பி.கே.ஆர். : மலேசியா இனி முதலீட்டாளர்களின் தேர்வாக இருக்காது

வாகனத் துறையில் முதலீடு செய்ய, அண்டை நாடுகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தெரிவு செய்துள்ளது, மலேசியா இனி அவர்களின் தேர்வாக இருக்காது என்பதை நிரூபிக்கின்றது என்று பி.கே.ஆர். தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

ஜொகூர், தஞ்சோங் பெலெபாசில்,  வோக்ஸ்வேகன் பிராந்திய உதிரி பாகங்கள் விநியோக மையம் திறந்து வைக்கப்பட்டது, நாடு கோவிட் -19 தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது மலேசியப் பொருளாதாரம் இன்னும் வலுவாக உள்ளது என்பதை நிரூபிப்பதற்கான ஒரு நடவடிக்கை அல்ல என்று சையத் இப்ராஹிம் சையத் நோ கூறினார்.

தஞ்சோங் பெலெபாஸ் வோக்ஸ்வேகன் உபரிபாகம் விநியோக மையம்

“மலேசியாவின் பொருளாதாரமும் முதலீடும் இன்னும் வலுவாக இல்லை என்பதற்கு இது சான்றாகும்.

“2016-ல் அறிவிக்கப்பட்ட இந்தப் பிராந்திய மையத்தைத் திறக்கும் திட்டம், 2018 இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டது.

“ஆனால், நம்பிக்கையில்லாப் பொருளாதாரம் மற்றும் நிலையற்ற நாட்டின் நகர்வு காரணமாக, இது 2021-ம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டுமே செயல்படுத்த முடிந்துள்ளது. இது தொற்றுநோய் காலகட்டத்தில், நேரடி அந்நிய முதலீட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டு அல்ல,” என்று அந்த ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், அந்நிய முதலீட்டை நாட்டிற்குள் கொண்டுவருவதில் அரசாங்கம், குறிப்பாக நிதி அமைச்சும் சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சும் இன்னும் தீவிரமானப் பங்கை வகிக்க வேண்டும் என்று சையத் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

மக்களுக்கும் மலேசியப் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் வகையில், ஆய்வு செய்து ஒரு முதலீட்டுத் திட்டத்தை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஜனவரி 17 அன்று, நிதியமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் தனது முகநூலில், தஞ்சோங் பெலேபாசில் வோக்ஸ்வேகன் பிராந்திய உதிரி பாகங்கள் விநியோக மையத்தை திறப்பது குறித்து பதிவு செய்திருந்தார்.

பன்னாட்டு நிறுவனங்களின் முக்கிய வணிக மையமாக, மலேசியாவின் நிலைக்கு இது ஒரு சான்று என்று அவர் கூறினார்.

வலுவான உள்கட்டமைப்புடன், எதிர்காலத்தில் உலகத் தரம் வாய்ந்த தொடர்புகள் மற்றும் ஆயத்த திறமைகளுடன், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் விரிவாக்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மலேசியா ஒரு முக்கிய இடமாக இருக்கும் என்றார்.

முந்தையக் கட்சிகளின் முயற்சிகளில், தெங்கு ஜஃப்ருல் தனது பெயரை போட்டுக்கொள்ளக் கூடாது, மாறாக அரசாங்கம் இன்று நாட்டின் பொருளாதாரத் துறைக்கு வலுவான திட்டங்களைக் கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றார் சையத் இப்ராஹிம்.

இப்போது, ஆசியப் பிராந்தியத்தில், அண்டை நாடுகளைக் குறிவைத்து முதலீடுகள் போகின்றன லெடாங் எம்.பி.யுமான அவர் மேலும் சொன்னார்.

“இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை (பி.கே.பி. 2.0) மற்றும் அவசரகால நிலை, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

“எடுத்துக்காட்டாக, மலேசியாவில் வேகமாக வளர்ந்து வந்த வாகன தொழிற்கூடங்கள் இப்போது தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மாறுகின்றன.

“ஹூண்டாய் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் இப்போது அண்டை நாடுகளான தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களில் கிளைகளைத் திறக்க முனைகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.