அரசியல் தலையிடுவதை எதிர்த்த சாலே அபாஸ் ஒரு சகாப்தம் – சீலதாஸ்

தொண்ணூற்று ஒன்றாம் வயதைக் கடந்த மலேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, துன் டாக்டர் சாலே அபாஸ் கடந்த ஜனவரி பதினாறாம் நாள், கோவிட்-19தின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார்.

மலாயா, பின்னர் மலேசியா, சுதந்திரம் அடைந்த பின் பலர் நாட்டின் தலைமை நீதிபதிகளாப் பணியாற்றினர். இந்நாட்டில் பிறக்காத, இந்நாட்டின் குடிமகனாக இல்லாத துன் தாம்ஸன்தான் இறுதி வெள்ளைக்கார தலைமை நீதிபதி. அவருக்குப் பின் இந்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றனர்.

துன் தாம்ஸன்

துன் தாம்ஸன் ஓய்வுபெறும்போது வெளியிட்ட செய்தியில், தமக்குப் பிறகு பொறுப்பேற்பவர்கள் திறமையானவர்கள். எனவே, அவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதில் மகிழ்வு கொள்வதாகவும், நீதி பரிபாலனம் நல்ல கைகளில் இணைந்து இருக்கிறது என்று குறிப்பிட்டார் (மலாயன் சட்ட இதழ், 1965).

தாம்ஸனின் கருத்தை வியாக்கியானம் செய்து பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். அதாவது, நீதிபதிகளின் தனிச்சிறப்பு மிகுந்த பொறுப்பு அரசமைப்புச் சட்டத்தில் இருந்து உதயமாகிறது. அரசமைப்புச் சட்டம் என்றாலே அது நாட்டின் நிர்வாகம். நிர்வாகப் பொறுப்பாளர்கள் எவர், அவர்களின் அதிகார வரம்பு யாது என்பன போன்றவற்றை விளக்குகிறது.

எனவே, பேரரசர், மாநில ஆட்சியாளர்கள், ஆளுநர்கள், பிரதமர், அமைச்சரவை, அமைச்சரவை உறுப்பினர்கள் யாவரும், காவல்துறை, இராணுவத்துறை, தேர்தல் ஆணையம், நீதி துறை மற்றும் ஏனைய துறைகள் உட்பட தங்கள் அதிகாரத்தை அரசமைப்புச் சட்டத்திலிருந்து பெறுகிறார்கள்.

இந்த நாட்டைப் பொறுத்தவரையில் இந்நாட்டின் அரசமைப்புச் சட்டம்தான் பிரதானமானது, உயர்ந்தது. அதை மீற முடியாது. அதிலிருந்துதான் எல்லோரும் தங்களின் அதிகாரத்தை, உரிமைகளைப் பெறுகிறார்கள். சாதாரண குடிமகனும் தன் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள அரசமைப்புச் சட்டம் உதவுகிறது.

ஒவ்வொரு நீதிபதியும் பதவி பிரமாணம் எடுக்கும்போது, தலைமை நீதிபதியைத் தவிர, எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். தலைமை நீதிபதி அரசமைப்புச் சட்டத்தின் வழியாக அதிகாரத்தை ஏற்கும்போது கொடுக்கும் பதவி உறுதிமொழி அல்லது சத்திய வாக்கானது, “நான் மனப்பூர்வமாக என் பதவி பொறுப்புகளை என் சக்திக்கு ஏற்றவாறு செய்து முடிப்பேன், மலேசியாவுக்கு உண்மையாகவும் விசுவாசத்துடன் இருப்பதுடன் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, காப்பாற்றி தற்காப்பேன் என்றிருக்கிறது”.

மாமன்னரும் மற்றும் ஏனைய உயர் பொறுப்பாளர்களும் இப்படிப்பட்ட வாக்குறுதியை நல்குகிறார்கள். ஆனால், கூட்டரசு, மேல்முறையீட்டு, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வாக்குறுதியில் பதவி தொடர்பான பொறுப்புகள் என்ற சொற்களுக்குப் பதிலாக, “என் நீதிசார் கடமைகளை” என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். நீதிசார் கடமைகளோடு, மலேசியாவுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருப்பதுடன் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, காப்பாற்றி தற்காப்பேன் என்பதனாது நீதிபதியின் பொறுப்புகளைத் தெளிவுபடுத்துகிறது. அவை வித்தியாசமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

நீதிபதிகள் தங்களின் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் தரக்கூடாது. இன, சமயம், அரசியல் சார்பு போன்றவற்றிற்கு இடம் தரக்கூடாது. அவர்களின் கடமை, நோக்கம், செயல்முறை யாவும் நாட்டைக் காக்கவும், அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

துன் சாலே அபாஸ்

இப்படிப்பட்ட உறுதிகளை எடுத்தவர்தான் துன் சாலே அபாஸ். தலைமை சட்ட முகவராக இருந்தவர் நேரடியாக நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மற்ற நீதிபதிகள் போல் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டு படிப்படியாக நீதித் துறையின் உச்சத்துக்குச் செல்லவில்லை. மலேசிய வரலாற்றில் முதல் முறையாக ஒருவர் நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் முறை அறிமுகமாயிற்று.

