‘நாடாளுமன்றத்தைக் கூட்டுக’ – சுயாதீன பரிந்துரைக் குழுவின் பி.எச். பிரதிநிதிகள்

அவசரக்கால நிலைப்பாடு குறித்த சிறப்பு சுயாதீனக் குழுவில், உறுப்பினர்களாக உள்ள பக்காத்தான் ஹராப்பானின் (பி.எச்.) மூன்று பிரதிநிதிகளும், அவசரநிலை தொடர்ந்த போதிலும், அரசாங்கம் உடனடியாக நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர்.

இன்று வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், பேரரசருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அக்குழு, கடந்த பிப்ரவரி 18-ம் தேதி, தனது முதல் கூட்டத்தை நடத்தியதாகப் பி.எச். பிரதிநிதிகள் கூறினார்.

“அவசரநிலை இன்னும் நடைமுறையில் இருந்தபோதிலும், விரைவில் மக்களவைக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று எம்.பி.க்களான நாங்கள் கருதுகிறோம்.

“2020-ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து செந்தர இயங்குதல் நடைமுறைகளும் (எஸ்ஓபி) கடைபிடிக்கப்பட்டால், நாடாளுமன்றக் கூட்டங்கள் நடத்தப்படலாம்,” என்று அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதில் பி.எச்.-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதாவது பி.கே.ஆர். பொதுச்செயலாளர் சைபுதீன் நாசுதியோன் இஸ்மாயில், டிஏபி அமைப்பு செயலாளர் அந்தோனி லோக் மற்றும் அமானா திட்ட வகுப்பு இயக்குநர் சுல்கிப்ளி அஹ்மத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.