“தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை” – பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து

தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி, தைத்திருநாளின் முதல் நாள் உழவர் திருநாளாகவும், உழவு தொழிலுக்கு உதவி செய்யும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் தமிழர் திருநாள் என்ற சிறப்பைப் பெற்று விளங்குகிறது. இந்த தினத்தில் சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் வீடுகளில் பொங்கலிட்டு கொண்டாடுவது வழக்கமாகும்.

இதன்படி அதிகாலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு வண்ணக்கோலமிட்டு, பொங்கல் வைத்தனர். வீடுகளில் மட்டுமல்லாது பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என பல்வேறு இடங்களிலும் சாதி, மத வேறுபாடுகளின்றி பொங்கல் வைத்து தமிழர் திருநாள் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், “தமிழ்ச் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள்” என தமிழில் பதிவிட்டுள்ளார்.

தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் பண்டிகை இது என்று தெரிவித்துள்ள அவர் இந்த தைத்திருநாளில் நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியை பெறுவோம் என்று கூறியுள்ளார். மேலும் இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வை பெருக்கவும் இந்த பண்டிகை நம்மை தூண்டட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

dailythanthi