கவுன்சலர்கள் கௌரவத்துடன் மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவையாற்ற வாழ்த்துகள் – சேவியர் ஜெயகுமார்

இவ்வாண்டு ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகப் பதவியைப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கடந்த தவணை முதல் தொடர்ந்து பதவியில் இருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றி வரும் ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவரும் கோலலங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

“நாட்டில், சிலாங்கூர் மாநிலம் மிக முன்னேறிய ஒரு முக்கிய மாநிலம் என்பது நாம் அனைவரும் அறிந்தது. இந்த மாநிலத்தின் பல சிறப்புகளை, பல சலுகைகளையும் எல்லா மக்களைப் போன்று நாமும் அனுபவித்து வருகின்றோம். இம்மாநிலத்தில் நல்ல ஒரு ஆட்சியை ஏற்படுத்துவதற்கு நாம் செய்த தியாகங்கள் வீண்போக வில்லை என்பதனைச் சில மாநிலங்களில் நடக்கும்,அப்பட்டமான பாகுபாடுகளை ஒப்பிட்டால் அது தெளிவாகத் தெரியும்.

ஆக, இம்மாநிலத்தை மேலும் சிறப்பாகச் செயல் படுத்த எல்லா ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களும் முயல வேண்டும். இம்மாநில மக்கள் அனுபவிக்கும் அமைதி மற்றும் சுபிட்சத்துடன், இக்கட்டான இந்த நோய்த்தொற்று காலத்தில் பல உதவித் திட்டங்களை  மாநில அரசு முன்னெடுத்து வருகின்றது. மக்கள் பொருளாதாரச் சிக்களிலிருந்து விரைவில் வெளிவர மாநில அரசு எடுத்துவரும் முயற்சிகளும் அதிகம்.

கெஅடிலான் கட்சி, இந்தியர்களுக்கு ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களாகும் வாய்ப்புகளை அதிகம் 29.34 விழுக்காடு அதாவது கெஅடிலான் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த 92 இடங்களில் 27 இடங்களை வழங்கியுள்ளது.

ஏறக்குறைய இதே எண்ணிக்கையிலான ஊராட்சி மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களாகும் வாய்ப்புகளை ஜ.செ.காவும் இந்தியர்களுக்கு வழங்கும் என்பதில் ஐயமில்லை. அதனுடன் அமானா கட்சி வழி பதவி அமர்பவர்களுமாகச் சேர்ந்து எல்லா நகராட்சிகளிலும், பல இன மக்களைக் கொண்ட கட்சிகளைச் சார்ந்தவர்களே பதவி வகிப்பார்கள் என்பதில் நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விவகாரமாகும்.

இம்மாநிலம், பல விவகாரங்களில்  இந்நாட்டுக்கே வழிகாட்டியாக விளங்கி வருகிறது என்பதற்கு நீண்ட பட்டியலிடலாம், இருப்பினும் சிலாங்கூரில் வழங்கப்பட்டு வரும் இலவசக் கோவிட்19 க்கான சோதனை, இந்தியக் கிராமத் தலைவர்கள் எண்ணிக்கை உயர்வு ஊராட்சி மற்றும் மாநகராட்சி பதவிகளின் எண்ணிக்கையை வைத்து, மக்கள் 2008ம் ஆண்டு அவர்கள் எடுத்த துணிச்சல் மிக்க முடிவின் பின் விளைவுகளைக் கணிக்கலாம்.

இந்த மாநில ஆட்சியில் மட்டுமின்றி, இம்மாநில மக்கள் பெற்றுவரும் மொழி, சமய, மருத்துவ, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்கான வசதிகளிலும் இந்தியர்களின் நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இவை அனைத்தும் 2008ம் ஆண்டு தொடங்கி, நாம் அனைவரும் சமுதாயத்துடன் ஒன்றுபட்டுப் பாடுபட்டதற்கான வெற்றிகள்.

இந்தச் சமுதாயத்திற்கு, வளரும் நம் பிள்ளைகளுக்கு இன்னும் அதிகம் செய்ய நாம் கடமைப்பட்டுள்ளோம். சிலாங்கூர் 12 ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளை உள்ளடக்கிய ஒரு மாநிலம் என்பதால் ஊராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களின் சிறந்த பங்களிப்பு இன்றி நாம் எதனையும் சிறப்பாக மேற்கொள்ள முடியாது.

ஆகையால், இந்த மாநிலத்தின் அபிவிருத்தியுடன் சமுதாயத்தின் மேன்மையும், நீங்கள் வகிக்கும் பதவிகளுக்கும் எந்தக் குந்தகமுமின்றிச் சிறந்த சேவைகளை வழங்கிட எனது வாழ்த்துகளை அனைத்து நகராட்சி, மற்றும் மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் கெஅடிலான் தேசிய உதவித் தலைவரும் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.