ஜனவரி 20 முதல், அனைத்து மாணவர்களும் இயங்கலையில் கற்றலைப் பின்பற்றுவர்

அனைத்து தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களும், ஜனவரி 20 முதல் தொடங்கவுள்ள கல்வியாண்டை, அவரவர் பொருத்தத்திற்கு ஏற்ப, வீட்டிலேயேக் கற்பித்தல் மற்றும் கற்றல் முறைகளைப் (பி.டி.பி.ஆர்.) பின்பற்றுவர் எனக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

முக்கியமான தேர்வுக்கு அமரவிருக்கும் மாணவர்கள் மட்டுமே ஜனவரி 20 முதல் பள்ளி அமர்வுக்குப் பள்ளி திரும்ப வேண்டும் என்றும் அது கூறியுள்ளது.

இதில், எஸ்.பி.எம்., எஸ்.வி.எம்., எஸ்.கே.எம்., எஸ்.டி.பி.எம்., எஸ்.டி.ஏ.எம்., டி.வி.எம். 2020 மற்றும் அவற்றுக்குச் சமமான சர்வதேசத் தேர்வுகளும் அடங்கும்.

தேர்வு வகுப்புகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், கற்றல் கற்பித்தலுக்காக நேருக்கு நேர் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கல்வி அமைச்சு நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்லது.

“பிற ஆசிரியர்கள் பி.டி.பி.ஆர்.-ஐ மேற்கொள்வதோடு, பள்ளி முதல்வர் அல்லது தலைமையாசிரியர் நிர்ணயித்த தேவைகளின் அடிப்படையில் பள்ளிக்கு வரவேண்டும்,” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கல்லூரி விடுதிகளுக்குச் சென்றுவிட்ட மெட்ரிகுலேஷன் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களின் (ஐபிஜி) மாணவர்களும், கலப்பின (hybrid) முறையில் கற்றலைத் தொடர, அந்தந்தக் கல்லூரிகளிலேயேத் தங்க வேண்டும் என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

“விடுதிகளில் இன்னும் பதிவு செய்யாத மாணவர்கள், விடுதிக்கு செல்லவோ அல்லது அவரவர் வீடுகளில் தங்கி, இயங்கலையில் கற்கவோ தேர்வு செய்யலாம்.

அனைத்து ஐபிஜி மாணவர்களுக்கும், ஜனவரி 17 முதல் இயங்கலையில் கற்றல் கற்பித்தல் தொடங்கும்.”

மேலும், கல்வி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து தனியார் மழலையர் பள்ளிகளும் தொடர்ந்து நேருக்கு நேர் கற்றல் கற்பித்தலில் செயல்பட முடியும்.

கல்வி அமைச்சில் பதிவு செய்யப்படாத பள்ளிகள், மாநில அரசின் கீழ் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கல்வி அமைச்சு பரிந்துரைத்துள்ளது.