தாமதமாகும் தடுப்பூசிகள் பிரச்சினை குறித்த பொதுமக்களின் கவலைக்கு கே.ஜே. பதிலளித்தார்

நாட்டின் கோவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் பொறுப்பாளரான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன், தடுப்பூசியை இன்னும் ஏன் நாங்கள் பெறவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டார்.

ஏனென்றால், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட கட்டம் 2 தடுப்பூசி அடுத்த வாரம் தொடங்கப்பட வேண்டும்.

“மலேசியாவில் கோவிட் -19 தடுப்பூசி பற்றியக் கவலைகள் உள்ளன. தடுப்பூசி விகிதங்கள் ஏன் மெதுவாக இருக்கிறது என்று மக்கள் கேட்கிறார்கள்.

“பிப்ரவரியில் பதிவு செய்தவர்கள், எப்போது தங்களுக்குச் சந்திப்பு கிடைக்கும் என்று கேட்டார்கள்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தடுப்பூசி வழங்கல் இன்னும் குறைவாக இருப்பதாகவும், ஜூன் முதல் நிலையான வழங்கல் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றார் கைரி.

“மலேசியா மற்றும் பிற நடுத்தர வருமான நாடுகளில், குறைந்த அளவு தடுப்பூசி வழங்கப்படுவதற்கு மிகப்பெரிய காரணம், பணக்கார நாடுகள் கோவிட் -19 தடுப்பூசி சந்தையை முற்றுகையிட்டுள்ளதால்.

“சில பணக்கார நாடுகள் தங்கள் குடிமக்களை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகமானத் தடுப்பூசிகளை வாங்கியுள்ளன. பல மருந்து நிறுவனங்கள் வெளிப்படையான காரணங்களுக்காக பணக்கார நாடுகளை விரும்புகின்றன.

“அதனால்தான், மலேசியா, கோவிட் -19 தடுப்பூசிகளைச் சமப்படுத்த, ஃபைசர், அஸ்ட்ராஜெனெகா மற்றும் மேற்கத்தியம் சாரா நாடுகளில் இருந்து சினோவாக் (சீனா) போன்ற தடுப்பூசிகளையும் சேர்க்க வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.

இருப்பினும், ஜூன் மாதத்தில் பொதுமக்களுக்கான தடுப்பூசிகள் செயல்படுத்தப்படும் என்று தான் எதிர்பார்ப்பதாகக் கைரி கூறினார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் 80 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்குப் போதுமான கையிருப்பு இருக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

“இப்போதே, தேவை வழங்கலை மீறியுள்ளது,” என்று அவர் கூறினார்.

தடுப்பூசி விநியோகிப்பாளர்களை விரைவாக விநியோகிக்க ஊக்குவிக்க உள்ளதாகவும் கைரி உறுதியளித்தார்.

“எல்லோரும் தங்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற விரும்புகிறார்கள் என்பது எனக்குத் தெரியும் என்பதால், தடுப்பூசி விநியோகத்தின் அடிப்படையில் எதிர்பார்ப்புகளை நான் அமைக்க வேண்டும்.

“அதிகமான தடுப்பூசி பொருட்கள் விரைவில் வரும் என்று நான் தொடர்ந்து கேட்டுக்கொள்கிறேன். இதற்கிடையில், தயவுசெய்து செந்தர இயங்குதல் நடைமுறைகளைக் கடைபிடியுங்கள், மேலும் வரும் மாதங்களில், மைசெஜாத்தெரா பயன்பாட்டில் அல்லது உங்கள் தடுப்பூசி நியமனம் குறித்து உங்களுக்கு அறிவிக்கும் குறுஞ்செய்தி மூலம் அறிவிப்புகளைப் பெறுவீர்கள்,” என்று அவர் சொன்னார்.