142 நாடுகளுக்கு கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்; உலக சுகாதர அமைப்பு தகவல்

உலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிதி அளித்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டமான கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின.

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றிற்கு உதவும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்துகளை அளிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆஸ்ட்ராசெனேகா மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் அதிக அளவில் இதனை தயாரித்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கானா மற்றும் ஐவரி கோஸ்ட் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கோவாக்ஸ் திட்டத்தின்கீழ் 1.2 மில்லியன் டோஸ் ஃபைசர் தடுப்பு மருந்துகளை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் அதிபர் நானா ஆர்ட்ப்போ அடோ இதுகுறித்து கூறுகையில் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தங்கள் நாட்டில் இரண்டு கோடி மக்களுக்கு கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பு மருந்தை செலுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, காங்கோ, கம்போடியா, அங்கோலா உள்ளிட்ட நாடுகளுக்கு விரைவில் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ராஸ் அட்டோனம் கெப்ரியாஸிஸ் கூறியுள்ளார்.

dinamalar