காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை-பருத்தி இறக்குமதி – பாகிஸ்தான் பல்டி

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, பாகிஸ்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு கவுன்சில் (ஈ.சி.சி) புதன்கிழமை இந்திய சர்க்கரை, பருத்தி மற்றும் நூல் இறக்குமதி செய்வதற்கான கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகால தடையை நீக்கி உள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு 5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரையை இறக்குமதி செய்ய அனுமதி அளித்து உள்ளது. இதையடுத்து ஜூன் 30ம் தேதி முதல் இறக்குமதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தானில் பருத்தியின் தேவை அதிகமாக இருப்பதாலும், வெள்ளைச் சர்க்கரையின் விலை பாகிஸ்தானை விட இந்தியாவில் குறைவு என்பதாலும் 2 ஆண்டுகளாக இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சில்லறை வர்த்த்கத்தில் சர்க்கரை விலை அதிகரித்து வருகிறது. அங்கு  ஒரு கிலோ சர்க்கரை பாகிஸ்தான் ரூபாய் 100 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மட்டுமே இந்தியாவிடமிருந்து சர்க்கரை மற்றும் பருத்தி இறக்குமதி செய்யப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

நிருபர்களை  சந்தித்த பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷீத், காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த 370வது சிறப்பு அந்தஸ்தை மீண்டும் கொடுக்காதவரை இந்தியாவிடமிருந்து பருத்தி மற்றும் சர்க்கரை வாங்குவதை ஒத்தி வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

dailythanthi