‘அன்வாருடனான உரையாடல்’ – கசிந்துள்ள ஆடியோ பதிவை ஜாஹிட் மறுத்தார்

தனக்கும் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையில் நடந்த உரையாடலின் பதிவு எனக் கூறப்படும் ஆடியோ ஒன்றை, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கடுமையாக மறுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக போலிஸ் புகார் செய்ய உத்தரவிட்டதாக அவர் கூறினார்.

“எனக்கும் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையிலான உரையாடல் பதிவு என்று கூறப்படும் ஆடியோ பரவுவதைப் பற்றி நான் மிகவும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைகிறேன்.

“ஆடியோ பதிவில் உள்ள உரையாடலை நான் கடுமையாக மறுக்கிறேன், உண்மையில், அம்னோ ஆண்டுக் கூட்டத்திற்குப் பின்னர், எனக்கும் அன்வருக்கும் இடையில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

“[…] இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண, போலிஸ் புகார் செய்துள்ளேன், விசாரணையின் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

அம்னோவுக்குள் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை மலேசியாகினியால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இது தொடர்பில், அன்வாரின் எதிர்வினையையும் பெற மலேசியாகினி முயற்சிக்கிறது.

முன்னதாக, அஹ்மத் ஜாஹித், தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க, அன்வருக்கு ஆதரவாக எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் இந்த விஷயத்தை அம்னோ மறுத்தது.

அன்வர் பல அம்னோ நபர்களைச் சந்தித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது, ஆனால் அஹ்மத் ஜாஹித் தனது மாநாட்டு உரையில், அம்னோ எந்தத் தரப்புடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், அன்வர், டிஏபி அல்லது பெர்சத்து ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த அஹ்மத் ஜாஹித், அம்னோ தலைவராக, அம்னோ உச்சமன்றச் செயற்குழு மற்றும் ஆண்டுப் பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒருபோதும் மீற மாட்டேன் என்று சொன்னார்.

‘வெறுக்கத்தக்க சதுரங்கம்’

ஆடியோவின் பரவலை “ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் சூழ்ச்சி” என்று அவர் கருதுகிறார்.

“இது ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் விளையாட்டு, இது அம்னோவைப் பலவீனப்படுத்தவும் அழிக்கவும் நடக்கும் தொடர்ச்சியான முயற்சிகள்.

“அம்னோவை குறை மதிப்பீடு செய்து, அழிக்க இது போன்ற மோசமான விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.