‘புதிய கட்டுமானத்தைத் தொடங்கும் நில உரிமையாளர்கள் ஆலயப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்க வேண்டும்’

கோலாலம்பூர் மாநகர் மன்ற (டி.பி.கே.எல்.) ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் ஒருவர், கோலாலம்பூர் பகுதியில் வழிபாட்டுத் தளங்கள் இடிக்கப்படுவதைத் தடுக்கும் முயற்சியாக, நிலம் மற்றும் கனிமங்கள் அலுவலகத்தில் (பி.தி.ஜி) காணப்படும் ‘நிலச் சுமை’ நிலைமைகளை ஒத்திசைக்க தனது தரப்பு செயல்படும் என்று கூறினார்.

எஸ் ராஜாவின் கூற்றுப்படி, டி.பி.கே.எல்.-இல் இந்த நிபந்தனையை அறிமுகப்படுத்துவதன் மூலம், நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தில் வழிபாட்டு தளங்கள் மற்றும் பிற வளாகங்களை மாற்றும்போது, தங்கள் பொறுப்பிலிருந்து ஓட முடியாது என்பதை உறுதி செய்யும்.

“தற்போது, ​​நிலம் மற்றும் கனிம அலுவலகம் ‘நிலச் சுமை’ (kebebanan tanah) என்று அழைக்கப்படும் ஒரு நிபந்தனையைக் கொண்டுள்ளது, நிலம் வாங்கும் போது அந்நிலத்தில் இருக்கும் சூராவ், வழிபாட்டுத் தளம் அல்லது பிற வளாகங்களுக்கு நில மேம்பாட்டாளர் பொறுப்பேற்க வேண்டும் என்பதை அது உறுதி செய்கிறது.

“ஒரு மேம்பாட்டாளர் பி.தி.ஜி.-யிடமிருந்து நிலத்தை வாங்கும் போது, ​​இந்த நிபந்தனை அவரது பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிபந்தனையின் கீழ், நிலத்தின் உரிமையாளர் அல்லது மேம்பாட்டாளர் புதியக் கட்டுமானத்தை உருவாக்கும் முன் நிலத்தில் இருக்கும் வழிபாட்டுத் தளங்களின் நிலப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்.

“எனவே, எதிர்காலத்தில் கூட்டரசுப் பிரதேசங்களில் முஸ்லிம் அல்லது முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தளங்களை இடிப்பதில்லை என்பதை உறுதிப்படுத்த, மேம்பாட்டி உத்தரவின் (Development Order) கீழ், டி.பி.கே.எல். அத்தகைய நிபந்தனைகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று காலை, செகாம்பூட்டில் உள்ள கோயில் இடிக்கும் சம்பவம் ஒன்று, நீதிமன்ற உத்தரவைப் பெற்ற பின்னர் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

கூட்டரசுப் பிரதேச ம.இ.கா. தலைவருமான ராஜா, நீதிமன்ற உத்தரவுகளைக் கையில் எடுத்துகொண்டு, பெரும்பாலான நில உரிமையாளர்கள் சுலபமான வழியில் வழிபாட்டுத் தளங்களை இடித்துத் தள்ளுவதாகக் தெரிவித்தார். இது அரசியல்வாதிகள், டி.பி.கே.எல்., அமலாக்க அதிகாரிகள் மற்றும் வழிபாட்டுத் தளத்திற்கு வருபவர்கள் இடையே ஒரு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

“இடிப்பது ஒரு தீர்வல்ல, தற்போதுள்ள சட்டத்திற்கு உட்பட்டு இந்த நிபந்தனைக்கு ஒத்திசைக்க டி.பி.கே.எல். ஒப்புக் கொண்டால், இப்பிரச்சினை தீர்க்கப்படலாம் என்று நான் நம்புகிறேன்.

“இந்தத் திட்டத்தை அடுத்த மாநகர் மன்றக் கூட்டத்திற்கு எடுத்துச் செல்வேன்,” என்று அவர் கூறினார்.

பதிவுக்காக, இன்று காலை, செகாம்புட், ஓம் ஸ்ரீ மகா மதுரைவீரன் கோயில், நீதிமன்றத் தடை உத்தரவு கிடைத்ததைத் தொடர்ந்து இடிபடுவதிலிருந்து தப்பினார்.

“இன்று காலை 9 மணிக்குக் கோயில் இடிக்கப்படவிருந்தது. நாங்கள் காலை 8 மணிக்கு நீதிமன்ற உத்தரவைப் பெற்றோம் முடிந்தது. இருப்பினும், ஒத்திவைப்பு உத்தரவு ஒரு வாரம் மட்டுமே.

“எனவே, இடிக்கும் பிரச்சினை அடுத்த வாரம் மீண்டும் வரும்,” என்று பெயர் குறிப்பிட மறுத்த கோவில் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

இந்தக் கோயில் செகாம்புட், புக்கிட் ஹிஜாவ் தோட்டத்தில் தோன்றியதாகவும், கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் டாக்டர் எட்மண்ட் சந்தாரா குமார் தலைமையிலான முஸ்லீம் அல்லாத வழிபாட்டுக் குழுவிடம் இந்த விவகாரத்தை கூட்டரசுப் பிரதேச ம.இ.கா. ஒப்படைத்ததாக ராஜா கூறினார்.

“இந்தக் குழுவைக் கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சராக, ம.இ.கா. துணைத் தலைவர் எம். சரவணன் இருந்தபோது அமைத்தார். இப்போது அதற்கு சகோதரர் எட்மண்ட் தலைமை தாங்குகிறார்.

“அவர் மூலம் இக்கோயில் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ராஜா கூறினார்.