நெரிசலைத் தவிர்க்க மாணவர்களின் பள்ளி அட்டவணையைக் கடைபிடியுங்கள் – ராட்ஸி

சமூகத்தில் கோவிட் -19 பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் போது, ​​செந்தர இயங்குதல் நடைமுறைகளை (எஸ்.ஓ.பி.கள்)  முறையாகக் கடைப்பிடிக்க கல்வி அமைச்சு பெற்றோரின் ஒத்துழைப்பைக் கோரியது.

கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறுகையில், பள்ளி பல்வேறு முறைகளைக் கொண்ட மாணவர்களுக்கான அட்டவணையைத் தொகுத்துள்ளது, எனவே, குழந்தைகளின் பாதுகாப்பைப் பேண பெற்றோர்கள் கொடுக்கப்பட்ட விதிகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றார்.

“பெரும்பாலான பள்ளிகள் கட்டங்கட்டமான பள்ளி முடியும் முறையைக் கடைபிடிக்கின்றன, எனவே பள்ளி நிர்ணயித்த அட்டவணையைப் பெற்றோர்கள் கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம்.

“நாடு முழுவதும், இன்று நண்பகலில், பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பும் செயல்முறை சிறப்பாக நடப்பதைக் காண நாங்கள் விரும்புகிறோம், குறிப்பாக சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளிகளுகளில்,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று காலை 7.30 மணியளவில், ராட்ஸி சிரம்பான், கிங் ஜோர்ஜ் V தேசியப் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவருடன் கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர் யுஸ்ரான் ஷா மொஹமட் யூசோப் மற்றும் கல்வி இயக்குநர் டாக்டர் ஹபீபா அப்துல் ரஹீம் ஆகியோரும் இருந்தனர்.

இன்று, கிட்டத்தட்ட மூன்று மில்லியன் தொடக்கப் பள்ளி மாணவர்கள் நாடு முழுவதும் பள்ளி அமர்வுகளை முழுமையாகத் தொடங்கியுள்ளனர்.

சுமார் 10 முதல் 20 நிமிடங்களுக்கு, பள்ளி முடியும் நேரத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

“இன்று காலை, மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும் செயல்முறை சுமூகமாக நடந்தது, அதேபோல பிற்பகலில் அதே நிலைமை இருக்கும் என நான் நம்புகிறேன். இது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் சவாலான சூழ்நிலை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நேருக்கு நேர் பள்ளிகள் தொடங்கியதிலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கோவிட்-19 தொற்று வழக்குகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

ஒரு பள்ளியில் தொற்று கண்டறியப்பட்டால், பள்ளி முழுவதுமாக மூடப்பட வேண்டுமா இல்லையா என்பதனை மாவட்டச் சுகாதார மையம் தீர்மானிக்கும் என்று அவர் கூறினார்.

-பெர்னாமா