என்யூடிபி : 11 ஆசிரியர்கள் பாதிப்பு, பிபிஇ கொடுக்கப்பட்டதா? எஸ்ஓபி பின்பற்றப்பட்டதா?

மாணவர்களுக்கு நேருக்கு நேர் கற்பிக்கப் பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களின் பாதுகாப்பு அம்சங்களை மறுஆய்வு செய்ய வேண்டுமென, மலேசியத் தேசியக் கற்பித்தல் சேவை சங்கம் (என்யூடிபி) மலேசியக் கல்வி அமைச்சைக் கேட்டுகொண்டுள்ளது.

திரெங்கானுவில் 11 ஆசிரியர்கள் கோவிட் -19 தொற்றுக்கு இலக்கானதைத் தொடர்ந்து இக்கேள்வி எழுந்துள்ளது.

“அந்தச் செய்தி குறித்து ஏமாற்றத்தையும் கவலையையும் என்யூடிபி வெளிப்படுத்த விரும்புகிறது, அவர்களுக்குக் கோவிட் -19 தொற்று சோதனை நேர்மறை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

“இல்லமிருந்து கற்றல், கற்பித்தல் (பிடிபிஆர்) பட்டறையில் கலந்துகொள்ள ஆசிரியர்களைக் கூட்டிய கோலா திரெங்கானு மாவட்டக் கல்வி இலாகாவின் உற்சாகத்தால், இன்று அந்த ஆசிரியர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்,” என்று என்யூடிபி பொதுச்செயலாளர் ஹேரி தான் ஹுவாட் ஹோக் கூறினார்.

 

கோல திரெங்கானு மாவட்டக் கல்வி இலாகா ஏற்பாடு செய்த நேருக்கு நேர் பிடிபிஆர் பயிலரங்கில் அந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

“ஆசிரியர்களுக்கு முகமூடிகள், காப்புச் சட்டைகள் போன்ற தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) வழங்கப்பட்டதா அல்லது முறையான எஸ்ஓபி-க்கள் கடைப்பிடிக்கப்பட்டதா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், சில பள்ளிகள் ஆசிரியர்களைக் காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கற்பிக்க கட்டாயப்படுத்துவதாக என்யூடிபி கூறுகிறது, அதே நேரத்தில் அதிகாரப்பூர்வப் பள்ளி நேரம், காலை அமர்வுக்குப் பிற்பகல் 2.30 மணி வரையும், கூடுதல் வகுப்புகளுக்குப் பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் மட்டுமே உள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளி செல்லும் அட்டவணையைக் கல்வி அமைச்சு ஒருங்கிணைக்க வேண்டும், இதனால் அவர்களின் உடல்நலம் பாதிக்கப்படாது என்றும் என்யூடிபி பரிந்துரைத்தது.

“பள்ளியில் அதிக நேரம் இருப்பது, நிச்சயமாக எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களின் ஆர்வத்தைப் பலவீனப்படுத்தும்.

“மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும், ஏனென்றால் உடலை வலிமையாக்கும் மற்றும் நோய்த்தடுப்பு சக்தியை வலுப்படுத்தும் ஓய்வு நேர நடவடிக்கைகளில் ஈடுபடாமல், அவர்கள் வகுப்பறையில் மட்டுமே சிக்கித் தவிக்கிறார்கள்,” என்று அவர் மேலும் கூறினார்.