கோவிட் -19 தாக்கம் குறையும் வரை எஸ்பிஎம்-ஐ ஒத்திவைக்க வேண்டும்

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் எஸ்.பி.எம். 2020 தேர்வைக், கல்வி அமைச்சு ஒத்திவைக்க வேண்டுமென பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளைஞர்கள் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது.

கோவிட் -19 தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்ததும், மாணவர்களுக்கு முற்றிலும் பாதுகாப்பான பிரிதொரு பொருத்தமான தேதிகளை நிர்ணயிக்க வேண்டும் என அக்குழு வெளியிட்ட ஓர் கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை, ஆல்பர்ட் லீ (பி.கே.ஆர். இளைஞர் கல்விப் பிரிவு), கிரண் ராஜ் சாதிவேல் (மலேசிய இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்), கால்வின் இயோ (மலேசிய இளம் ஜனநாயகக் கட்சி), எம் ஜெய் ராஜ் முரேஷ் (Enlight Malaysia), ஓய் மெய் மெய் (மலேசியாவுக்காக) மற்றும் இர்ஃபான் மஹ்சன் (சமூக ஜனநாயக அமைப்பு – டெமுடா) ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

“எஸ்பிஎம் பொதுத் தேர்வு பொருத்தமான பிரிதொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் ராட்ஸி ஜிடினுக்கு நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்,” என்று அவர்கள் கூறினர்.

இருப்பினும், அக்கூட்டு அறிக்கையில் எஸ்.வி.எம், ஸ்டாம் மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளைப் பற்றி குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டு, கற்றலில் இடையூறுகளைச் சந்தித்த பி40 குழுவிற்குக் கல்வியாளர்கள் வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

“குறிப்பாக, பி40 குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள், இயங்கலை கற்றலில் கலந்துகொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கினர், அவர்களின் பெற்றோர்களால் கணினிகள் வாங்க முடியாத சூழல்.

“சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடத்திட்டத்தைப் பின்பற்ற முடியவில்லை, எனவே எஸ்.பி.எம். தேர்வில் அமர, அவர்களால் தங்களைத் தயார்படுத்த முடியவில்லை,” என்று அவர்கள் கூறினர்.

இந்தப் பிரச்சினை, பி40 குழுவைச் சார்ந்த மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து எஸ்பிஎம் மாணவர்களும் தங்களைத் தயார்படுத்திகொள்வதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

“மலேசியாவில், அதிகரித்துவரும் கோவிட் -19 பாதிப்புகளின் எண்ணிக்கை, எஸ்பிஎம் மாணவர்களின் பெற்றோர்களையும் பாதுகாவலர்களையும் கவலையடையச் செய்கிறது.

“இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்,” என்று அவர்கள் கூறினர்.