தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட ஏன் அனுமதி, அமைச்சர் விளக்கினார்

பெற்றோர்கள் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.) கீழ் உள்ள மாநிலங்கள் உட்பட, அனைத்து தனியார் மழலையர் பள்ளிகளும் செயல்பட அனுமதிக்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் மொஹமட் ராட்ஸி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொருளாதாரத் துறையின் பெரும்பகுதி மூடப்பட்டிருந்த முந்தையப் பி.கே.பி. போலல்லாமல், தற்போதைய பி.கே.பி. காலகட்டத்தில், சில துறைகள் திறந்த நிலையில் இருக்கும்.

“குறிப்பாக, வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். எனவே, பி.கே.பி பகுதியில் உள்ள மழலையர் பள்ளிகளையும் (இந்த முறை) திறக்க அனுமதிக்கிறோம்,” என்று அவர் இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தனியார் மழலையர் பள்ளிக்கு அனுப்ப விரும்புகிறார்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்க, அவர்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.

தற்போதைய பி.கே.பி.யின் கீழ், உற்பத்தி, கட்டுமானம், சேவைகள், வர்த்தக மற்றும் விநியோகத் துறைகளோடு, தோட்ட மற்றும் பொருட்கள் துறைகள் தொடர்ந்து செயல்படும்.

இருப்பினும், நிர்வாக ஊழியர்களில் 30 விழுக்காட்டினர் மட்டுமே தங்கள் பணியிடங்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும்.

பி.கே.பி.யின் கீழ் உள்ள மாநிலங்களில், பெரும்பாலான தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் வேளையில், தனியார் மழலையர் பள்ளிகளுக்கு இந்த நெகிழ்வுத்தன்மை வழங்கப்படுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தனியார் மழலையர் பள்ளிகளைப் போல, அரசு மழலையர் பள்ளிகள் ஏன் திறக்கப்படாது என்று கேட்கப்பட்டதற்கு, அனைத்து அரசு கல்வி நிறுவனங்களும் ஒரே விதிகளைப் பின்பற்றுவதால் – தேர்வுகளுக்கு அமரவிருக்கும் மாணவர்கள் மட்டுமே பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர் – அது சாத்தியப்படாது என்று ராட்ஸி கூறினார்.

மற்ற அனைத்து மாணவர்களும் வீட்டிலிருந்தபடியே, மெய்நிகர் கற்றலில் ஈடுபட வேண்டும்.

தனியார் மழலையர் பள்ளிகள், செந்தர இயங்குதல் நடைமுறைகளைக் (எஸ்.ஓ.பி.) கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கோவிட் -19 பரவலைத் தடுக்கும் முயற்சியாக, ஐந்து மாநிலங்களும் (பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, ஜொகூர் & சபா) மூன்று கூட்டரசுப் பிரதேசங்களும் (கோலாலம்பூர், புத்ராஜெயா & லாபுவான்) இன்று நள்ளிரவு தொடக்கம் பி.கே.பி.யின் கீழ் வைக்கப்படும்.