தென்னமரம் தோட்டக் குடியேறிகள், சிலாங்கூர் அரசாங்கத்திடம் பதில் கோரினர்

சிலாங்கூர், தஞ்சாங் காராங்கில் உள்ள தென்னமரம் தோட்டத்தின் 100 பேர் அடங்கிய குடியேறிகள் குழு, போராட்டம் நடத்தி, தோட்டத்தில் பணிகளை மேற்கொள்ள இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை குறித்து மாநில அரசின் பதிலைக் கோரினர்,

கடந்த 40 ஆண்டுகளாக, அவர்கள் வேலை செய்துவந்த 800 ஹெக்டர் பரப்பளவு நிலத்தை, குத்தகைக்கு விடுவதற்கு முன்பு, பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமையிலான மாநில அரசு குடியேறியவர்களுடன் கலந்துரையாடவில்லை என்று அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

ஏழு மாதங்களுக்கு முன்பு, குத்தகைக்கு எடுத்த நிறுவனத்தின் ஊழியர்கள் தோட்டத்திற்குள் நுழைய சாலைகள் நிர்மாணிக்கத் தொடங்கியபோதுதான், ​​அந்த நிலம் ஒரு தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியவந்தது என சமூகத் தலைவர்களில் ஒருவரான ஆர் லோகராஜன் கூறினார்.

“இரண்டு மாதங்களுக்கு முன்புதான், மாநில அரசு அந்நிறுவனத்திற்கு குத்தகைக் கொடுத்துள்ளதை அறிந்தோம்.

“குடியிருப்பாளர்களுடன் விவாதிக்கவில்லை, எந்தவொரு கடிதமும் கொடுக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

அப்பகுதியின் ம.இ.கா. தலைவரான லோகராஜன், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டால் தங்கள் எதிர்காலம் என்னாவது என்பது குறித்து குடியேறிகள் கவலைப்படுவதாகக் கூறினார்.

ஏனென்றால், அங்குள்ள மக்கள் மூன்று தலைமுறைகளாக அந்நிலத்தில் உழைத்து வருகிறார்கள், செம்பனை மற்றும் காய்கறி நடவு மூலம் வருமானம் பெற, அவர்கள் அந்நிலத்தை நம்பியிருக்கிறார்கள்.

குடியேறிகளின் மற்றொரு பிரதிநிதியான கே சிவா, இப்போதைக்கு, அவர்கள் தங்கள் பயிர்களை எடுக்கத் தோட்டத்திற்குள் நுழையலாம் என்றார்.

“ஆனால் அவர்கள் (நிறுவனம்) தோட்டப் பகுதிக்குள் நுழைந்தால், நாங்கள் அங்குச் செல்வதை மறுப்பார்கள், நாங்கள் நுழைய முடியாது. அடுத்த வாரம் (நிறுவனம்) தோட்டத்தில் நுழையத் தொடங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் கூறினார்.

புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்குக் குத்தகை

இன்று காலை நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் இணைந்த, தஞ்சாங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர், நோ ஒமர் மற்றும் கூட்டரசுப் பிரதேசத் துணை அமைச்சர் எட்மண்ட் சந்தாரா குமார் இராமநாயுடு இருவரும், சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய குத்தகை குறித்து தங்கள் கவலையைத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மற்றும் ஊடகப் பணியாளர்களிடம் பேசிய அவர்கள், நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ள புதிதாக நிறுவப்பட்ட இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு மாநில அரசு 21 ஆண்டு குத்தகை வழங்கியுள்ளதாகக் கூறினர்.

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் குத்தகைக்கு வழங்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான், 2018 ஜூலை மாதத்தில் இந்த நிறுவனம் நிறுவப்பட்டதாக நோ கூறினார்.

“கொள்ளை அரசாங்கம் இரண்டு நிறுவனங்களுக்குக் குத்தகை கொடுக்க முடியும், ஆனால், அதே ஆட்கள், ஒரே முகவரி.

“புதிய நிறுவனம் 2018-ல் நிறுவப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின் 800 ஹெக்டர் கிடைத்தது. இது நியாயமா? இல்லை!” என்றார் நோ.

சிலாங்கூர் அம்னோ தொடர்புக் குழுத் தலைவருமான அவர், உண்மையிலேயே இப்பகுதியில் விவசாயப் பணிகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தையும் எழுப்பினார்.

“நாங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எம்.ஏ.சி.சி.) நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளோம். எம்.ஏ.சி.சி.க்கு ஓர் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நானே அப்புகாரின் வளர்ச்சியைப் பின்தொடர்வேன்; இரண்டு மாதங்கள் மட்டுமே ஆன ஒரு நிறுவனத்திற்கு எவ்வாறு நிலத்தைக் குத்தகைவிட முடியும் என்று கேட்பேன்?

இந்த விஷயத்தில் தலையிட்டு, குடியேறிகளின் எதிர்காலத்திற்காகப் போராடுவேன் என்றார் சந்தாரா.

“ஆவணங்களின் படி, மூன்று தலைமுறைகளாக இங்கே வசித்து வந்திருக்கின்றனர்.

“எனவே, ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தெரிகிறது. நான் நோ-உடன் உடன்படுகிறேன், நாங்கள் எம்.ஏ.சி.சி.-ஐ தொடர்புகொள்வோம். இது மக்களின் பிரச்சினை, அதுவும் பி40 மக்கள், அவர்களுக்கு இதுதான் வருமான ஆதாரம்.

“இது பி40 குழுவிற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

தெளிவு பெறுவதற்காக மலேசியாகினி சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதீன் ஷாரி மற்றும் விவசாய விவகாரங்களுக்குப் பொறுப்பான மாநில நிர்வாக கவுன்சிலர் இஷாம் ஹாஷிம் ஆகியோரைத் தொடர்பு கொண்டது.

அமிருதீனின் உதவியாளர் ஒருவர், இந்த விவகாரம் குறித்து அறிந்திருப்பதாகவும், குடியிருப்பாளர்களின் கருத்துக்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

அதே நேரத்தில், இந்த விஷயத்தை ஆராய்வேன் என்று இஷாம் கூறினார்.