‘சந்தாரா பிரச்சினைக்குத் தெளிவு வேண்டும்’ – நியூசிலாந்து எதிர்க்கட்சி வலியுறுத்து

கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா, சிறப்பு உபசரிப்பு பெற்றாரா, இல்லையா என்பது குறித்து நியூசிலாந்து அரசாங்கம் மௌனம் காத்து வருகிறது.

இந்த விஷயத்தை வெலிங்டனைத் தளமாகக் கொண்ட ஸ்டஃப் (Stuff) செய்தி நிறுவனம், அந்நாட்டில் சாந்தாராவின் நிலை என்ன அல்லது தனிமைப்படுத்தலுக்காக அவர் எவ்வளவு காலம் காத்திருந்தார் என்பது போன்ற விஷயங்கள் நியூசிலாந்து அரசாங்கத்திற்குத் தெரியவில்லை என்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளது,

தனிப்பட்ட தகவல்களை வெளியிட அனுமதியில்லாமல், சந்தாராவைப் பற்றியத் தகவல்களை அவர்களால் வழங்க முடியாது என்று நாட்டின் குடிநுழைவுத் துறை ஸ்டஃப்பிடம் கூறியுள்ளது.

இதேபோல், நாட்டின் வணிகம், புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சின் செய்தித் தொடர்பாளர் – நியூசிலாந்தின் தனிமைப்படுத்தப்படும் வசதிகளைக் கண்காணிக்கும் – தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அத்தகையத் தகவல்களை வெளியிட முடியாது என்று கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்றுத் தடைகாப்பு (எம்.ஐ.கியு.) வசதிகள் குறைவாகவே உள்ளன. 6,260 பேர்களைக் கொள்ளக்கூடிய 32 வசதிகள் உள்ளன.

கிறிஸ்மஸ் விடுமுறை நாட்களில் எம்.ஐ.கியு. வசதிகள் அதன் எண்ணிக்கையை எட்டவிருந்ததால், கடந்த அக்டோபரில், ஏர் நியூசிலாந்து விமான நிறுவனங்களுக்கு முன்பதிவுகளை முடக்க நியூசிலாந்து அரசாங்கம் உத்தரவிட்டது.

சந்தராவின் தனிப்பட்ட கணக்கின் படி, அவர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 அன்று எம்.ஐ.கியு.-இல் நுழைந்தார்.

நியுசிலாந்து தேசியக் கட்சியின் (நியூசிலாந்தில் எதிர்க்கட்சி) கோவிட் -19 செய்தித் தொடர்பாளர் கிறிஸ் பிஷப், சந்தாராவுக்குச் சிறப்பு உபசரிப்பு கிடைத்ததா, இல்லையா என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

முந்தைய வழக்குகள் தொடர்பான நியூசிலாந்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டுடன் பொருந்தாததால், தனிப்பட்ட தகவல்களைத் தவிர்க்கிறோம் என்பது சரியான காரணம் இல்லை என்று பிஷப் கூறுகிறார்.

“தனிப்பட்ட தகவல்கள் பற்றிய வாதத்தை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் அரசாங்கம் அதன் சொந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ரிக்கார்டோ மெனண்டெஸ் மார்ச் நியூசிலாந்து திரும்பும் விஷயத்தில் மிகவும் முன்னோக்கி இருந்தது,” என்று பிஷப் ஸ்டஃப்பிடம் கூறினார்.

“தனிப்பட்ட தகவல்கள் என்றக் கேள்வி, அந்த விஷயத்தில் மிகவும் முக்கியமானதாகத் தெரியவில்லை, எனவே இந்த விஷயத்திலும் இருக்கக்கூடாது (சந்தாரா வழக்கு).”

பிஷப்பின் கூற்றுப்படி, பல நியூசிலாந்தர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியவில்லை, குறைந்த எண்ணிக்கையிலான எம்.ஐ.கியு. வசதிகள் மட்டுமே உள்ளதால், தங்கள் அன்புக்குரியவர்கள் இறப்பதைக் கூட அவர்களால் பார்க்க முடியவில்லை.

எனவே, பொதுமக்கள் இதற்கான ஒரு பதிலைத் தெரிந்துகொள்ள தகுதியானவர்கள் என்றார் அவர்.

“அவர் எவ்வாறு எம்.ஐ.கியு.-க்குள் நுழைந்தார் என்பதுதான் இப்போதையக் கேள்வி, மிகக் குறைந்த அளவே இடங்கள் உள்ளன, அவருக்குச் சிறப்பு உபசரிப்பு அளிக்கப்பட்டதா என்பதை அறிய மக்கள் மிகவும் அக்கறை கொண்டுள்ளனர், அரசாங்கம் இப்போது அதனை வெளிப்படையாக விளக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

நியூசிலாந்தில் தனது குடும்பத்தினருடன் இருக்க 55 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டேன் – ஊதியம் இல்லா விடுப்பு உட்பட – என்று சந்தாரா முன்பு விளக்கினார்.

தனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், ஒரு வருடத்திற்கும் மேலாக தனது மகனைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தற்போது மாநில எல்லைகளைக் கடக்க முடியாமல், பெரும்பாலான மலேசியர்களுக்குக் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தாரா எப்படி நாட்டின் எல்லையைக் கடந்தார் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.