மலேசியாவின் சட்டத்துறை வரலாற்றில் மற்றுமொரு புதினம் ஏற்பட்டது. 1984ஆம் ஆண்டு மலேசியாவின் தலைமை நீதிபதியாக இருந்தவர் பேராக் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜா அஸ்லான் ஷா. அந்த மாநிலத்தின் பாரம்பரிய சுல்தான் மரணம் அடைந்தபோது அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய கடமைக்கு உந்தப்பட்டார் ராஜா அஸ்லான் ஷா. மலேசிய நீதித்துறையின் தலைமை நீதிபதி பதவி சாலே அபாஸுக்கு வந்து சேர்ந்தது.

துன் டாக்டர் மகாதீர்

சாலே அபாஸ் நீதித்துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபோது காலங்காலமாக நிலவுவதாக நம்பப்பட்ட நீதித்துறை சுதந்திரத்துக்கு யாதொரு இடைஞ்சலும் ஏற்படாது என்ற நம்பிக்கை வலுவடைந்திருந்தது எனலாம். அவர் தலைமையின்கீழ் நடந்த சில வழக்குகளில் தரப்பட்ட தீர்ப்புகள் அப்பொழுது பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகம்மதுக்குப் பிடிக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கு இருக்கும் ஓர் அலாதியான குணம் என்னவெனில், அவர்கள் நினைப்பது, சொல்வதுதான் நியாயம். அவர்கள் எண்ணப்படி எல்லாமே நடந்தாக வேண்டும். அப்படி நடக்காவிட்டால் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுவதில் தயங்கமாட்டார்கள். அவர்களின் கூற்றில் நியாயம் இருக்கிறதா என்பது எல்லாம் அவர்களை இம்மியளவும் துன்புறுத்தாது; நினைத்ததைச் சொல்ல வேண்டும். சிந்திப்பது பிறகு!

நடந்தது என்ன? 1984ஆம் ஆண்டு நீதித்துறையும் வரலாறு படைத்த சாலே அபாஸ், வரலாறு படைப்பதிலும் முதன்மையாகவே திகழ்ந்தார். 1988ஆம் ஆண்டு அவர் நீதித்துறை தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் என்னவெனில் சாலே அபாஸ் அன்றைய மாமன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட கருத்துக்கள், மாமன்னருக்குத் திருப்தியாக இல்லை. அந்தக் கடிதத்தில் மகாதீர் முகம்மது பிரதமர் என்ற தோரணையில் நீதிபதிகளைப் பற்றி வெளியிடும் கருத்துகள் நீதிபதிகளைச் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

நீதிபதிகளின் பொறுப்பும் அந்தஸ்த்தும் வித்தியாசமானது. அரசியல்வாதிகளோடு பொது சர்ச்சையில் ஈடுபடுவது நீதிபதிகளின் தரம் அல்ல என்று சாலே அபாஸ் குறிப்பிட்டு இருந்தார். மாமன்னரின் ஆணைப்படி சாலே அபாஸ் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். அவ்வளவுதான்.

இதுகுறித்து சாலே அபாஸ் வெளியிட்ட ஓர் அறிக்கையில், தாம் பிரதமர் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் அப்போது, அம்னோ அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாலே அபாஸ் மனச்சாய்வு காட்டுவதாகக் குற்றம் சாட்டினார் மகாதீர் முகம்மது. எனவே, சாலே அபாஸின் பணித்துறவு கோரப்பட்டது. சாலே அபாஸ் மறுத்தார். அப்படியானால் அரசமைப்புச் சட்டப்படி சாலே அபாஸின் பதவி நீக்க சட்ட முறைகள் மேற்கொள்ளப்படும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.

