அவசரநிலை செயற்குழுவில் பி.எச். இணையும்

அவசர காலம் குறித்து மாட்சிமை தங்கியப் பேரரசருக்கு ஆலோசனை வழங்க உடனடியாக அமைக்கப்படவுள்ள சுயாதீனச் செயற்குழுவில் இணைய, பி.எச். மூன்று  பெயர்களைச் சமர்ப்பிக்கும்

இன்று இயங்கலை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பி.எச். தலைவர் அன்வர் இப்ராஹிம், அக்குழு குறித்த விவரங்களைச் சட்டத்துறை அமைச்சர் தக்கியுதீன் ஹசான் பி.எச்.க்கு வழங்கியதாகச் சொன்னார்.

இதனையடுத்து, பி.கே.ஆர். தலைமைச் செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், இன்று மூன்று பி.எச் பிரதிநிதிகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 12-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசின் அறிவிப்பின்படி, இந்தக் குழுவில் அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் வல்லுனர்களும் இடம்பெறுவர்.

“அச்சிறப்புக் குழு, கோவிட் -19 தொற்றுநோய் தணிந்துவிட்டது அல்லது முழுமையாக மீண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியவுடன், தேர்தல்கள் நடைபெறும் என்று நான் உறுதிப்பாட்டைக் கொடுத்துள்ளேன், தேர்தல்கள் பாதுகாப்பான முறையில் நடைபெற வேண்டும்,” என்று முன்னதாக முஹைதீன் கூறியிருந்தார்.

இன்றையச் செய்தியாளர் கூட்டத்தில், நேற்று அகோங்கிற்கு பி.எச். கடிதம் ஒன்றை அனுப்பியதாகவும் அன்வர் கூறினார்.

“அவசரகாலப் பிரகடனம் குறித்த அவரது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

“இரண்டாவதாக, அவசரகாலத்தில், எந்த நேரத்திலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த உத்தரவிட மன்னருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த வேண்டும் என்று நாங்கள் முன்மொழிகிறோம்,” என்று அவர் கூறினார்.

அவசரக்காலச் சிறப்புக்குழு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலிருந்து வேறுபட்டது என்றும் அன்வர் வலியுறுத்தினார்.

“அக்குழுவை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் அது தீர்வு அல்ல. அரசாங்கத்திலிருந்து நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மூன்று பேரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்குச் சமமானவர்கள் அல்ல.

“இது சில குறிப்பிட்ட ஆலோசனைகளை (அகோங்கிற்கு) வழங்குவதற்கானது. இது மன்னரின் உத்தரவு என்பதால், நாங்கள் ஒத்துழைக்க முடிவு செய்தோம்,” என்று அவர் கூறினார்.