‘கிம்மா’வை கைப்பற்றும் எண்ணம் பெஜுவாங்’கிற்கு இல்லை

மலேசிய முஸ்லீம் இந்தியக் காங்கிரஸ் (கிம்மா) கட்சியை, பெஜுவாங் கைப்பற்ற எண்ணங்கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டை, டாக்டர் மகாதீர் முகமதுவின் அரசியல் செயலாளர் அபுபக்கர் யஹ்யா மறுத்துள்ளார்.

பெஜுவாங் கிம்மாவைக் கைப்பற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்று அபுபக்கர் கூறினார், ஏனெனில் சங்கங்கள் பதிவாளரின் (ஆர்.ஓ.எஸ்.) அனைத்து தேவைகளையும் பெஜுவாங் ஏற்கெனவே பின்பற்றியுள்ளது.

“மக்கள் சொல்லலாம், அது வெறும் ஊகம்தான். பெஜுவாங், அம்னோ அல்லது பெர்சத்துவையும் கைப்பற்ற விரும்புகிறது என்றுகூட மக்கள் கூறலாம்.

“கட்சியின் பதிவு ஒப்புதல் பெற, பெஜுவாங் காத்திருக்கிறது, பெஜுவாங்’கை அரசாங்கம் அனுமதிக்காமல் இருக்க எந்தக் காரணமும் இல்லை என்று தெரிகிறது,” என்றார் அவர்.

கிம்மாவைப் பெஜுவாங் கைப்பற்றவுள்ளது என்ற வதந்திகளைப் பற்றி கேட்டபோது அபுபக்கர் இதைக் கூறினார்.

முன்னாள் பிரதமர் மகாதிர் தலைமையிலான பெஜுவாங் கட்சியை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஆர்.ஓ.எஸ். நிராகரித்துள்ளது.

இதற்கிடையில், கிம்மாவைக் கைப்பற்ற பெஜுவாங் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மகாதீருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

“அப்படியானால், அது இன்னும் பேச்சுவார்த்தைகளில் உள்ளது. கிம்மாதான் பெஜுவாங்கிற்குத் தங்கள் கட்சியைக் கொடுக்க முன்வந்துள்ளது.

“இருப்பினும், இது இன்னும் விவாதக் கட்டத்தில் உள்ளது, மேலும் பெஜுவாங்கின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

கிம்மாவைத் தவிர, இன்னும் பல சிறிய கட்சிகளும் தங்கள் கட்சியைப் பெஜுவாங்கிற்கு விட்டுக்கொடுக்க முன்வந்துள்ளன.