`தொழிற்சங்கவாதி` என்பதில் பெருமைகொண்டு வாழ்ந்த தோழர் ஜீவி காத்தையா

அரை நூற்றாண்டிற்கும் மேலாக ஒரு தொழிற்சங்கவாதியாக, சமூகச் செயற்பாட்டாளராக, கட்டுரையாளராக, செய்தியாளராக, களப் போராளியாக மலேசியத் தொழிலாளர்களின் மனங்களில் வீற்றிருந்த ஜீவி காத்தையா அவர்கள் மறைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவுபெறுகிறது.

26/01/2019 – ஜொகூர், கூலாயில் எங்களின் இறுதி சந்திப்பு

செம்பருத்தி.காம் மற்றும் மலேசியாகினி.காம் இணையப் பத்திரிக்கைகளில், தமிழ் பிரிவு ஆசிரியராக சுமார் 15 ஆண்டுகள் பணியாற்றிய அவர், தனது 82-வது அகவையில், உடல்நிலை பாதிப்பால் காலமானார்.

நாட்டின் மூத்தத் தொழிற்சங்கவாதிகளில் ஒருவரான அவர், மலேசியாவின் நிலக்கரிச் சுரங்க நகரான பத்து ஆராங்கில், 1938-ம் ஆண்டு பிறந்தார். தனது தொடக்கக் கல்வியைப் பத்து ஆராங் தமிழ் மற்றும் ஆங்கிலப்பள்ளிகளிலும், உயர்க்கல்வியைக் கோலாலம்பூர் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியிலும் பெற்றார். அதன் பின்னர், பக்கிங்ஹாம், வாரிக் மற்றும் இலண்டன் ஆகியப் பல்கலைக்கழகங்களில் மேல்படிப்பை மேற்கொண்டார்.

சிறு வயதிலேயேப் பொதுவாழ்க்கையில் ஈடுபாடு கொண்டவர் தோழர் காத்தையா, அவரின் மாமாவின் (தாயாரின் சகோதரன்) தூண்டுதல் காரணமாக, சிறு வயது முதல் தொழிற்சங்கங்களின் செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் படிக்கத் தொடங்கினார். 15 வயதிலேயே அந்தச் செய்திகளை மொழிப்பெயர்க்கும் பணிகளையும் அவர் செய்துள்ளார்.

பத்து ஆராங்கில், சுபாஸ் சந்திரபோஸின் இந்தியத் தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ.) அன்றைய இந்தியர்கள் கொண்டிருந்த ஆர்வம் மற்றும் அவர்களின் தீவிரச் செயல்பாடுகளினால் ஏற்பட்ட ஈர்ப்பு, அவரைப் போராட்ட வழிக்கு இழுத்து வந்தது.

அன்று, பத்து ஆராங் மக்களின் பேச்சாகவும் மூச்சாகவும் தொழிற்சங்கம் இருந்துள்ளது, அந்தச் சூழலில் வளர்ந்த காத்தையா அவர்களும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான அரசியல், தொழிற்சங்கச் சித்தாந்தம் என்று அதில் இணைந்துபோனார்.

பத்து ஆராங்கில் எஸ் ஏ கணபதி

அகில மலாயாத் தொழிற்சங்கச் சம்மேளத்தின் தலைவர் எஸ். ஏ. கணபதியைச் சந்தித்த அனுபவமும் அவருக்குண்டு. அவரது மாமா வீட்டிற்கு எஸ். ஏ. கணபதி வந்தபோது, அவரைப் பார்த்ததாகவும் ஆனால், அவரிடம் பேசியதில்லை என்றும் அவர் கூறியதுண்டு. கணபதியைச் சுற்றி ஒரு பெரும் கூட்டம் எப்போதும் இருக்குமென்றும், சிறுவனான தன்னால், அவரது பக்கத்தில்கூட போக முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். கணபதி தொழிற்சங்க இயக்கத்திற்குத் தலைவராக இருந்தபோது, தோழர் காத்தையாவின் மாமா, உதவித் தலைவர்களுள் ஒருவராக இருந்தார் என்றும், கணபதி தூக்கிலிடப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவரைப் பிரிட்டிஷ் இராணுவம் சுட்டுக்கொன்றது என்றும் அவர் சொன்னார்.