தீர்ப்பாயம்

சாலே அபாஸ் அச்சுறுத்தப்பட்டாலும் அவர் அதற்குப் பயந்து ஒதுங்கிவிடவில்லை. முதன்முறையாக மலேசிய வரலாற்றில் தலைமை நீதிபதி பதவி நீக்கம் தொடர்பாக விசாரிப்பதற்கான தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. அதற்குத் தலைமை தாங்கும் பொறுப்பைக் காலஞ்சென்ற துன் அப்துல் ஹமீது உமர் நியமிக்கப்பட்டார். அப்போது நீதித்துறையில் அப்துல் ஹமீது உமர் சாலே அபாஸுக்கு அடுத்தவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலே அபாஸின் நிலைப்பாடு என்னவெனில் தீர்ப்பாயம் முறையாக நியமிக்கப்படவில்லை என்பதாகும். குறிப்பாக ஹமீது உமர் தீர்ப்பாய முடிவில் அக்கறை உள்ளவர். சாலே அபாஸ் நீக்கப்பட்டால் அப்துல் ஹமீதுதான் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்பார். எனவே, அவர் தீர்ப்பாயத்தின் தலைமை பொறுப்பை ஏற்க கூடாது என்பதாகும். 1988இல் இந்த அரசமைப்பு தகராறு ஏற்பட்டபோது பதவி நீக்கம் செய்யப்பட்ட சாலே அபாஸூக்குப் பதிலாக ஹமீது உமர் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சாலே அபாஸ் நீக்கப்பட்டால் அதனால் பலனடைவது ஹமீது உமர். எனவே, அவரின் நியமனம் நியாயமானது அல்ல என்றனர் சாலே தரப்பினர்.

தீர்ப்பாயம் அமைக்கப்பட்ட முறை, அதில் அங்கம் பெற்றவர்களைக் குறித்த சந்தேகங்கள் யாவும் முறையே விசாரிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டதை இந்த நாட்டின் நீதித்துறை வரலாறு எழுதப்படும்போது நிச்சயமாகப் பல கேள்விகளை எழுப்பக்கூடும். அதே சமயத்தில் சாலே அபாஸ் தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்குபெறாமல் தவிர்த்ததும் சர்ச்சைக்குரியதாகக் கூட கருதப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம்.

சாலே அபாஸ் தனது நூலில் தாம் தீர்ப்பாய விசாரணையில் கலந்துகொள்ள மறுத்ததின் காரணத்தைத் தெளிவுபடுத்திய போதிலும் தீர்ப்பாணயத்தில் தமது வாதத் தொகுப்பை முன்வைக்காததையும் கவனிக்க வேண்டியுள்ளது. அது ஒரு பிசகான அணுகுமுறை என்ற கருத்துக்கு இடம் உண்டு.

ஆகமொத்தத்தில், சாலே அபாஸ் நடத்தப்பட்ட முறை அதாவது நீக்கப்பட்ட முறை சரியானதா என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருக்கும். அரசியலில் எதுவும் நடக்கும் என்பதை மறக்க கூடாது. எனவே, அரசியல் சதுரங்கத்தில் வல்லவரான மகாதீர் முகம்மது அரங்கேற்றிய பழிவாங்கும் படலத்தை சாலே அபாஸ் விவகாரத்தில் காண முடிகிறது என்ற சந்தேகம் நீங்குவதாகத் தெரியவில்லை.

இன்று, அதை மறுக்கும் மகாதீர், சாலே அபாஸ் நீக்க வேண்டும் என அன்றைய மாமன்னர் இட்ட உத்திரவை நினைவுப்படுத்துகிறார். மாமன்னர் பிரதமரின் ஆலோசனைப்படிதான் செயல்படுவார் என்ற சட்டம் இருக்கும்போது மாமன்னர் மட்டும் சாலே அபாஸ் நீக்கலுக்குக் காரணம் என்ற கருத்தை எற்க மறுப்பவர்களும் உண்டு.

நடந்ததை எல்லாம் சீர்தூக்கி பார்க்கும்போது, நீதித்துறை சுயேச்சையாகச் செயல்படுவதை விரும்பாத சக்திகளின் கைவரிசை சாலே அபாஸ் வழக்கில் காண முடிகிறது. மகாதீரின் ஆட்சி காலத்தில் சாலே அபாஸ் விவகாரத்தில் நாட்டின் பல முக்கிய தலைவர்கள் மவுன விரதத்தைப் பேணியதையும் காணலாம். மகாதீர் ஆட்சியிலிருந்து விலகியதும் துன் அப்துல்லா படாவியின் பிரதமர் காலத்தில் சாலே அபாஸுக்கு நீதி வழங்கப்பட்டது. அப்துல்லா படாவி அரசு அவருக்கு இழப்பீடு வழங்கி சிறப்பித்ததை வரலாறு ஒலித்துக்கொண்டே இருக்கும்!

