வழக்குரைஞர் : நஜிப்பின் எஸ்.ஆர்.சி. வழக்கைக் கையாள அனுபவமிக்க நீதிபதி தேவை

எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனலின் RM42 மில்லியன் ஊழல் வழக்கு ஒரு “நூற்றாண்டின் வழக்கு” என்று நஜிப் ரசாக்கின் வழக்குரைஞர் குழு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இருப்பினும், குற்ற வழக்குகளில் அனுபவம் குறைந்த உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது என அச்சட்டக் குழுவின் தலைவர் முஹம்மது ஷஃபி அப்துல்லா கூறினார்.

நேற்று மூவர் அடங்கிய நீதிபகள் குழுவினர் முன், வழக்கின் மேல்முறையீட்டு விசாரணையின் போது, ​​நஜிப்பின் குற்ற வழக்கைக் கையாள, போதுமான குற்றவியல் வழக்கு அனுபவம் கொண்ட ஒரு நீதிபதி தேவை என்று ஷாஃபி வாதிட்டார்.

இந்த வழக்கிற்கு முன்பு, நஸ்லான் மேலும் பல சிவில் வழக்குகளை கையாண்டுள்ளார்.

இந்த ஆண்டு மார்ச் 1 முதல், அவர் மீண்டும் சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

எஸ்.ஆர்.சி. போன்ற சர்வதேசக் குற்றவியல் வழக்குகளை அனுபவமுள்ள ஒரு நீதிபதி விசாரித்திருக்க வேண்டும் என்று ஷாஃபி கூறினார்.

பிழைகளைக் குறைப்பதற்கு இது தேவையானது, என்றார் அவர்.

“இது ஒரு ‘நூற்றாண்டின் வழக்கு’.

“ஆனால் சோபியன் இடமாற்றம் செய்யப்பட்டார் மற்றும் நஸ்லான் அழைத்து வரப்பட்டார் (வழக்கை விசாரிக்க),” என்று அவர் கூறினார்.

இந்த வழக்கில் ஏழு குற்றச்சாட்டுகள் தொடர்பான தண்டனை மற்றும் தண்டனையை ஒதுக்கி வைக்க நஜிப்பின் முறையீட்டை நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது.

நீதிபதி மொஹமட் நஸ்லான் மொஹமட் கசாலி

கடந்த ஆண்டு ஜூலை 28-ஆம் தேதி, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நஜிப் ஓர் அதிகாரத் துஷ்பிரயோக வழக்கு, மூன்று நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் எஸ்.ஆர்.சி. சர்வதேச நிதி சம்பந்தப்பட்ட மூன்று பண மோசடி குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்தது.

நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், RM210 மில்லியன் தண்டமும் விதித்து நஸ்லான் தீர்ப்பளித்தார்.

இருப்பினும், அவரது மேல்முறையீட்டின் முடிவு நிலுவையில் உள்ளதால், தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதித்தது.

1970-களில், முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசாரான ஹருன் இட்ரிஸ் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை, உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதிகள் கையாண்டது உட்பட பல குற்றவியல் விசாரணைகளை ஷாஃபி குறிப்பிட்டார்.

“எங்கள் வழக்கு, மிகவும் அனுபவம் வாய்ந்த நீதிபதி சோபியனிடமிருந்து, இன்னொரு நீதிபதிக்கு (நஸ்லான்) மாற்றம் செய்யப்பட்டது ஏன், இது அவருடைய முதல் குற்றவியல் வழக்கும்கூட,” என்று அவர் மேலும் கூறினார்.

ஷாஃபியின் கூற்றுப்படி, ஒரு குற்றவியல் வழக்கு என்பது எந்தவொரு நீதிபதியும் கையாளக்கூடிய எளிதான வழக்கு அல்ல.

விசாரணை இன்று காலை ஒன்பது மணிக்கு மீண்டும் தொடங்கும்.

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அப்துல் கரீம் அப்துல் ஜலீல், வஸீர் ஆலம் மைடின் மீரா மற்றும் ஹஸ் ஸானா மேஹட் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு விசாரணையைச் செவிமடுத்து வருகிறது.