சில ஆண்டுகளுக்கு முன், எஸ் ஏ கணபதி குறித்த ஓர் ஆய்வில் தோழர் காத்தையா ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்காக, தோழர் காத்தையா தமிழ்நாடு வரை சென்று வந்தார். ஆனால், கணபதி குறித்த தகவல்கள் சரிவர கிடைக்காததால், கிடைத்த சிலவற்றில் நம்பகத்தன்மை இல்லாததால் அப்பணி பாதியிலேயே நின்றுபோனது. அந்த ஆய்வினை நிறைவு செய்யவில்லை என்ற கவலை அவருக்கு இருந்ததுண்டு. ஒன்றை ஆவணப்படுத்துவதில் நாம் மிகவும் மோசமானவர்கள் என்று அவர் கூறுவதுண்டு, அதன் விளைவே இன்று நாம் நம் வரலாற்றின் பகுதிகள் சிலவற்றைத் தெரிந்துகொள்ள முடியாமல் போனது.

மலேசியத் தொழிற்சங்கங்கள்

தற்போது மலேசியாவில், தொழிற்சங்கங்கள் பெயரளவில்தான் இருக்கின்றது என்று பலமுறை தனது ஆதங்கத்தைத் தோழர் காத்தையா வெளிபடுத்தியதுண்டு. ஒருநாள் இரவு, தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த நேரம், அந்தக் காலத்தில் தொழிற்சங்கத்தில் இருந்தபோது, முதலாளிகள் சம்மேளனத்துடனான ஒரு விவாதத்தின் போது, மேசை மீது ஏறிநின்று ஆவேசமாகப் பேசியதை நினைவுகூர்ந்தார்.

‘நெற்றி வியர்வைக் காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும்’ என்ற முகமது நபியின் கூற்றின் அடிப்படையில், தொழிலாளர்களின் ஊதியத்தை அன்றாடம் கொடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். மாத முடிவில் சம்பளம் கொடுக்கப்படுவதை நிறுத்தி, நாள் அடிப்படையில் வேலை முடிந்தவுடன் கொடுக்க வேண்டும் என்ற அவரின் கோரிக்கையைச் சாத்தியமற்ற ஒன்று என்று மாபா கூறியதாகச் சொன்னார்.

நாம் ஒரு பொருளை வாங்கும் போது உடனே பணம் செலுத்துகிறோம், ஆனால், ஒரு தொழிலாளியின் உழைப்பை வாங்கும் முதலாளிகள் ஒரு மாதத்திற்குப் பிறகுதான் அதற்கான விலையைத் தருகின்றனர். இதுவும் ஒரு வகை சுரண்டல்தானே என்று ஒருசமயம் என்னுடன் பேசும் போது கூறினார், இது எனக்குப் புதியதொரு தகவலாக இருந்தது, “இந்த மனுஷன் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாரு?” என்று நான் வியந்த மனிதர் தோழர் காத்தையா.

அன்றையத் தொழிற்சங்கத் தலைவர்கள் தூக்குமேடையில் தொங்கத் தயாராக இருந்தனர், அவர்களின் போராட்டங்கள் உண்மையான, நேர்மையான போராட்டங்களாக இருந்தன. ஆனால் இன்று, நம் நாட்டில் தொழிற்சங்கங்கள் பெயரளவில்தான் இருக்கின்றன, பட்டம், பதவிகளுக்காக அதன் தலைவர்கள் ஏங்கிக் கிடக்கின்றனர்; அதற்காகத் தொழிலாளர்களை வைத்து, முதலாளிகளிடம் பேரம்பேசி வருகின்றனர் என்று அவர் கூறியதுண்டு.

‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் அவர். உலகின் எந்த மூலையில் தொழிலாளர் போராட்டம் நடந்தாலும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டியது நமது கடமை என்றும் அவர் நம்பினார்.

நம் நாட்டில் ஒப்பந்தத் தொழிலாளர்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் சுரண்டப்பட்டு, சீரழிக்கப்படுவதைக் கண்டு அவர் கோபங்கொண்டுள்ளார். மலேசியர்கள், தொழிலாளர் என்ற அடிப்படையில் அவர்களுக்கெதிராக நடக்கும் அநீதிகளுக்குக் குரல் கொடுக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். தொழிற்சங்கம், ஒரு தொழிலாளியின் குடியுரிமை பற்றி சிந்திக்காமல், அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு அரணாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். மேலும், அவை இன, மொழி, சமயம் போன்ற குறுகிய நோக்கங்களை விட்டு விலகி, ‘தொழிலாளர் உலகம்’ என்ற இலட்சியத்திற்காகப் போராட வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.

