இலங்கை மனித உரிமை மீறலை விசாரிக்க ஜனாதிபதி கோட்டாபய நியமித்த குழு: தமிழர் கட்சிகள் என்ன சொல்கின்றன?

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

மூவர் அடங்கிய ஆணைக்குழு, கடந்த 20ம் தேதி முதல் அமலுக்குவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தர வர்த்தமானி அறிவிப்பு செய்துள்ளார்.

உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி.நவாஸ் தலைமையில் இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவில் ஓய்வு பெற்ற போலீஸ் மா அதிபர் சந்திரா பெர்ணான்டோ மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட செயலாளர் நிமல் அபேசிறி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இந்த ஆணைக்குழுவில் தமிழர்கள் எவரும் இடம்பிடிக்கவில்லை.

6 மாத காலப் பகுதியில் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்துதல், ஆராய்தல் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனவா என்பது குறித்தும் இந்த ஆணைக்குழு விசாரணை நடத்தும்.

விசாரணைகளுக்குப் பின்னர், அரசாங்கத்துக்கு இந்த ஆணைக்குழு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ள இந்த ஆணைக்குழு, ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கிறது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், பிபிசி தமிழிடம் பேசும்போது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் மனித குலத்திற்கு எதிரான யுத்தக் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்பது, தமிழர்கள், சர்வதேச அமைப்புக்களின் குற்றச்சாட்டு மட்டுமல்ல, ஐநாவின் குற்றச்சாட்டும் அதுவே என அவர் கூறுகிறார்.

இந்த குற்றங்களை இழைத்தவர் என்ற குற்றச்சாட்டு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திலுள்ள முக்கியஸ்தர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்களை இழைத்தவர்கள், தங்களே விசாரணைகளை நடத்தி, தங்களை தாங்களே தண்டித்துக்கொள்ளப் போவதில்லை என செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கிறார்.

அதனாலேயே, பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையொன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக நடத்தப்பட வேண்டும் என தாம் கோருவதாக அவர் கூறுகிறார்.

இலங்கை அரசாங்கம் ஒரு ஆணைக்குழு அல்ல, 10 ஆணைக்குழுக்கள் நியமித்தாலும், அதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிடுகிறார்.

இயற்கை நீதிக்கு முரணாக, யுத்த குற்றவாளிகளே நீதியாளர்களாக இருந்து விசாரிக்க முடியாது என்றும் செல்வராசா கஜேந்திரன் கூறுகிறார்.

’தம்பி ஜனாதிபதியிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது’

இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை ஆணையகம் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள தீர்மானத்தை சமாளிக்கும் வகையில், கண் துடைப்பிற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

ஐநா மனித உரிமை ஆணையகத்தை சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

இலங்கைக்கு எதிராக கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

உள்நாட்டிற்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையரைக்கு அப்பால் சென்று, பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என மனோ கணேசன் கூறுகின்றார்.

அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு என அவர் கூறுகிறார்.

இதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.

மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிக சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்ததாக கூறிய அவர், அந்த பரிந்துரைகளை கூட “அண்ணன் ஜனாதிபதி செயல்படுத்தவில்லை” என அவர் தெரிவிக்கிறார்.

“இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

ஆகவே, இது கண்துடைப்பு என்பதே தனது உறுதியான நிலைப்பாடு என மனோ கணேசன் தெரிவிக்கிறார்.

’ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்து மனித உரிமைகளை மீறுகிறது’

ராஜபக்ஷ அரசாங்கம் தொடர்ந்தும் மனித உரிமைகளை மீறி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சாணக்கியன் கூறினார்.

இந்த நிலையில், மனித உரிமை மீறல் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ள ஆணைக்குழு மீது நம்பிக்கை வைக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்த குழுவிலுள்ளவர்கள் சரியான முறையில் செயல்பட்டாலும், அரசாங்கத்தின் மீது தமக்கு நம்பிக்கை வைக்க முடியாது என அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த காலங்களை விடுத்து, தற்போது இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தாது இந்த அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அவர் கூறுகிறார்.

கோவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தகனம், மஹர சிறைச்சாலையின் துப்பாக்கிச் சூடு போன்ற மனித உரிமை மீறல்கள் தற்போதைய ஆட்சியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஜே.வி.பி கலவரத்தின் போது, மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவாவிற்கு முதலில் சென்றார் என ஆர்.சாணக்கியன் கூறுகிறார்.

சிங்கள மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு ஜெனீவா சென்ற மஹிந்த ராஜபக்ஷ, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடவடிக்கைகளின் போது, உள்நாட்டு விசாரணைகளை கோருவதாகவும் குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்புக்கான நடவடிக்கை என்கிறார் சாணக்கியன்.

’தமிழர் ஒருவரை இணைத்துக்கொள்ள வேண்டும்’

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவில் கட்டாயம் தமிழர் ஒருவர் இடம்பிடித்திருக்க வேண்டும் என அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன்  தெரிவிக்கிறார்.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்ரீபவனை, இந்த குழுவில் இணைத்துக்கொள்ளுமாறு தான் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறித்த ஆணைக்குழுவில் தமிழர் ஒருவர் இணைத்துக்கொள்ளப்படும் பட்சத்தில், அது உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவுடன் உருவான அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் காணப்படுவதாக கூறிய அவர், அதனால் சிங்கள மக்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கு அமைய செயற்படுவது தவறான விடயம் கிடையாது என்கிறார் அவர்.

ஆனால், யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் தமிழர்களுடன் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்திற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் கடந்த ஒரு வருடமாக தாமதிக்கப்பட்டு அல்லது தடைக்கு உள்ளாகி வருவதாக அவர் கூறுகிறார்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்பட வேண்டும் என்றால், மூவின மக்களது எதிர்பார்ப்புக்களை ஒன்றிணைக்கக்கூடிய ஒரு திட்டத்திற்குள் கொண்டு வருவதே தலைமைத்துவத்தின் முக்கிய பொறுப்பாக இருக்கிறது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் குறிப்பிடுகிறார்.

BBC