தேன்

குறிஞ்சிக்குடி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் தருண் குமார். இவர் மலைத்தேன் எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார். மற்றொரு மலைக் கிராமத்தை சேர்ந்த நாயகி அபர்ணதி, தனது தந்தை தேவராஜ் உடல் நலத்திற்காக மலைத்தேன் தேடி செல்கிறார். அபர்ணதியின் நிலையை அறிந்து அவருக்கு உதவுகிறார் தருண் குமார்.

இந்த பழக்கத்தில் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்து ஊர் மக்கள் முன்னிலையில், வாழை மட்டையை இரண்டாகப் பிரித்து சாமியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறார்கள். வாழை மட்டை சரியாக பிரியாததால், சாமி வரம் கொடுக்கவில்லை என்று கூறி, ஊர் பெரியவர்கள் திருமணத்துக்கு மறுக்கிறார்கள்.

தருணை மறக்க முடியாத அபர்ணதி, ஊர் முடிவை எதிர்த்துத் திருமணம் செய்துகொள்கிறார். பெண் குழந்தை பிறந்த நிலையில், அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. மனைவி அபர்ணதியின் சிகிச்சைக்காக மலை கிராமத்தை விட்டு ஊருக்குள் வரும் தருணுக்கு பல சிக்கல்கள் ஏற்படுகிறது.

இறுதியில் சிக்கல்களை கடந்து மனைவி அபர்ணதியின் உயிரை தருண் காப்பாற்றினாரா? அபர்ணதிக்கு உடல் நலக்குறைவு ஏற்படக் காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

‘குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும்’, ‘தகராறு’ உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்த தருண் குமார், இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். இவரது வெள்ளந்தியான நடிப்பு மலைக் கிராமத்து மனிதனைக் கண்முன் நிறுத்துகிறது. கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.

நாயகியான அபர்ணதி, மலைக்கிராமத்து பூங்கொடியாகவே மாறி இருக்கிறார். இவர் பேசும் மொழி, உடல் மொழி அனைத்தும் கதாபாத்திரதிற்கு வலு சேர்த்திருக்கிறது. இவரின் மிகை இல்லாத நடிப்பு ரசிக்க வைக்கிறது. வாய் பேசாமல் நடித்திருக்கும் பேபி அனுஸ்ரீ பரிதாபத்தை ஏற்படுத்தி கண் கலங்க வைக்கிறார்.

‘தகராறு’, ‘வீர சிவாஜி’ படங்களை இயக்கிய கணேஷ் விநாயகன், மலை கிராம மக்களின் வாழ்வியல், அரசியல், கார்ப்ரேட் நிறுவனம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். எளியதாக தொடங்கும் கதைக்களம் இறுதியில் பார்ப்பவர்களை கதைக்குள் ஒன்ற வைக்கிறது. அரசு அதிகாரிகளின் அலட்சியம், பண மதிப்பிழப்பு, கார்ப்பரேட் அரசியல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது, மலைக்கிராமங்கள் வேட்டையாடப்படுவது, காட்டுத்தீ என பல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.

சுகுமாரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அருவியின் ஆர்ப்பரிப்பு, மலையின் அழகு என ஒளிப்பதிவில் பளிச்சிடுகிறார். சனந்த் பரத்வாஜியின் இசையும் பின்னணியும் படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘தேன்’ சுவை அதிகம்.

maalaimalar