தொழிற்சங்கப் போராட்டம் என்பது தொழிலாளர்களுக்குக் கூடுதல் சம்பளம் வாங்கிக்கொடுப்பது மட்டுமல்ல; தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பறிபோகும்போதும், அவர்களின் குரல்கள் நசுக்கப்படும் போதும், குரல் எழுப்ப வேண்டியக் கடப்பாடு தொழிற்சங்களுக்கு இருக்க வேண்டும்.

இன்றைய இளைய சமூகத்திற்குத் தொழிற்சங்கங்கள் பற்றி அதிகம் தெரிவதில்லை, தெரிந்துகொள்ள அவர்கள் விரும்புவதும் இல்லை என்று அவர் வருத்தப்பட்டதுண்டு. இதற்குக் காரணம், தொழிற்சங்கம் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தொழிற்சங்கப் போராட்டங்களால் கிடைத்த 8 மணி நேர வேலை, ஓய்வு நாள்கள் போன்ற உரிமைகளை அவர்கள் வேண்டாமென்று கூறுவதில்லை என்று அவர் கூறுவார். தொழிற்சங்கங்கத் தலைவர்கள்கூட, தொழிற்சங்கங்களின் அவசியம், அவற்றின் செயல்பாடுகள், சித்தாந்தங்கள் பற்றி பேசுவதில்லை. ஆக, இவற்றை இளைஞர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது கடினமாக உள்ளது என்பது அவரது கருத்து.

‘மே 1’ தினத்தை ‘தொழிலாளர் தினம்’ அல்லது ‘உழைப்பாளிகள் தினம்’ என்று கூறுவதை அவர் விரும்புவதில்லை. அதில் ஓர் அடிமைதனம் இருப்பதாக அவர் எண்ணினார். ‘மே 1’ என்று கூறுவதுதான் சிறப்பு என்று அவர் கருதினார்.

சட்டபடி தொழிற்சங்கத்தில் இருக்க முடியாது என்றபோதிலும், தொழிற்சங்கத்திற்கு வெளியே, ஒரு தொழிற்சங்கவாதியாகத்தான் அவர் இறுதிவரை வாழ்ந்தார். பொது நிகழ்ச்சிகள் மற்றும் கருந்தரங்கங்களில் கலந்துகொண்டு பேசும்போது, தன்னை ஒரு தொழிற்சங்கவாதி என்றே அறிமுகம் செய்ய கேட்டுகொள்வார், மெத்தப் படித்திருந்தாலும், ஆழ்ந்த அனுபவம் இருந்தாலும், ஒரு தொழிற்சங்கவாதி என்பதில் அதிகப் பெருமைகொண்டு வாழ்ந்த ஒருவர் எனக்குத் தெரிந்து அவர்தான்.

பி.எஸ்.எம். பற்றி ஜி வி காத்தையா

மலேசிய சோசலிசக் கட்சியுடன் (பி.எஸ்.எம்) பல பணிகளில், போராட்டங்களில் தோழர் காத்தையா இணைந்ததுண்டு.

நவம்பர் 2007 – ஜொகூர் மாநிலத்தில் அமைந்துள்ள 70 தமிழ்ப்பள்ளிகள் நிலை குறித்து, செம்பருத்தி தோழர்கள் தயாரித்த ஆய்வுமனுவை, மாநில மந்திரி பெசாரிடம் வழங்கியபோது.

பி.எஸ்.எம். கட்சி மட்டும்தான் மக்களின், குறிப்பாக ஏழை மக்களின், அடிப்படை பிரச்சினைகளில் இன, மத, மொழி வேறுபாடின்றி கவனம் செலுத்தி வருகிறது  என்பது அவரது கருத்து. சோசலிச சமுதாயம் இன்று ஓர் அவசியமாகி வருகிறது என்று கூறிய அவர், ஏழை மக்கள், குறிப்பாக இளைஞர்களும் பெண்களும் அக்கட்சிக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கடந்த பொதுத் தேர்தலில், சுங்கை சிப்புட் தொகுதியில் டாக்டர் ஜெயக்குமார், தோற்கடிக்கப்பட்டது அவருக்குச் சினத்தை ஏற்படுத்தியது, தேர்தல் முடிந்த சில நாட்களில் அதைப் பற்றியும் அவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்த அவரை அத்தொகுதி மக்கள் புறக்கணித்தது மாபெரும் தவறு என்றார்.

