`முஹைதீனுக்கு ஆதரவு தெரிவித்தால் ‘நன்மை அடையலாம்’ – செகிஞ்சாங் எம்.பி. எம்.ஏ.சி.சி.யில் புகார்

பி.கே.ஆரைச் சேர்ந்த செகிஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர், நத்ரா இஸ்மாயில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் (எம்.ஏ.சி.சி.) ஒரு புகார் அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

கடந்த மார்ச் 3-ம் தேதி, பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிப்பதில் ஆர்வம் உள்ளதா இல்லையா என்று கேட்டு, இரண்டு நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் அவர் பெறக்கூடும் நன்மைகள் குறித்து அவரிடம் அறிவித்ததாகவும் நத்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

“கையூட்டு சலுகைகளைப் புகாரளிக்கும் எம்.ஏ.சி.சி. சட்டம் 2009, பிரிவு 25-ன் அடிப்படையில் இந்தப் புகாரை நான் செய்தேன்.

“இந்த விவகாரத்தை எம்.ஏ.சி.சி. உடனடியாக விசாரிக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மார்ச் 3-ம் தேதி ‘டத்தோ ஶ்ரீ’ பட்டம் கொண்ட ஒரு நபர் உட்பட இரு நபர்கள் தன்னை அணுகியதாக நட்ரா கூறினார்.

நத்ராவைத் தவிர, மற்றொரு பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் அவாங் ஹுசைனி சஹாரி (புதாதான்) இதேப் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நேற்று ஓர் அறிக்கையில், முஹைதீனுக்கு ஆதரவு அளித்தால் அதற்கு ஈடான வாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி ஒரு நபர் தன்னைத் தொடர்பு கொண்டதாக அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாகக் கூறி எந்தவொரு தரப்பினரும் அணுகினால், முன்வந்து புகார் அளிக்குமாறு எம்.ஏ.சி.சி. வலியுறுத்தியது.

மேலும் கருத்து தெரிவித்த நத்ரா, முஹைதீன் யாசினுக்கு ஆதரவளிக்க ஆர்வம் இல்லை என்றும், கட்சிக்கும் அதன் தலைமைக்கும் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

“பி.கே.ஆர். எம்.பி.க்கள் அல்லது பொதுவாக எதிர்க்கட்சியின் ஆதரவை மாற்ற முயற்சிப்பவர்களுக்கு, நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன், சிறுபான்மை அரசாங்கத்தைக் காப்பாற்ற முயற்சிப்பதை நிறுத்துங்கள்,” என்றார் அவர்.