சாலே அபாஸ் விவகாரத்தில் சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொண்டதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டான் ஶ்ரீ அஸ்மி கமாருடீன், டான் ஶ்ரீ யூசோஃப், அப்துல் காதர், டான் ஶ்ரீ வான் ஹம்ஸா, டான் ஶ்ரீ வன் சுலேய்மான், டத்தோ ஜியோர்ஜ் சியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர்கள் செய்த தவறு என்ன? சாலே அபாஸை விசாரிக்க நியமிக்கப்பெற்ற தீர்ப்பாயம் தனது விசாரணையைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்பதாகும்.

இவர்கள் பிறப்பித்த ஆணையை, தற்காலிகமாக நாடாளுமன்றத்தில் இயங்கிய தீர்ப்பாய தலைவரிடம் கொடுக்க முற்பட்டபோது, நாடாளுமன்ற நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்தது. இது முறையான செயலா என்று கேட்கத் தோன்றும். அசிங்கமான போக்கு என்றாலும் தவறான கருத்தாகாது. பின்னர் காவல் துறையினர் உதவியோடு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சேர்ப்பிக்கப்பட்டது. இந்த ஐவரில் டான் ஶ்ரீ வான் சுலேய்மான், டத்தோ ஜார்ஜ் சியா குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கும் சாலே அபாஸுக்கு கிடைத்த நீதியைப் போல் அப்துல்லா படாவியின் பிரதமர் காலத்தில் கிடைத்தது.

இந்த விவகாரத்தில் மகாதீர் முகம்மது மனம்மாறி அப்துல்லா படாவியின் நீதிமுறையை ஏற்றுக்கொண்டாரா என்றால், இல்லவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அம்னோவில் தமக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அப்துல்லா படாவியைக் கவிழ்க்க செயல்பட்ட மகாதீர் முகம்மது தம்மின் நடவடிக்கைகளால் நீக்கப்பட்ட நீதிபதிகளுக்குச் சிறப்பு வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாத மனோபாவத்தைக் கொண்டிருந்தார் என்ற கருத்துக்கும் இடம் உண்டு.

சாலே அபாஸ் சகாப்தம் சுயேச்சை நீதிபரிபாலனத்தைத் தொடர்வதை, விழைந்ததைக் காணலாம். ஆனால், அரசியல் தலையீடு அந்தச் சுதந்திர நீரோட்டத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் தரத்தைக் கொண்டிருந்தது. அது வேண்டாம் என்று சொன்னதால் சாலே அபாஸ் கொடுமையான துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். அதற்குப் பிறகு நீதித் துறை எப்படி செயல்பட்டது என்ற கேள்வி எழலாம். மலேசியாவை இஸ்லாமிய நாடு என மகாதீரும் அவரின் அன்றைய துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வர் இபுராஹீம் மேற்கொண்ட தீவிர முயற்சிகளும் நீதித் துறையில் பரவ தொடங்கியது.

1988ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் 112ஆம் பிரிவு திருத்தப்பட்டது. காலங்காலமாக நீதிமன்றங்களிடம் இருந்த நீதிமுறை அதிகாரம் நீக்கப்பட்டு, அதை வழங்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றப்பட்ட போதிலும் நீதிமன்றம் அந்த அதிகாரத்தை இழக்கவில்லை என்று வாதிட்டவர்களில் அடியேனும் ஒருவன். சுயேச்சையா நீதித்துறை என்ற எனது 1988ஆம் ஆண்டு வெளியான நூலில் இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

இந்திரா காந்தியின் வழக்கில் கூட்டரசு நீதிமன்றம் நீதிமுறை அதிகாரம் நீதிமன்றத்தில்தான் இருக்கிறது என்று தெள்ளத் தெளிய உறுதிபடுத்திவிட்டது. அதுவும் இப்பொழுது சர்ச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. சாலே அபாஸ் எதிர்கொண்ட அரசியல் தலையீடு இன்று இருக்கிறதா? காலந்தான் விளக்கும். 1965ஆம் ஆண்டு தலைமை நீதிபதி தாம்ஸன் கொண்டிருந்த நம்பிக்கை – அதாவது நீதிபரிபாலனம் சிறந்த கைகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற கருத்து மறு உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றால் அதுவும் மகிழ்வுக்குரியதே. சாலே அபாஸின் காலத்திலேயே இந்த மறு உறுதியை அவர் கண்டதானது தமது நடவடிக்கைகள் எதுவும் வீண்போகவில்லை என்பதைத் தான் உணர்த்துகிறது. மகாதீர் உணர்ந்தாரா என்பதும் ஒரு கேள்வியே!

நீதித்துறை சுயேச்சையாகச் செயல்பட்டால்தான் மக்களாட்சிக்குப் பாதுகாப்பு இருக்கும். நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது. இதை மக்கள் உணர வேண்டும்.