நீதிமன்றத் தீர்ப்புகள், காற்றில் கரைந்தோடுமா?

இராகவன் கருப்பையா- மலேசியாவில் அடைக்கலம் கோரியிருந்த மியன்மார் நாட்டு அகதிகளில் 1086 பேரை கடந்த வாரம் திருப்பி அனுப்பிய நமது குடி நுழைவுத் துறையின் போக்கு உண்மையில் சட்டவிரோதமான ஒரு நடவடிக்கையாகும்.

மியன்மார் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சி நடப்பில் உள்ளதால் இந்த அகதிகளின் உயிர்களுக்கு அங்கு உத்தரவாதம் இல்லை எனக் குறிப்பிட்டு இவர்களை அனுப்பக்கூடாது என சில மனித உரிமை அமைப்புகள் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவு பெற்றன.

ஆனால் அந்தத் தடையுத்தரவை சற்றும் பொருட்படுத்தாத மலேசிய குடிநுழைவுத்துறை, லுமுட் துறைமுகத்தில் காத்திருந்த 3 மியன்மார் நாட்டு கடற்படை கப்பல்களின் வழி அவசர அவசரமாக இந்த அகதிளை நாடுகடத்தியது.

இதனால் குடிநுழைவுத் துறை இயக்குனர், உள்துறை அமைச்சர் மற்றும் மலேசிய அரசாங்கம் ஆகிய 3 தரப்பும் உள்நாட்டு அரசு சாரா இயக்கங்கள் மட்டுமின்றி அமெரிக்கா உள்பட பல அனைத்துலகத் தரப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகின.

அடுத்தது, நம் நாட்டில் மிக அதிகமானோரின் கவனத்தை ஈர்த்த பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தியின் வழக்கையும் நாம் மறந்திருக்க முடியாது.

முஸ்லிமாக மதம் மாறி தமது பச்சிளம் குழந்தை பிரசன்னாவை கடத்திச் சென்ற கணவர் பத்மநாதனுக்கு எதிரான நீண்டநாள் வழக்கில் வெற்றிபெற்ற இந்திராவுக்கும் இதே கதிதான்.

பத்மநாதனை கைது செய்து பிரசன்னாவை இந்திராவிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2016ஆம் ஆண்டில் காவல்துறைத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள போதிலும் அந்த உத்தரவை இன்று வரையில் யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

இந்திராதான் காவல்துறை மீது சுயமாக வழக்குத் தொடுத்து போராடிவருகிறார்.

ஆக பொது மக்களுக்கு அரணாக இருக்க வேண்டிய அரசாங்க உயர் அதிகாரிகளே இப்படி நடந்து கொண்டால் இதுதான் ஒரு சிறந்த முன்னுதாரணமா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

நீதிமன்றத் தீர்ப்புகளை  இப்படி உதாசீனப்படுத்துவோர் மீது யார்தான் நடவடிக்கை எடுப்பது?

நீதித்துறை என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒரு தூணாகும். அது பேணிக் காக்கப்படவில்லையென்றால் நம் நாடு வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலிலிருந்து கீழிறக்கப்ட்டு பின்தங்கிய நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்படக்கூடிய நிலை ஏற்படலாம்.

எனவே இத்தகைய சூழ்நிலைகளையெல்லாம் தவிர்க்க வேண்டுமானால் நீதித்துறை மீது அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

படம்:  Myanmar vessels, which will be used to deport Myanmar migrants from Malaysia back to their homeland, are seen docked at a jetty in Lumut, outside Kuala Lumpur, on Feb 22, 2021. PHOTO: AFP (copied from straitstimes.com)