தொழிற்சங்கங்கள் நாட்டில் மீண்டும் உயிர்பெற, பி.எஸ்.எம். கட்சியின் பணி மிக மிக அவசியம் என அவர் கூறினார். கிறிஸ்துவத்தில் கூறப்பட்ட இறைத் தூதர்களின் போதனைகளை (பொதுவுடைமை கருத்துகள்) இக்கட்சி உறுப்பினர்கள்தான் பின்பற்றுகின்றனர். ஏசுநாதர்தான் உலகின் முதலாவது சோசலிஸ்ட், காரணம் அவர்தான் ரொட்டியைப் பகிர்ந்துகொள்ளுங்கள் எனும் சோசலிசத் தத்துவத்தைக் கூறினார் என்பார் அவர்.

கீதை, திருக்குறள் & ஆத்திச்சூடி

அடிக்கடி கீதையில் கூறப்பட்ட கருத்துகள் பற்றியும் அவர் என்னிடம் பேசியதுண்டு. மதம் என்ற அடிப்படையில் அல்லாமல், அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளை அனைவரும் கற்று தெளிய வேண்டும் என்று அவர் விரும்பினார். பகை, துரோகம், வஞ்சம், நட்பு எனப் பலவற்றை அதில் நாம் தெரிந்துகொள்ளலாம் என்பார்.

கிருஷ்ணர் கீதையில் சொன்னதைத்தான் மார்க்ஸ் தத்துவமாக்கினார், மார்க்ஸ் கூறிய கருத்துகள் கம்யூனிசத் தத்துவத்தின் சாரம் என்றால், அதனை முதன்முதலில் அமல்படுத்திய கிருஷ்ணர்தான் உலகின் முதல் கம்யூனிஸ்ட் என்று கூறுவார்.

அதேசமயம், வள்ளுவரின் திருக்குறளை விட, ஔவை அருளிய ஆத்திச்சூடியின் மீது அவருக்கு அதிக மோகம் இருந்தது. இரு சொல்லில் ஆழ்ந்த பொருள் புதைந்தவை அவை என்று கூறியதுண்டு.

ஒருவேளை, ஆத்திச்சூடியை எழுதியது ஒரு பெண் என்பதனால் அதை ஆஹா, ஓஹோ என்று யாரும் பேச மாட்டேன் என்கிறார்கள் போலும். அங்கேயும் பாருங்கள் பெண் அடிமையைப் புகுத்திவிட்டார்கள்,” என்று அவர் ஆதங்கப்பட்டு சொன்னார் ஒருமுறை.

கம்யூனிசத் தலைவர் சின் பெங்குடன் நேர்காணல்

கம்யூனிசத் தலைவர் சின் பெங்கை நேர்காணல் செய்த அனுபவமும் அவருக்கு உண்டு. அந்தக் குறுகிய நேர்காணலின் போது, தனது தாய் தந்தையின் கல்லறையைக் காண சின் பெங் மலேசியாவுக்குள் நுழைய விரும்புவதாகவும், ஆனால் மலேசிய அரசாங்கம் அனுமதிக்க மறுப்பதாகவும் சின் பெங் கூறியதாக தோழர் காத்தையா எழுதியிருந்தார்.

தனக்கு பல இரகசியப் பாதைகள் தெரியும், அதன் வழியாக நாட்டிற்குள் நுழையப் போவதாகக் கூறியவருக்கு, “உங்களுக்கு இரகசிய பாதைகள் எல்லாம் தெரியும். ஆனால், நீங்கள் பகிரங்கமாக நாட்டின் எல்லையைத் தாண்டி நாட்டிற்குள் வர வேண்டும், மலேசிய அரசாங்கத்திற்கு அறிவித்துவிட்டு பகிரங்கமாக எல்லையைக் கடக்க வேண்டும்,” என்று இவர் அறிவுறுத்தியுள்ளார். அதற்கு அவரும், “நல்ல ஆலோசனை, அது குறித்து கண்டிப்பாகச் சிந்திப்பேன், நன்றி,” என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அத்தகைய நெஞ்சுரம் படைத்தவர் தோழர் காத்தையா, 70-களைக் கடந்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார், ஆனால் அவரது தோற்றம், நடை, பேச்சு, செயல் என அனைத்திலும் ஒரு கம்பீரம், விவேகம் நிறைந்திருந்ததை நான் கண்டதுண்டு.

