வரலாறு : நம் நாட்டில் அறிவிக்கப்பட்ட அவசரநிலைகள்

கோவிட் -19 தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக, அவசரநிலை பிரகடனத்தை அறிவிப்பதற்கு மாட்சிமைத் தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாசுதீன் அல்-முஸ்தபா பில்லா இன்று ஒப்புதல் அளித்தார்.

போர் காலம், உள்நாட்டு அமைதியின்மை, அரசியல் நெருக்கடி மற்றும் இயற்கை பேரழிவுகள் காலகட்டத்தில் மலேசியா பல அவசரகால அறிவிப்புகளை அமல்படுத்தியுள்ளது. ஆகவே, கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை உத்தரவுகளில் சிலவற்றை மலேசியாகினி எடுத்துக்காட்டுகின்றது.

கம்யூனிஸ்ட் கிளர்ச்சி (1948-1960)

கம்யூனிச எழுச்சி அல்லது மலாயா மக்கள் விடுதலை இராணுவ (எம்.என்.எல்.ஏ) கிளர்ச்சியின் போது அமல்படுத்தப்பட்ட அவசரகாலம் மறக்கமுடியாத ஒன்று. இக்காலகட்டத்தில், ஆங்கிலேயர்கள் சில அரசியல் கட்சிகளைத் தடை செய்ததுடன், கம்யூனிசக் கூறுகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களைத் தடுத்து வைத்தனர். இந்தப் போர் மலேசிய அரசாங்கம் உருவாகும் வரை நீடித்தது. 1959, ஆகஸ்ட்டில் மலாயாவின் முதல் பொதுத் தேர்தலும், அதே ஆண்டு செப்டம்பரில், அவசரகாலத்தின் போது, முதல் நாடாளுமன்றக் கூட்டமும் நடைபெற்றது.

மோதல் (1964) 

1964, செப்டம்பர் 3-ம் தேதி, இந்தோனேசிய இராணுவத்தின் ஊடுருவலின் போது, துங்கு அப்துல் இரஹ்மான் அரசாங்கம், அவசரநிலையை அறிவித்தது. அவசரகால சட்டம் (தேவையான அதிகாரங்கள்) 1964-ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது, சொத்து பறிமுதல், தேடல் மற்றும் கைது நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவசரகால விதிமுறைகளை இயற்ற மன்னருக்கு இது அதிகாரம் அளித்தது. கூடுதலாக, குற்றவியல் சோதனைகளை விரைவுபடுத்துவதற்காக, அவசர (குற்றவியல் சோதனை) விதிமுறைகள் 1964 இயற்றப்பட்டன.

சரவாக் (1966)

1966 செப்டம்பர் 14-ல், ஸ்டீபன் கலோங் நிங்கனை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் முயற்சியில், கோலாலம்பூர் சரவாக்கை அவசரகால நிலையில் வைத்தது.

மேலும், 1966 அவசரகால சட்டத்தை (மத்திய அரசியலமைப்பு மற்றும் சரவாக் அரசியலமைப்பு) நாடாளுமன்றம் இயற்றியது; இது சரவாக் ஆளுநருக்கு முழுமையான அதிகாரத்தையும், முதல்வரின் ஆலோசனையின்றி மாநில சபையை நடத்தும் அதிகாரத்தையும் அளித்தது.

செப்டம்பர் 23, 1966-ல், மாநில கவுன்சில் கூடியபோது, ​​நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டு, கலோங் நிங்கன் முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

மே 13 (1969)

மே 10, 1969 பொதுத் தேர்தலுக்குப் பிறகு இனக் கலவரங்கள் நிகழ்ந்தன. 1969, மே 15-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, அவசரநிலை அறிவிக்கப்பட்டது. மன்னர் நிறைவேற்றிய அவசரச் சட்டம் (தேவையான அதிகாரங்கள்), நிர்வாக மற்றும் சட்டமன்ற அதிகாரங்களைத் தேசிய இயக்க கவுன்சிலுக்கு (மாகேரன்) வழங்கியது. அதைத் தொடர்ந்து, விசாரணையின்றி தடுத்து வைக்க அனுமதிக்கும் அவசரச் சட்டம் 1969-ஐ (பொது ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு) மாகேரன் இயற்றியது. பொதுத் தேர்தல் முடிந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பிப்ரவரி 20, 1971-ல் புதிய நாடாளுமன்றம் மறுசீரமைக்கப்பட்டது.

