டிஏபி தேர்தலில் கிட் சியாங் மீண்டும் போட்டி, ‘தோற்கத் தயார்’

டிஏபி மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங், டிஏபி மத்தியச் செயற்குழு தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாகவும், “தோல்வியடையும்” வாய்ப்பை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

“இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் டிஏபி மத்தியச் செயற்குழு தேர்தலில் நான் போட்டியிடுவேன், மலேசியாவின் அபிலாஷைகளை அடைவதற்கு எனது வாழ்நாளின் 55 ஆண்டுகளை நான் அர்ப்பணித்தக் கட்சி தேர்தலில் தோல்வியடையத் தயாராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.

நேற்று பிற்பகல், கோலாலம்பூரில் உள்ள ஓர் ஓவியக் காட்சியகத்தில் தனது ஆதரவாளர்களிடம் பேசிய லிம், முக்கியக் கட்சி பதவிகளைத் தான் குறிவைக்கவில்லை என்று கூறினார்.

“சீனர் எதிர்ப்பு, மலாய் எதிர்ப்பு, இந்தியர் எதிர்ப்பு, கடாசான் அல்லது இபான் எதிர்ப்பு” என்ற எந்தவொரு கொள்கையையும் டிஏபி ஆதரிக்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக பன்முகத்தன்மை கொண்ட அடையாளத்தை டிஏபி தேர்ந்தெடுப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கிள்-ளுக்கு 81 வயதாகிவிட்டது’, நஜிப் கேலி

இதற்கிடையில், இதேப் பிரச்சினையில் கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், லிம்மின் வயதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவரது அறிக்கையைக் கேலி செய்தார்.

“கிட்டத்தட்ட 81 வயதாகிவிட்டது, (லிம்) கிட் சியாங் இன்னும் போட்டியிட விரும்புகிறாரா?

“பிரதமர் பதவியை அன்வாரிடம் மகாதீர் ஒப்படைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று ‘அங்கிள்’ ஒருசமயம் மக்களுக்கு வாக்குறுதி அளித்தாரே?” இன்று ஒரு முகநூல் இடுகையில் நஜிப் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, கடந்த 2019, மே 10-ம் தேதி, டாக்டர் மகாதிர் மொஹமட், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமிடம் பிரதமர் பதவியை ஒப்படைக்காவிட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக லிம் கூறியிருந்தார்.

தனக்கு பந்தயம் கட்ட பிடிக்கவில்லை, ஆனால் இந்த முறை அரசியல் அரங்கிலிருந்து விலகத் தயாராக இருப்பதாகவும், 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் லிம் கூறினார்.