ஜனநாயகத்தில் அதிகார மோகமும் பின்கதவு அரசியலும் – கி. சீலதாஸ்

20.01.2021ஆம் நாள் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காணப்பட்டது. அமெரிக்காவில் ஜனநாயக, குடியரசு கட்சிகள்தான் பிரதானமானவை. அந்நாட்டில் சிறு கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து ஜனநாயக, குடியரசு கட்சிகளே அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. இந்த முறை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் முறையே அதிபராகவும் துணை அதிபராகவும் தேர்வு செய்யப்பட்டு தங்களின் பதவிகளை ஏற்றுக்கொண்டனர். இந்தப் பதவி ஏற்பு பொது நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சியின் முன்னாள் அதிபர்கள் பில் கிளின்டன், பாரக் ஒபாமா, குடியரசு கட்சியின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புது அதிபரின் பதவி ஏற்கும் பொது நிகழ்ச்சியில் ஓய்வுபெறும் அதிபர் கலந்து கொள்வதும் இயல்பானதாகும். ஆனால், இந்த முறை அதிபர் பதவியில் தொடர்வதற்காகப் போட்டியிட்டு தோல்வி கண்ட டொனல்ட் டிரம்ப், பைடன் – கமலா பதவி ஏற்கும் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. நடந்து முடிந்த அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்தார், நம்பினார் டொனல்ட் டிரம்ப். இன்றைய நிலவரப்படி நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியும் மேலவையில் குடியரசு கட்சியும் முறையே பெரும்பான்மை பெற்றிருக்கின்றன.

டொனல்ட் டிரம்பின் துணை அதிபராகச் சேவையாற்றிய மைக் பென்சின் தலைமையில் நடைபெற்ற வாக்குப் பதிவு கணக்கெடுப்பில் பைடன் – கமலா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது டிரம்புடன் சேர்ந்து போட்டியிட்டு தோல்வியுற்றதை அவர் உறுதிப்படுத்தினார். குடியரசு கட்சி தலைவர்களும் பைடன் – கமலா வெற்றியை உறுதிப்படுத்தியதோடு முறையான ஆட்சி மாற்றத்திற்கு வழி விடும்படி அறிவுறுத்தியதையும் அரசியல் நாகரிகத்தையும் கவனிக்க வேண்டும்.

இதற்கிடையில் டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க அரசின் நிர்வாக மையத்தைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சியும், அதற்கு டிரம்ப் காட்டிய ஆதரவு யாவும் ஜனநாயக நெறிகளுக்கு அப்பாற்பட்ட செயல்களாகும். டிரம்ப் மீதான சில குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இப்பொழுது அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்து கொண்டதற்கான காரணத்தை வைத்து மேலும் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம். இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது நாட்டின் நலனைக் கருதி எல்லா அரசியல் தரப்பினரும் ஒன்று கூடி ஜனநாயக நெறிகளுக்கு வழிவிட்டதைக் காண முடிகிறது.

அமெரிக்க அதிபரின் தேர்தல் நமக்கு எப்படிப்பட்ட பாடத்தைத் தருகிறது? நம் நாட்டில் 9.5.2018ஆம் நாள் மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளித்தவர்களைக் காண முடிந்ததா? இல்லை! மாறாக மக்களின் தீர்ப்பை ஏற்காதவர்களையும், மதிக்காதவர்களையும், எல்லா வகையிலும் வெற்றி பெற்ற கட்சியினர் செயல்படுவதைத் தடுப்பதில்தான் ஆர்வம் மிகுந்து இருந்ததைக் கண்டோம்.

பதினான்காம் பொதுத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றால் துன் டாக்டர் மகாதீர் முகம்மதுதான் பிரதமர் என்று உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தயங்கிய, தாமதப்படுத்திய தேர்தல் ஆணையம்; அன்றைய பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரசாக் சிறையில் இருந்த டத்தோ ஶ்ரீ அன்வரிடம் நடத்திய பேரம்; மகாதீருக்குப் பதிலாக அன்வரின் மனைவி வன் அஸிஸாவைப் பிரதமராக நியமிக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தியது யாவும் முறையான ஜனநாயக நடவடிக்கைகளா என்று கேட்கத் தோன்றும். கேட்கப்பட வேண்டிய கேள்விகள். உண்மையான பதிலை அறிந்து கொள்வதில் மக்களுக்கு உரிமையுண்டு.

இவ்வாறு நினைக்கும் போது மற்றுமொரு முக்கியமான விஷயம் நம்மைச் சிந்திக்க தூண்டுகிறது. அதாவது, அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் இரு துருவங்களாகப் போட்டியிட்ட கட்சிகள் மக்களின் தீர்ப்பை அறிந்ததும் அதை ஏற்றுக்கொண்டு நாட்டின் நலனை, மக்களின் நலனில் கவனத்தைச் செலுத்த தயார் ஆனது மெச்சத்தக்க செயல் என்பது மட்டுமல்ல அதுவே ஜனநாயகத்துக்கு அளிக்கப்படும் மரியாதை, அங்கீகாரம். மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொண்டதானது, நாட்டின் மீது பற்றும் விசுவாசமும், ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்துகிறது, உயர்வான அரசியல் உணர்வை உறுதிப்படுத்துகிறது. இந்த நாட்டில் நடந்தது என்ன? வெறுப்புணர்வுக்கும், பகைமை உணர்வுகளை வலுப்படுத்திய சக்திகளைக் கண்டோம்.

