எஸ்.பி.எம். தேர்வுக்கு மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுங்கள்

பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெறவுள்ள, எஸ்பிஎம் தேர்வுக்கான பிற மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ளுமாறு புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கல்வி அமைச்சைக் கேட்டுக் கொண்டார்.

தேர்வு மையத்தில் கோவிட் -19 தொற்றுநோய் பரவுவது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய அமைச்சு தவறியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

“2020-ஆம் ஆண்டின், கிட்டத்தட்ட 400,000 மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வுக்கு அமரவிருக்கின்றனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி வளாகங்களில் கிருமி நீக்கம், தனிமைப்படுத்துதல் போன்றவற்றில் சுகாதார அமைச்சின் செந்தர இயங்குதல் நடைமுறையைக் (எஸ்ஓபி) கடைபிடிக்க வேண்டுமானால், தேர்வு அட்டவணையில் நிச்சயமாக பெரிய தாக்கம் இருக்கும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதற்கு மாற்றாக, அரசாங்கம் இரண்டு விருப்பங்களைப் பரிசீலிக்க முடியும் என்று ராஜீவ் கூறினார்.

அவற்றில் ஒன்று, 2020 எஸ்பிஎம் தகுதிகாண் சோதனையின் முடிவுகளை (keputusan percubaan SPM), நாடு முழுவதும் நியாயமான மதிப்பீட்டைப் பிரதிபலிக்கும் மாற்றங்களுடன் உண்மையான முடிவாகப் பயன்படுத்துவது.

“இதற்காக, தகுதிகாண் தேர்வை முடிக்காதப் பள்ளிகளை அவ்வாறு செய்ய அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

இரண்டாவது, 2019-ஆம் ஆண்டு நான்காம் படிவத்திலிருந்து, மாணவர்களின் கல்வி செயல்திறனை அமைச்சு பரிசீலிப்பது என்றார் அவர்.

“இயங்கலை வகுப்புகளில் பங்கேற்க முடியாததால் தோல்வியடைந்த மாணவர்களின் அதிகரிப்பு இதனால் குறைய வாய்ப்புண்டு,” என்று அவர் கூறினார்.

எஸ்பிஎம் நாட்டின் மிகப்பெரியத் தேர்வு என்று வர்ணித்த ராஜீவ், இந்தத் தேர்வு ஒரு மாணவரின் எதிர்காலத்திற்கு முக்கியமாக இருக்கக்கூடும் என்றார்.

“இதனால் இப்போதைக்கு, சிலர் உயர்க்கல்வி விண்ணப்பங்களுக்கான காலக்கெடுவை இழக்கவும் நேரிடும்,” என்றும் அவர் சொன்னார்.