`ஓராண்டு கழிந்தது, கோவிட் -19 எப்போது முடியும் என்று தெரியவில்லை’

கோவிட் -19 தொற்றின் முதல் வழக்கை மலேசியா அறிவிப்பு செய்து, இன்றோடு ஒரு வருடம் நிறைவடைகிறது, ஆனால் தொற்றுநோய் பரவல் இன்னும் ஒரு முடிவைக் காணவில்லை என்று சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“நாம் ஒரு வருடமாக கோவிட் -19 தொற்றுடன் போராடி வருகிறோம், ஆனால் இன்றுவரை அதற்கு முடிவு காணப்படவில்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது,” என்று அவர் இன்று தனது சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி, உறுதிப்படுத்தப்பட்ட மூன்று கோவிட் -19 பாதிப்புகளை மலேசியா பதிவு செய்தது. முதல் இறப்பு மார்ச் 17 வரை அறிவிக்கப்படவில்லை – கோவிட் -19 பரவுவதைத் தடுக்க நாடு முதல் சுற்று நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைகளை அமல்படுத்துவதற்கு ஒரு நாள் முன்புவரை.

 

தற்போது, ​​கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய கோவிட் -19 தொற்றின் மூன்றாவது அலைக்கு மலேசியா உட்பட்டுள்ளது, ஆனால் இதுவரை குறைந்து வருவதற்கான அறிகுறிகளை அது காட்டவில்லை.

இந்த மாத நிலவரப்படி, கோவிட் -19 காரணமாக 207 இறப்புகள் பதிவாகியுள்ளன, கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது 111 மட்டுமே.

தற்போது, ​​பொது சுகாதார அமைப்பு மோசமடைந்து வருகிறது, நெருங்கிய தொடர்புகளைக் கண்டறிவதை மட்டுப்படுத்த சுகாதார அமைச்சை அது கட்டாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், அறிகுறிகள் இல்லாதவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இது அவர்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது எனினும்.

சுகாதார ஊழியர்கள் இப்போது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்ந்து போயிருந்தாலும், அவர்களும் ஒட்டுமொத்த சமூகமும் இத்தொற்று பரவுவதைத் தடுக்க தொடர்ந்து போராடியே ஆக வேண்டும் என்று டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.

“எல்லோரும், நீங்கள் யாராக இருந்தாலும், நமது நாட்டைக் காப்பாற்ற இந்தப் பொறுப்பை இணைந்து ஏற்க வேண்டும்.

“எஸ்ஓபியைப் பின்பற்றுங்கள், முகமூடியைச் சரியாக அணிந்து கொள்ளுங்கள், கைகளைக் கழுவுங்கள், சமூக இடைவெளியைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு அவசரத் தேவைகள் எதுவும் இல்லையென்றால் வீட்டிலேயே இருங்கள்.