சிரியாவில் அமெரிக்க படைகள் தாக்குதல் – 17 பேர் பலி

சிரியா-ஈராக் எல்லையில் பதுங்கியுள்ள உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்க படையினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.

டமாஸ்கஸ், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. குறிப்பாக, ஈராக் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து

ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் சிரியா-ஈரான் நாட்டின் எல்லைப்பகுதியில் முகாம்களை அமைத்து அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்க படையினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கடந்த 15 ஆம் தேதி ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அமெரிக்க ராணுவ வீரர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈராக்கின் எல்லையில் அமைந்துள்ள சிரியா நாட்டின் புகமல் நகரில் அமெரிக்க படையினர் நேற்று திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க படையினரால் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் அமெரிக்கா-ஈரான் இடையேயான உறவை மேலும் பிளவுபடுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

dailythanthi