பி.எஸ்.எம். : மலேசிய வாழ் விவசாயிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

முயற்சியை விதை போல விதைத்துக்கொண்டே இரு, முளைத்தால் மரம் இல்லையென்றால் உரம்!’ – என்கிறார் வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார்.

நமது நாட்டில் முயற்சி-விதை இரண்டுமே பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. நிலங்கள் இருக்கும் இடத்தில் விவசாயம் நடப்பதில்லை, விவசாயம் செய்யப்படும் இடத்தில் நிலம் நிரந்தரமில்லை.

மூன்றாம் தரப்புகளின் இடையூர் காரணமாக, விவசாய நிலங்களை அரசே பறிமுதல் செய்யும் அநியாயங்களை கடந்த வருடங்களில் பார்த்திருக்கிறோம். விவசாயிகள் அது தொடர்பாக முன்னெடுத்த அனைத்து போராட்டங்களும் தற்காலிகப் போராட்டமாக இருந்ததே தவிர, அவர்களுக்காக ஒரு நிரந்தர தீர்வு கிடைத்ததில்லை.

தற்போது இரண்டு மாதங்களாக, இந்தியாவின் டெல்லியில் நடந்து கொண்டிருக்கும் உழுகுடி மக்கள் போராட்டமானது, இந்தியாவுக்கு மட்டுமல்லாது, உலக மக்கள் போராட்டமாகவும் மாறியுள்ளது. அந்தப் போராட்டத்தின் வழியாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. தவிர, அங்கிருக்கும் விவசாயிகள் புதிதாக அரசு அறிவித்திருக்கும் வேளாண் சட்டங்களை எதிர்க்கும் காரணத்தை நாம் ஆராய வேண்டும். காரணம், நமது நாட்டிலும் பெருவாரியான விவசாயக் குத்தகைகள் தனியார் நிறுவனத்திடம் உள்ளதை நாம் உணர வேண்டும்.

இந்தியாவில் மத்திய பாஜக அரசு கொரோனா அவசரக் கோலத்தில், ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமலும் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அவை :-

  1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020
  2. விவசாய விளைப்பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் சட்டம் 2020
  3. விவசாயிகளுக்கு விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020

இந்திய அரசு கொண்டு வந்திருக்கும் இம்மூன்று சட்டங்களையும் விவசாயிகள் எதிர்க்கக் காரணம் என்ன?

  1. விளைபொருட்கள் சந்தைகளைக் கார்ப்பரெட் நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் சூழல் உருவாகும்.
  1. பெரு வியாபாரிகள் அதிகளவில் உணவுப் பொருட்களைப் பதுக்க வாய்ப்பு ஏற்படும்.
  1. வேளாண் திருத்தச் சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனகளை ஊக்குவிக்கும்
  1. குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டியப் பொறுப்பு தட்டிக் கழிக்கப்படும்.

இவை அனைத்தும் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், புதிய தாராளமயமாக்களின் கீழ் அறிமுகமாகியிருக்கும் இந்தத் திட்டங்கள் முழுக்க முழுக்க முதலாளித்துவத்தின் வெளிபாடே தவிர, வேறு ஒரு நியாயமான காரணத்தையும் அதில் அறிய முடியவில்லை. சிறு விவசாயிகள் முதல் விவசாயம் சார்ந்திருக்கும் அனைவருமே கார்ப்பரெட் பிடியில் சிக்கிக்கொள்ளும் சூழல் உண்டாகிவிடும்.

இதே அடிப்படையில்தான் மலேசியாவின் விவசாயக் கொள்கைகளும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, நம் நாட்டின் அரிசி உற்பத்தியை எடுத்துக்கொள்ளலாம்.

அரிசியின் அனைத்துவிதமான முடிவுகளையும் ‘பெர்னாஸ்’ (BERNAS) என்ற தனியார் நிறுவனம்தான் எடுக்கிறது. மலேசியாவில் எந்த மூலையில் நெல் சாகுபடி செய்தாலும், அதைப் பெர்னாஸிடம்தான் விற்றாக வேண்டும். தவிர, உள்நாட்டில் அரிசி பற்றாக்குறையாக இருந்தால் வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வதும் பெர்னாஸ் மட்டுமே. ஓர் அத்தியாவசியப் பொருள், அரசின் கையில் இல்லாமல் எப்படி தனியார் நிறுவனத்தின் கையில் இருக்கிறது? மக்கள் சிந்திக்க வேண்டும்.

அரசின் பரிசீலனையில் இருக்கும் ஒரு விஷயம் விதைகள் உரிமம் சம்பந்தப்பட்டதாகும். அதாவது, ஒரு பயிரின் விதையை (அதை நாம் பயிர் செய்த பயிரிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும்) நாம் விற்க முடியாது. காரணம், விதைகளுக்கான உரிமையை ஒரு தனியார் நிறுவனம் வைத்திருக்கும். அந்த நிறுவனத்திடமிருந்துதான் நாம் அனுமதிப் பெற்று விதையை வாங்கி விதைக்கவோ விற்கவோ முடியும். இதில் இருக்கும் பெரிய சிக்கல் என்னவென்றால், ஒரு நிறுவனத்திடமிருக்கும் விதை, மரபணு மாற்றப்பட்டு, அதற்குத் தேவையான இரசாயணத்தையும் சேர்த்தேத் தயாரித்திருப்பார்கள். அந்த இரசாயணத்தைப் பயன்படுத்தவில்லை என்றால் விதையின் விளைச்சல் சரியாக இருக்காது. ஆக, விதையையும் அதன் இரசாயணத்தையும் சேர்த்தே வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும்.

இவ்வாறு நடந்தால் விவசாயிகளுக்கு இதைவிட பேரிடி இருக்கமுடியாது. பரம்பரை பரம்பரையாகத் தொடரப்பட்ட விவசாய பாரம்பரியத்தை இழக்க வேண்டியதுதான். இந்த மாதிரியான சட்டத்தை மலேசிய அரசாங்கம் கொண்டு வருவதற்கான யோசனையில் இருக்கிறது. நிச்சயமாக இது ஆதரிக்க முடியாத ஒன்றாகும்.

இப்படியான ஒரு சட்டம் அமலுக்கு வந்தால், இந்திய விவசாயிகளை முன்மாதிரியாக கொண்டு அணி திரள நாம் தயங்கக்கூடாது. காரணம், இது ஒரு விவசாயியின் தனி மனித பிரச்சனை அல்ல. இது உணவு உட்கொள்ளும் ஒவ்வொருவரின் பிரச்சனை.

விவாசயம் சார்ந்த அரசுக் கொள்கைகள், விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமேத் தவிர கார்ப்ரேட் நிறுவனகளுக்கு அல்ல. இந்தப் பொங்கல் நன்னாளில் விவசாயிகளின் பிரச்னைகளை நம் ஒவ்வொருவரின் பிரச்சனையாகப் பாவித்து செயல்பட வேண்டும் என பி.எஸ்.எம். கேட்டுக்கொள்கிறது.

அனைவருக்கும் தைப்பொங்கல் வாழ்த்துகள்.

—————————————————————————————————————————-சிவராஜன் ஆறுமுகம் , தலைமைச் செயலாளர், மலேசிய சோசலிசக் கட்சி