அவர் விரும்பியத் தலைவர்கள்

இந்தியத் தலைவர்களில் நேருவை அவருக்கு மிகவும் பிடிக்கும், தனது வழிகாட்டிகளில் அவர்தான் முதன்மையானவர் என்பார்.

மேலும், காந்தி அடிகள் குறித்தும் தோழர் காத்தையா அதிகம் பேசுவதுண்டு, சில சமயங்களில் எனக்கு அவர்மீது அதிக நாட்டம் இல்லாததால், விவாதங்கள் எழும், ஆனால் பதிலளிக்கும் அந்தக் குரலின் வலிமைக்கு நான் அடங்கி போவேன்.

உலக வரலாற்றில், மனிதனின் இரத்தத்தைச் சிந்த வைக்காத மாபெரும் தலைவர்கள் புத்தர், ஏசுநாதர் மற்றும் மகாத்மா காந்தி மூவர் மட்டும்தான். மற்ற அனைத்து தலைவர்களும், ஏதாவது ஒரு வகையில் இரத்தம் சிந்தவைத்தப் பயங்கரவாதிகள் என்பது அவரது கருத்து.

21/06/2014 – செம்பருட்தி தோழர்கள் & ஹிண்ராப்ட் ஏற்பாட்டிலான எஸ்.ஏ கணபதி & வீரசேனன் கருத்தரங்கில்

தேர்தல் அனுபவம்

மக்களவை தொழிலாளர்களின் கோட்டையாக இருக்க வேண்டும் என்பதற்காக 3 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார், பெரிய தடைகளுக்கு மத்தியில். 1974-ம் ஆண்டு வி. மாணிக்கவாசகத்தை எதிர்த்து போர்ட் கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டார். 1978 மற்றும் 1982-ஆம் ஆண்டுகளில் பத்மநாபனை எதிர்த்து போர்ட்டிக்சனில் போட்டியிட்டார். மூன்று தேர்தல்களிலும் அவருக்குத் தோல்வியேக் கிட்டியது.

நேர்மையான, உண்மையான, மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் நோக்கம் கொண்டவர்கள் தோற்கடிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல, குறிப்பாக தொழிலாளர் வர்க்கப் போராட்டவாதிகள்… காத்தையா தொடங்கி, அர்ஜுணன் முதல் இன்று டாக்டர் ஜெயக்குமார் வரை, இன்னும் போராட்ட குணமும் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் பல தலைவர்கள் அந்த மக்களாலேயே தோற்கடிக்கப்படுவது வழமையாகி வருகிறது.

இதுமாற வேண்டும் என்பது தோழர் காத்தையாவின் ஆசை மட்டுமல்ல, வர்க்கப் போராட்டத்தில் இணைந்திருக்கும் அனைத்து தோழர்களின் விருப்பமும் அதுதான். தொழிலாளர் வர்க்கத்தினருக்காக பல போராட்டங்களை மேற்கொண்ட அவர் இன்று நம்முடன் இல்லை என்றாலும் அவரின் நினைவுகள் மட்டுமின்றி, அவரின் போராட்ட வரலாறும் நம்முடன் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இளைய சமூகம் நம் போராட்டவாதிகளை நினைவில் கொண்டு வளர வேண்டும், அவர்கள் நமது வழிகாட்டிகள், அவர்களின் களப்பணிகள் சில புல்லுருவிகளாலும் ஆதிக்க வர்க்கத்தினராலும் மறைக்கப்பட்டிருக்கலாம், அதனைத் தோண்டியெடுத்து, ஆய்வுசெய்து, செயல்படுத்த வேண்டியதும் அடுத்தத் தலைமுறையினருக்குக் கடத்த வேண்டியதும் நமது கடமையாகும்.


சாந்தலட்சுமி பெருமாள், ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் ஒருங்கிணைப்பாளர்

மேற்கோள் :– வல்லினம் (நேர்காணலில் இருந்து சில தகவல்கள்)