சிந்தித்து செயல்படுவோம், தைபூச திரளை தவிர்ப்போம் ~இராகவன் கருப்பையா

கடந்த 3 மாதங்களாக கோறனி நச்சிலின் கோரத் தாண்டவத்தில் சிக்கித் தவிக்கும் மலேசியா விரைவில் அதிலிருந்து விடுபடுவதற்கான சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

அன்றாடத் தொற்று கடந்த ஒரு மாத காலமாக 4 இலக்கிலிருந்து குறையாத நிலையில், இதுவரையில் 500கும் மேற்பட்டோர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.

பாதுகாப்புக் கருதி, இங்குள்ள தனது பிரஜைகளை நாடு திரும்புமாறு கோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் பணித்துள்ளதானது, நோயின் தாக்கத்தை மேலும் புலப்படுத்துகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் நடப்பு அரசாங்கம் எந்நேரத்திலும் கவிழும் அபாயத்தை எதிர்நோக்கியிருக்கும் பட்சத்தில் நோய்த் தொற்றைப் பற்றி சிந்திக்க அரசியல்வாதிகளுக்கு அவகாசம் இருக்க வாய்ப்பில்லை என்பதும் உண்மைதான்.

இப்படிப்பட்ட சிக்கலான ஒரு சூழ்நிலையில் இம்மாத இறுதியில் தைப்பூத் திருநாளை அவசியம் நாம் கொண்டாடத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் பலரின் மனதில் இப்போது எழுந்துள்ளது.

பினேங் மாநிலத்தில் எல்லா விதமான தைப்பூசக் கொண்டாட்டங்ளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

150 ஆண்டுகால பாரம்பரியமான உலக புகழ் பெற்ற பினேங் மாநில ரத ஊர்வலம் முதல் முறையாக இவ்வாண்டு ரத்து செய்யப்படுகிறது.

பால் குடம், காவடி போன்ற நேர்த்திக்கடன்களும் கூட ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கோயிலில் நடைபெரும் பூஜைகள் அனைத்தும் இயல்நிலை வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, இதுதான் விவேகமான முடிவாகும்.

ஆனால் கோலாலம்பூர் மாரியம்மன் கோயில் தேவஸ்தானம், பத்து மலைக்கான ரத ஊர்வலத்தை நிறுத்தப் பொவதில்லை என்று செய்துள்ள அறிவிப்பு சற்று வியப்பாகவே உள்ளது.

ரதத்தை யாரும் பின் தொடரக்கூடாது என்றும் எந்த இடத்திலும் அது  அர்ச்சனைகளுக்கு நிற்காமல் பத்துமலை வந்தடையும் என தேவஸ்தானம் குறிப்பிட்டுள்ள போதிலும் இப்படியொரு ஏற்பாட்டை தவிர்ப்பதே விவேகமான செயலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பத்து மலையில் பக்தர்கள் பால் குடம் எடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஒவ்வொரு பால் குடத்துடனும் கூடுதலாக 2 பேர் மட்டுமே செல்ல அனுமதி.

ஆக ஒரு பால் குடத்திற்கு மூவர் என்ற வீதத்தில் பார்த்தால் கூட குறைந்த பட்சம் 10,000 பால் குடங்களுக்கு 30,000 பேர் குழும வாய்ப்பிருக்கிறது.

எவ்வளவுதான் கூடல் இடைவெளியுடன் இது அனுமதிக்கப்பட்டாலும் நோய் தொற்றுக்கான அபாயம் இருக்காது என்று நாம் சொல்லிவிட முடியாது.

துரதிர்ஷ்டவசமாக நோய்த் தொற்று ஏற்பட்டால் ‘தைபூசத் திரள்’ என்ற இழுக்கு ஒட்டு மொத்தமாக நமது சமுதாயத்தின் மீதுதான் பாயும்.

ஏற்கெனவே நமது சமயத்திற்கான பாதுகாப்பு இந்நாட்டில் சன்னம் சன்மாக குறைந்து வருவதை யாரும் மறுக்க இயலாது. கோயில்களுக்கு சல்லி காசு கொடுக்கு முடியாது என கெடா மந்திரி பெசார் அண்மையில் பகிரங்கமாக அறிவித்ததும் அதனைத் தொடர்ந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட கோயில் உடைப்பு சம்பவங்களும் இதற்கு சான்று.

புற வழியாக அரசாட்சியில் நுழைந்துள்ள சமயத் தீவிர கட்சியான பாஸ்ஸின் நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் மிகவும் கவனமாக இருப்பது அவசியமாகும்.

நடப்பு அரசாங்கம் கவிழ்ந்தாலும் கூட புதிய அரசாங்கத்தில் அவர்களுடைய பங்கேற்போ அதிகாரமோ இருக்காது என்று சொல்லிவிட முடியாது.

எனவே நமது சமயத்திற்கோ சமயக் கொண்டாட்டங்களுக்கோ எவ்விதமான பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வது அனைவருடைய கடமையுமாகும்.

ஆக இவ்வாண்டு தைப்பூசத்தை பினேங் மாநிலக் கொண்டாட்டங்களை பின்பற்றி கோலாலம்பூர் உள்பட எல்லா மாநிலங்களும் இயல்நிலை வாயிலாக ஒளிபரப்பு செய்தல் சாலச் சிறந்ததாக அமையும் என்பதில் ஐயமில்லை.