பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ் அரசு

பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.

பாரிஸ், கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. அந்நாட்டில் முதியவர்கள் மக்கள்தொகை கணிசமாக உள்ளதால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டதைப் போலவே புதிய உருமாறிய கொரோனா பிரான்ஸ் நாட்டின் லானியன் மாகாணத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இது மற்ற கொரோனா வகைகளைவிட ஆபத்தானதா என்பது குறித்த ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பிரான்சில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வழக்கமாக நடத்தப்படும் பிசிஆர் சோதனைகளிலிருந்து தப்பிவிடுகிறது. எனவே, இந்த உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்பட்டால் அவர்களுக்கு கொரோனா இல்லை என்றே முடிவில் தெரியவரும். இதனால் அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு எளிதில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாரிஸ் உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ஒரு மாதம் ஊரடங்கை பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை கடைகள் மற்றும் பள்ளிகள் திறந்து இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

dailythanthi