தங்க சுரங்க விபத்து: 14 நாட்களுக்கு பின் 11 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு

சீனாவில் தங்க சுரங்க வெடிவிபத்தில் சிக்கிய 11 தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர்.

ஷான்டோங், சீனாவில் அதிக அளவில் கனிம வளங்கள் காணப்படுகின்றன.  ஏராளமான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே உரிய அனுமதி பெற்றும், முறையான பாதுகாப்பு அம்சங்களுடனும் செயல்படுகின்றன.

பல சுரங்கங்கள் அனுமதி இல்லாமலும், பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாத ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன. இதனால் சீனாவில் அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட சுரங்க தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர்.

உலகிலேயே சீனாவில் தான் மிகவும் மோசமான மற்றும் அதிக அளவிலான சுரங்க விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் சீன அரசு இதில் கவனம் செலுத்தாததால் சுரங்க விபத்துகள் தொடர்ந்து வருகின்றன.

கடந்த செப்டம்பரில் கூட சீனாவின் தென்மேற்கே நிலக்கரி சுரங்கம் ஒன்றில் 16 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர்.  அதிக அளவிலான கார்பன் மோனாக்சைடு என்ற விஷவாயு கசிவால் அவர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர்.

சீனாவின் கிழக்கே ஷான்டோங் மாகாணத்தில் யன்டாய் நகரில் குவிக்சியா என்ற பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதில், சுரங்க தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 10ந்தேதி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் சுரங்க பணியில் ஈடுபட்டிருந்த 22 தொழிலாளர்கள் சிக்கி கொண்டுள்ளனர்.  அவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  இதில், சுரங்கத்தில் சிக்கி கொண்டவர்கள் தட்டி ஒலி எழுப்பி உள்ளனர்.  இந்த சத்தம் கடந்த 17ந்தேதி மீட்பு பணியாளர்களுக்கு கேட்டுள்ளது.  கடந்த திங்கட்கிழமை தொழிலாளர்கள், மீட்பு பணியாளர்களிடம் பேசியுள்ளனர்.

மருந்து, வலி நிவாரணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பற்றி எடுத்து கூறியுள்ளனர்.  தொடர்ந்து துளை போட்டு மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன.  இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தொழிலாளர் ஒருவரை மீட்டனர்.  அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன்பின்னர் 10 தொழிலாளர்களை மீட்டுள்ளனர்.  2 ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து மீட்கப்பட்ட அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  மற்றொரு 2 தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்டுவார்கள் என கூறப்படுகிறது.  ஒருவர் கடந்த புதன்கிழமை பலத்த தலை காயங்களால் உயிரிழந்து விட்டார்.

இதேபோன்று மீதமுள்ள 10 தொழிலாளர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.  அவர்கள் சுரங்கத்தில் ஆழம் நிறைந்த பகுதியில் உள்ளனர் என கூறப்படுகிறது.  அவர்களை அடைய இன்னும் 2 வாரங்கள் ஆகும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்

dailythanthi