குத் தாருங்கள்!” என்றார். அந்தப் பெண் விவேகி மனமுவந்து அந்தக் கல்லைக் கொடுத்துவிட்டார். அதைப் பெற்றுக்கொண்ட ஆண் விவேகிக்குக் கல்லின் மதிப்பு தெரியும்; தமது எதிர்காலம் பாதுகாப்பாகிவிட்டது என்று கருதி, புறப்பட்டுவிட்டார்.

சில நாட்களுக்குப் பிறகு, அந்த ஆண் விவேகி திரும்பி வந்து அந்த விலைமதிப்பற்ற கல்லை அந்தப் பெண் விவேகியிடம் கொடுத்து, “இந்தக் கல்லின் மதிப்பு எனக்குத் தெரியும். அதை நான் திரும்ப கொடுத்துவிடுகிறேன். இதைவிட அதிக விலைமதிப்புள்ளது ஒன்று உங்களிடம் இருக்கிறது. இந்த விலைமதிப்பற்ற கல்லைக் கொடுக்கும் பக்குவத்தை எனக்குத் தாருங்கள்!” என்றார்.

அற்புதமான கதை அல்லவா? விலை உயர்ந்த மாணிக்க கல் வேண்டாம்.  ஆனால், இந்த மாணிக்க கல்லை மனமுவந்து தந்துவிடும் பக்குவம் அந்த அம்மையாரிடம் இருந்தது. அதைக் கேட்டார் ஆண் விவேகி. ஆமாம். அந்தப் பக்குவம் தூய்மையான பகிர்ந்துகொள்ளும் உணர்வை வெளிப்படுத்துகிறது. நம்மிடம் இருக்கிறதா? எல்லோரிடமும் இருக்க வழியில்லை!

திருமூலர் பாடியது நினைவுக்கு வருமே. “யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமே”. நல்லதைச் செய்யும் மனம், நல்லதை நினைத்து செயல்படும் மனம்தான் உயர்ந்தது. அந்த அனுபவம் உலகம் முழுவதும் பரவினால் அமைதிக்கு அடைக்கும் தாழ் உண்டோ?