உலகெங்கும் முக்கிய பதவிகளில் இந்தியர்கள் சாதனை

வாஷிங்டன் : உலகம் முழுதும், 15க்கும் அதிகமான நாடுகளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 200க்கும் அதிகமானோர் தலைமை பதவிகளில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், 60க்கும் மேற்பட்டோர், அந்த நாடுகளில், அமைச்சர் அந்தஸ்தில் உள்ளனர்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, இந்தியா திகழ்கிறது. நம் நாட்டைச் சேர்ந்த பலர், பிரபல நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ளனர். பல்வேறு நாடுகளின் அமைச்சரவைகளில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

தமிழகம் பூர்வீகம்

அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரீஸ், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதுடன், தமிழகத்தை பூர்வீகமாக உடையவர். ‘கூகுள்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தமிழகத்தைச் சேர்ந்தவர். மேலும் பல இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், பல்வேறு நாடுகளில், தலைமைப் பொறுப்புகளில் உள்ளனர்.
வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், உலகின் பல்வேறு நாடுகளில், 3.2 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தான், உலகின் மிகப்பெரிய புலம் பெயர் மக்களைக் கொண்டுள்ளது.அமெரிக்காவில் செயல்படும் தொண்டு நிறுவனம், உலகில் பல்வேறு நாடுகளில் தலைமைப் பொறுப்புகளில் இருக்கும், இந்திய வம்சாவளியினர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், 200க்கு மேற்பட்ட இந்திய வம்சாவளியினர், 15 நாடுகளில், மிக உயர்ந்த பதவியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 60க்கும் மேற்பட்டோர், அமைச்சர் அந்தஸ்துகளில் உள்ளனர்.

அடுத்த தலைமுறை

ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், தென்னாப்ரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள், எம்.பி.,க்கள், வங்கிகளின் தலைவர்கள், மூத்த அரசு ஊழியர்கள் ஆகியோர், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இவர்களில் சிலர், அகதிகளாகவோ, பொருளாதார வாய்ப்புகளுக்காகவோ, நாட்டின் முதல் குடியேற்ற நிகழ்வுகளின் போது இங்கே வந்தவர்கள். மேலும் சிலர், கல்வி வாய்ப்புகளுக்காக, வெளிநாட்டிற்கு வந்தவர்கள் அல்லது அவ்வாறு வந்தவர்களின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
என, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருமைக்குரிய விஷயம்

உலகின் பல நாடுகளில், இந்திய வம்சாவளியினர் தலைமைப் பொறுப்புகளில் இருப்பது பற்றி வெளிநாடு வாழ் இந்தியர்கள் தெரிவித்ததாவது:அமெரிக்காவின் சிலிக்கன் வேலியைச் சேர்ந்த தொழிலதிபரும், முதலீட்டாளருமான, எம்.ஆர். ரங்கசாமி: உலகின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவின் துணை அதிபராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இருப்பது, மிகவும் பெருமைக்குரியது. இந்த தலைவர்கள், வருங்கால சந்ததியினருக்காக, ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வருகின்றனர்.

கனடாவின் செனட் சபை உறுப்பினர் ரத்னா ஓமித்வர்: உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றும் இந்திய தலைவர்களுடன், என் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன்.கனடா எனக்கு பாதுகாப்பு அளித்து, வாய்ப்புகளை வழங்கியது. அதற்கு பதிலாக, இந்நாட்டை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான பங்களிப்பை தருகிறேன்.

dinamalar