கிளந்தான் (1977)

1977, நவம்பர் 8-ஆம் தேதி, கிளந்தான் மந்திரி பெசார் பதவியை மொஹமட் நசீர் இராஜினாமா செய்ய மறுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் அமைதியின்மை காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவசரகால அதிகார சட்டம் (கிளந்தான்) 1977-ஐ, நாடாளுமன்றம் நிறைவேற்றியது, இது பிரதமரால் நியமிக்கப்பட்ட அரசாங்க இயக்குநர்களுக்கு மாநில நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கொடுத்ததோடு, அச்சமயம், மன்னராக இருந்த சுல்தானுக்குச் சட்டமன்ற அதிகாரத்தையும் கொடுத்தது. 1978-இல், கிளந்தான் தேர்தல் வரையில், மொஹமட் நசீர் மந்திரி பெசராக இருந்தார்.

புகை மூட்ட அவசரநிலை (1997, 2005 மற்றும் 2013)

அனைத்து அவசரநிலைகளும் சிறப்பு சட்டமன்ற அல்லது நிர்வாக அதிகாரங்களுடன் தொடர்புடையவை அல்ல. 1997, 2005 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில், சரவாக், சிலாங்கூர் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில், காற்று மாசுபாடு மிகவும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியபோது அவசரநிலைகள் அறிவிக்கப்பட்டன. இது பொதுமக்களை வீட்டிலேயேத் தங்கும்படி கட்டாயப்படுத்தியதோடு, முக்கியமில்லாப் பொது மற்றும் தனியார் சேவைத் துறையின் செயல்பாடுகளையும் முடக்கியது.

பத்து சாப்பி நாடாளுமன்ற அவசரநிலை  (2020)

நவம்பர் 18-ம் தேதி, பத்து சாப்பி நாடாளுமன்றத்தில் அவசரகால நிலையை அறிவிக்க, பிரதமர் முஹைதீன் யாசின் விடுத்த கோரிக்கையை, மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா ஒப்புக் கொண்டார்.

கோவிட் -19 தொற்றுநோயின் நான்காவது அலைகளைத் தடுக்க, பத்து சாப்பி நாடாளுமன்ற இடைத்தேர்தலை இரத்து செய்ய இந்த அவசரகால அறிவிக்கப்பட்டது.

கிரிக் நாடாளுமன்றம் மற்றும் புகாயா சட்டமன்ற அவசரநிலை (2020)

2020, டிசம்பர் 16-ல், பேராக் கெரிக் நாடாளுமன்றத்திலும் சபாவின் புகாயா மாநிலச் சட்டமன்றத்திலும் அவசரகால நிலையை அறிவிக்க மன்னர் ஒப்புக்கொண்டார். கோவிட் -19 தொற்றுநோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயலூக்க நடவடிக்கையாக, இடைத்தேர்தல்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் ஆகும். பிரதமர் முஹைதீன் யாசின் இரு பகுதிகளுக்கும் அவசரகாலப் பிரகடனத்தை அறிவிக்க வேண்டிய அவசியம் குறித்து திருப்தியடைவதாகத் தெரிவித்தார்.

மலேசியாவில் கோவிட் -19 அவசரநிலை (2021)

12 ஜனவரி, 2021-ல், கோவிட் -19 தொற்றுநோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு செயலூக்க நடவடிக்கையாக, மலேசியாவில் அவசரகாலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று மன்னர் ஒப்புக் கொண்டார்.

ஆகஸ்ட் 1, 2021 அல்லது அதற்கு முன்னதாக, தினசரி கோவிட் -19 நேர்மறை வழக்கு புள்ளிவிவரங்களைக் கட்டுப்படுத்தவும் திறம்படக் குறைக்கவும் முடிந்தால், அவசரகால அமலாக்கத்தை நிறைவுக்குக் கொண்டுவர மன்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.


தமிழாக்கம் :- சாரணி சூரியமதன்