ஜெ., நினைவிடம் திறப்பு; பிரதமர் பங்கேற்பா?

சென்னை : ஜெயலலிதா நினைவிடம், வரும், 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க வாய்ப்பில்லை என, தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு சார்பில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் திறந்து வைப்பார் என, தகவல் வெளியானது.முதல்வர் இ.பி.எஸ்., டில்லி சென்றபோது, நினைவிடம் திறப்புக்கு, பிரதமரை அழைக்க உள்ளதாக கூறப்பட்டது.

அதனால், ஜெ., நினைவிடம் திறப்புக்கு, பிரதமர் வருவாரா என்ற எதிர்பார்ப்பு, அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஏற்பட்டது.இந்நிலையில், 27ம் தேதி காலை, 11:00 மணிக்கு, ஜெ., நினைவிடத்தை, முதல்வர் திறந்து வைப்பார் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதைத் தொடர்ந்து, ஜெ., நினைவிடத்தை திறக்க, பிரதமர் வராதது உறுதியாகி உள்ளது. அதேநேரம், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவடைந்த திட்டங்களை திறந்து வைக்கவும், பிரதமருக்கு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று, பிரதமர் மோடி விரைவில் தமிழகம் வருவார் என, தெரிகிறது

dinamalar