வீட்டுக்கடனும் பட்டதாரிகளின் சம்பளக் குறைவும் – ந காந்திபன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (KDNK) கணக்கிற்கு ஏற்ப, குடும்பக் கடன்கள் சுமார் 93.3 விழுக்காடு உயர்ந்துள்ளதாக மலேசியத் தேசிய வங்கி தனது மாதாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பட்டதாரிகளின் சம்பளம் RM2,000 / RM2,500- லிருந்து, இப்பொழுது ஏறத்தாழ RM1,500-ஆக இறங்கியுள்ள நிலையில், அரசாங்கம் மௌனம் காத்து வருவது வருத்தத்தைக் கொடுக்கிறது.

இந்நிலை ஏற்படக் காரணம் என்ன?

இந்நிலைக்குக் கோவிட்-19 பெருந்தொற்று மட்டுமே காரணம் ஆகி விட முடியாது என்பதே எங்கள் கருத்து. மாறாக, 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் தனியார் மயமாக்குதல் மற்றும் பெரும் முதலாளிகளுக்கும் வங்கிகளுக்கும் பெரும் இலாபத்தை ஈட்டி தர செய்யும் செயல் திட்டங்களே, இன்று பொருளாதாரம் நலிவு அடைந்ததற்கான காரணங்கள் என நாங்கள் கருதுகிறோம்.

இந்தப் பொருளாதார மந்த நிலைக்குத் தாராளமய முதலாளித்துவமே காரணம் என்றாலும், இந்தக் கோவிட் காலகட்டத்தில், மக்களுக்கு உதவும் வகையிலான செயல் திட்டங்களை அணுகுமாறு மலேசிய சோசலிசக் கட்சியும் (பி.எஸ்.எம்.) பி.எஸ்.எம். இளைஞர் அணியும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றன.

அரசாங்கம் மக்களுக்குக், குறிப்பாக B40 குடும்பங்களுக்கும் தனி நபர்களுக்கும் கடன் செலுத்துவதில் கட்டாய ஒத்திவைப்பைப் பிரகடனம் செய்ய வேண்டும். இந்தச் செயல் திட்டம் பொருளாதார மந்த நிலையில் ஏழை மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தச் செயல் திட்டத்தின் மூலம், மக்களின் கையிருப்பில் அதிகம் பணம் இருப்பதால் உணவு, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக இருக்கும். சிறு தொழில் மற்றும் உள்ளூர் பொருளாதாரமும் வீழ்ச்சி அடையாமல் பார்த்து கொள்ளலாம்.

இந்தக் கடன் ஒத்திவைப்பை அரசாங்கம் ஏன் செயல் திட்டமாக அறிவிக்க தயங்குகிறது எனும் கேள்வி அனைவருக்கும் உண்டு. பொருளாதார மந்த நிலையிலும் வங்கிகள் தொடர்ந்து இலட்சம் இலட்சமாக இலாபம் ஈட்டும் இவ்வேளையில், இந்தச் செயல் திட்டம் வங்கிகளுக்குச் சுமையாக இருக்கப்போவது இல்லை என்பதே உண்மை.

கடந்த 5 வருடங்களாக, இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்க்கொள்ளும் வழியாக அரசாங்கம் மக்களுக்குப் புதிய திறன் மற்றும் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டி பல பட்டறைகளை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறைகள், வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்ததாக ஒன்றும் தெரியவில்லை.

ஒரு பட்டதாரியின் ஆற்றல், வேலை சந்தையின் தேவைகளுக்கு ஒத்துபோவதில்லை என்றால், மாற்றம் நிகழ வேண்டிய இடம் பல்கலைக்கழகங்களும் கல்வி நிறுவனங்களும் தான். குறிப்பாக, முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை கொடுப்பது என்பது முற்றிலும் பயனற்ற ஓர் அணுகுமுறையாகவே இங்கு இருக்கிறது என்பதே உண்மை.

இந்தப் பிரச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில், அரசாங்கம் வேலை உத்தரவாதத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும். அத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைகளுக்கு, அவ்வப்போது ஏற்றவாறு வாழ்க்கை ஊதியம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை ஊதியம் 2017-ல் RM2,700 எனத் தேசிய வங்கி அறிவித்திருந்தது. இப்பொழுது அது, RM3,000 கூட இருக்கலாம்.

வேலைகளை அரசாங்கம் எப்படி உருவாக்கலாம்? 

நமது நாடு பசுமை தொழில்நுட்பத்தில் தொடர்ந்து பின் தங்கி வருகிறது. தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கும் மேம்படுத்தலுக்கும் அரசாங்கம் செலவிடலாம். இதன் மூலம் உற்பத்திக்குத் தொழிற்சாலைகள் திறக்கலாம். அதனைப் பயன் படுத்தும் இடங்களில் பராமரிப்பு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படும்.

இதனைத் தவிர்த்து, சமூக சேவகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நாட்டில் நிலவி வரும் பிரச்சனைகளை நேரில் சென்று தீர்த்து வைக்கவும் ஆவணப்படுத்தும் வேலைகளுக்கும் இங்குப் பெரிய தேவை இருகின்றது. நாட்டின் சுகாதார துறைகளிலும் கல்வி துறைகளிலும் அதிகமானவர்களை வேலையில் சேர்ப்பது போன்ற புதிய சிந்தனைகளுடன் வேலையில்லாத் திண்டாட்டத்தை அணுகினால் மட்டுமே தீர்வை நோக்கி பயணம் செய்ய முடியும். இந்த அரசாங்க  உத்தரவாத வேலை திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு கொடுப்பது மட்டும் அல்லாமல், சம்பளம் குறைவாக கொடுத்து மக்களின் உழைப்பைச் சுருண்டும் முதலாளிகளுக்கும் நெருக்கடி கொடுக்கும். தனியார் நிறுவனங்களும் தரமான வேலையை நல்ல சம்பளத்துடன் உருவாக்கி கொடுப்பார்கள் வேறு வழி இல்லாமல்.

மாற்றியமைக்கப்பட்ட உலகளாவிய வருமானத் திட்டத்தைச் செயல் படுத்துமாறு பி.எஸ்.எம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. வேலை இழப்பு மக்களின் தவறு கிடையாது. இதற்காக யாரும் பசியில் வாடும் நிலைமை ஏற்படக்கூடாது. வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வேளையில், தனது தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மக்களுக்குக் கொடுக்கலாம்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை பி.எஸ்.எம். இளைஞர் அணி கண்டிக்கிறது. ‘சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காதீர்கள், குறைந்த சம்பளம் என்றாலும் இப்போதைக்கு வேலை இருந்தாலே போதும்’ என, இலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் அரசியல்வாதிகள்,  அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராடும் மக்களுக்குத் தொடர்ந்து அறிவுரை கூறுவது அரசியல் பலத்துடன் வரும் ஆணவத்தின் வெளிப்பாடு.

தொடர்ந்து நாம் அந்நிய முதலீடுகளை நம்பி வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொண்டிருந்தால், வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முடியாது. ஊக்குவிப்பு தொகை, வரி விலக்கு முதலாளிகளின் பையில் பணம் சேருவதற்கு ஏனோ இலகுவாக இருக்கலாம்; ஆனால் மக்களுக்கு நல்லதாக ஒன்றும் தெரியவில்லை.

புதிய அணுகுமுறை இல்லாவிடில் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு இல்லை.


காந்திபன் நந்தகோபாலன், பி.எஸ்.எம் இளைஞர் அணி செயலாளர்