இன, சமய அரசியல் வேண்டாம் அல்லது அவற்றிற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்; மேலும் ஊழல் வேண்டாம். அதை ஒழிக்க வேண்டும்! ஊழலில் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என இந்நாட்டு மக்கள் தீர்ப்பளித்த போதிலும், அவற்றை எல்லாம் மறந்து பழைய தவறான வழியில் போக தயாரான அரசியல்வாதிகளின் அடையாளத்தைக் காண முடிந்தது.

தேர்தல் காலத்தில் எதிரும் புதிருமாகச் செயல்பட்டாலும் தேர்தலுக்குப் பிறகு அரசியல் வேற்றுமைகளை, பகைமையை ஒதுக்கி வைத்துவிட்டு நாட்டு நலனில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் முதிர்ந்த அரசியல் தரத்தை வெளிப்படுத்தும். நாட்டின் நலன் எனும்போது அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமே அன்றி அரசியல் பகைமைக்கு முதலிடம் தருவது நல்லது அல்ல. எனவே, பதினான்காம் பொதுத் தேர்தலில் தோல்வி கண்டவர்கள் நாட்டு நலனில் கவனம் செலுத்தாமல் தங்களின் சொந்த கட்சி அரசியலுக்கு முதலிடம் கொடுத்து நாட்டு நலனைப் பின்தள்ளியதைத்தான் காண முடிந்தது.

ஜனநாயக கோட்பாடு, சட்டமுறை ஆட்சி என்றெல்லாம் பறைசாற்றியவர்கள் அவற்றிற்கு எதிராகச் செயல்பட்டு அநீதிக்கு அல்லவா ஆதரவு தந்தார்கள், தருகிறார்கள். ஜனநாயகம் என்றால் நீதி தவறாத ஆட்சி முறை என்பதாகும். இதை மறந்து செயல்படுவோர் ஜனநாயகத்தின் விரோதிகள், அநீதியின் மொத்த வியாபாரிகள் என்றால் தவறாகுமா?

ஜனநாயகம் என்றால் அதில் வெற்றிக்கு இடம் உண்டு, தோல்விக்கும் இடம் உண்டு. ஆனால், அதிகார அரசியலில் மட்டும் கரிசனம் காட்டி வெற்றி பெற நினைத்துச் செயல்படுவது நாட்டின் நலனில் அல்ல அவர்களின் நோக்கம். வெற்றி பெற்றவர்களோடு இணைந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்வதையே தோல்வியுற்றவர்களின் பொறுப்பு என்றால் அதுதான் நாகரிக ஜனநாயக மரபு. இந்த உண்மையை அமெரிக்க மக்கள் தெளிவாக உணர்ந்து செயல்படுகிறார்கள்; இங்கே அப்படிப்பட்ட சிறப்புமிகு அரசியல் கலாச்சாரம் வளர்வதைத் தடுக்கும் சக்திகளைத்தான் காண்கிறோம்.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை, உலக நாடுகளில் தலைமையை விட்டுக்கொடுக்க விரும்பாத கொள்கை போன்ற நடவடிக்கைகள் பல சங்கடமான கேள்விகளை அவ்வப்போது எழுவது சர்வசாதாரணம். ஆனால், அந்நாட்டின் நலன் மீது வேறுபட்ட கொள்கைகளைக் கொண்ட யாவரும் ஒன்றுபட்டு செயல்படுவது போற்றத்தக்க, பின்பற்றத்தக்க அரசியல் கோட்பாடாகும். அமெரிக்கா நல்லதொரு இணக்க அரசியல் வழியை உலகுக்கே காட்டுகிறது.

அரசியல் அதிகாரத்துக்காகப் போராடும் தலைவர்களைப் பார்த்து எத்தகைய கேள்விகளை மக்கள் எழுப்ப வேண்டும்? உன்னால் நாட்டுக்கும், உலகுக்கும் என்ன நன்மை கிடைக்கும்? சமுதாய நீதிக்காகப் போராடுவதாகக் கூறிக்கொள்ளும் நீ எல்லா மக்களுக்கும் இன, சமய, சாதி, வர்க்க வேறுபாடின்றி செயல்படுவாயா? அல்லது இன, சமய, சாதி, வர்க்க வித்தியாசங்களுக்கு இடம் தருவாயா? நீ யார்? நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற உறுதிகொண்ட தொண்டனா? அல்லது இன, சமய, வர்க்க, சாதி சக்திகளால் குருடாகிவிட்ட பச்சோந்தியா?

நமக்குத் தூற்றும், பகைமையை வளர்க்கும் கலாச்சாரம்தான் முக்கியமாகத் தெரிகிறது. எல்லோரையும் இணைக்கும் மனப்பாங்கு இன்னும் ஏற்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவையாவும் எந்நாட்டுக்கும் பொருந்தும் கேள்விகள் அல்லவா? நாட்டு நலன் முக்கியமா? அதிகாரப் பேராசைக்கு வழிவிடலாமா? நாடு உய்வுபெற தகுதிகொண்ட தலைவர்கள் தேவையா? அல்லது தங்களின் சொந்த நலனில் கவனம் கொண்டவர்களுக்கு எப்பொழுதும் இடம் கொடுக்க வேண்டுமா? மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவதைத் துறந்தால் அது நாட்டுக்கு ஒருபோதும் பலன் தராது.